
கேப்சிகம் சப்ஜி
தேவையானவை:
குடமிளகாய் – 2,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 2,
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல், மல்லி (தனியா), சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
முந்திரி – 4, பட்டை – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளி, குடமிளகாயை பொடியாக நறுக்கவும். வெறும் வாணலியில் தனியா, சீரகம், பட்டை, முந்திரி சேர்த்து வறுக்கவும். பிறகு, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்து வைத்த விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.