
திருப்புகழ்க் கதைகள் 135
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வஞ்சம் கொண்டும் – திருச்செந்தூர்
இராவணன் வஞ்சகன்
அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூற்றி ஏழாவது திருப்புகழ் ‘வஞ்சம் கொண்டும்’எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். “திருமாலின் மருகரே, செந்திலாண்டவரே, அடியேன் உமது அடைக்கலம். முத்தி வீட்டைத் தந்து அருள் புரிவீர்.” என அருணகிரிநாதர் முருகப் பெருமானை இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமென …… வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாக
வெதிர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியு …… மெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ
குண்டுங்குன் றுங்கர டார்மர …… மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர் …… வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசை …… நிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் …… மருகோனே
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
தந்தென்றின் பந்தரு வீடது …… தருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
மெங்கெங்கும் பொங்கம காபுநி
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் …… பெருமாளே.
இப்பாடலின் பொருளாவது – வஞ்சனையும் திடமும் உடைய இராவணன், பந்துபோல் விரைந்து செல்லும் வலிய குதிரைகள், தேர், யானை, மேகம் எழுந்தது போன்ற பல சேனைகளுடன் வந்து கணைகளைச் சொரிந்து கொண்டு எதிர்த்து, தனது ஆற்றலைப் பற்றியும் வீண் பேச்சும் இகழுரையும் பேசி, அவன் எதிரே சேனைகள் மிகுந்து நிற்க, நாள் முழுவதும் போர் புரியும் போது, குரங்குகள் மிகுந்து நெருப்பைப் போல் கொதித்து எழுந்து கல் குண்டுகளையும், குன்றுகளையும், கரடு முரடான மரங்களையும் பேர்த்து எறிந்து, மிகுந்த மலைகளினால் நொறுங்கிய உடம்பு தலை கை இவைகளுடன் ஒளி விடுகின்ற உடற்கீல்களையும் சிதற வைத்து, அந்த அரக்கருடைய கூட்டம் முழுவதும், இயமனுடைய தென்திசையை நாடி விழவும், யமதூதர்கள் அங்குஞ்சென்று தள்ளு தள்ளு என்று கூறும்படி, மாமிசம் மூளை இவைகளை சில பேய்கள் தின்றும் பார்த்தும் டிண்டிண்டென்று கூத்தாட, உயர்ந்த பாணத்தை விடுத்துக் கொன்ற ஸ்ரீராமருடைய திருமுருகரே. சங்குகளும், தாமரைகளும், மீன்களும் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள, பெரிய தூய்மையான செந்தில்மா நகரின் கண் வாழ்ந்து உயர்ந்துள்ள பெருமிதம் உடையவரே. அடியேன் உமக்கே அடைக்கலம்; அடைக்கலம்; சிறியேனுடைய அறிவு மிகவும் அற்பமானது; ஆதலால் அருள் தந்து இன்ப மயமான முத்தி நலத்தை என்று எனக்கு அருளுவீரோ? – என்பதாகும்.
இராவணின் வஞ்சகத் தன்மை இராமாயணத்தில் பல இடங்களில் வெளிப்படுகிறது. தனது அண்ணனாகிய குபேரனை அவன் ஆட்சி செய்து வந்த இலங்கையிலிருந்து விரட்டிவிட்டு, அவனது புஷ்பக விமானத்தையும் கவர்ந்துகொள்கிறான்.
சீதையைக் கவர மாரீசனை மாயமானாக அனுப்புகிறான். மாரீசன் இராவணனுக்கு புத்திமதிகள் சொல்கிறான். இருப்பினும் இராவணன் தன்னைக் கொன்றுவிடுவான் என எண்ணி மாரீசன் மாயமானாகச் செல்ல சம்மதிக்கிறான். போரின் நடுவே சீதாப்பிராட்டியாரை அடைய மாயா ஜனகனை உருவாக்கி கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான்.
இப்படி இராவணன் செய்த வஞ்சகங்கள் பலப்பல. இருப்பினும் தன் தங்கை என்றும் பாராது சூர்ப்பனகையின் கணவனைக் கொன்ற வஞ்சகம்தான் அவனது உயிரை மாய்த்தது. அந்தச் சூர்ப்பனகையின் கதையை நாளக் காணலாம்.