ஐ.பி.எல் 2021 – 03.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முதல் ஆட்டம் – பெங்களூர் vs பஞ்சாப்
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கோலி, தேவதத் படிக்கல் இருவரும் நன்றாக விளையாடினார்கள். க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி நாலு சிகஸ், மூன்று ஃபோர்களுடன் 33 பந்தில் 57 ரன் எடுத்தார்.
டிவில்லியர்ஸும் 18 பந்தில் 23 ரன் எடுத்தார். இருந்தாலும் பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தார்கள். கடைசி ஓவரில் ஷமி மூன்று விக்கட்டுகளை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் (57), கே.எல். ராகுல் (39), நன்றாக ஆடினார்கள். ஆனால் மேட்சை சரியாக முடிக்கத் தெரியாத பிற வீரர்களால் பஞ்சாப் அணி இருபது ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து தோல்வியடைய வேண்டியதாயிற்று.
இரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ்
பூவா தலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. போன ஆட்டம் வரை அதிரடியாக ஆடிய விருத்திமான் சாஹா இன்று ரன் எடுக்காமல் இரண்டாவது பந்தில் அவுட்டானார்.
கேன் வில்லியம்ஸ் (26), பிரியம் கர்க் (21), அப்டுல் சமது (25) ஆகிய வீரர்களைத் தவிர பிற வீரர்கள் கொல்கொத்தா பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர். எனவே அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 115 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த கொல்கொத்தா அணி தடுமாற்றத்தொடு விளையாடியது. ஷுப்மன் கில் (57), நிதிஷ் ராணா (25), தினேஷ் கார்த்திக் (18) எடுத்தனர். குறைவான் இலக்கை இறுதியில் 19.4 ஓவரில் 119 ரன் எடுத்ததன் மூலம் கொல்கொத்தா வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்று ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன். ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஏறத்தாழ தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நான்காம் இடம் யாருக்கு என்பதை இனி வரும் ஆட்டங்கள் முடிவு செய்யும்.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இன்னமும் ஒரு மேட்சில் ஜெயித்தால் அரையிறுதிக்குச் செல்லலாம். பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த இரண்டு பொட்டிகளையும் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையலாம்.