
கதம்பக் கூட்டு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 100 கிராம்
கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று, பீன்ஸ் – 10
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (தோலுரித்தது),
அவரைக்காய் – 5
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
கேரட்டைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். பீன்ஸையும் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். அவரைக்காயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பைக் குழைவாக வேகவைக்கவும்.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரைக்காய், பச்சைப் பட்டாணியை ஒன்றாக குக்கரில் சேர்க்கவும். அவற்றுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேகவைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வேகவைத்த காய் கலவையுடன் சேர்த்து, வேகவிட்ட பாசிப்பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, தயாரான கூட்டில் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: காய்கறிகள் கொஞ்சம் கொஞ்சம் மிகுந்து இருக்கும்போது இந்தக் கூட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.