
துகடோஜி மஹாராஜின் கர்மபூமியில் மௌன அஞ்சலி இன்று
- ஜெயஸ்ரீ எம். சாரி
மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற துறவியான ராஷ்டிரசந்த் என அழைக்கப்படும் துகடோஜி மஹாராஜாவின் 54-வது நினைவு தினம் ( திதியின் அடிப்படையில்) இன்று அனுசரிக்கப்படுகிறது.
துகடோஜி மஹாராஜின் கர்மபூமியாக கருதப்படும் மஹாராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ள குருகுஞ்ச் மோஜ்ரி ( Gurukunj Mozri) என்னும் இடத்தில் அக்டோபர் 8-ஆம் தேதியில் இருந்து ஒரு வார த்திற்கு பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. குருசேவா மண்டல் மற்றும் பல அமைப்புகள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை மாநில அளவில் நடத்திக் கொண்டிருக்கின்றன.

துகடோஜி மஹாராஜ் தன் பஜனை பாடல்களின் மூலம் தேசபக்தி, சமுதாய மேம்பாட்டிற்கான வழிகள், உடல் ஆரோக்கியம், குடும்ப நலம், பெண்கள் மேம்பாடு என பல விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மஹாத்மா காந்தியடிகள், ஆச்சார்ய வினோபா பாவே போன்ற தலைவர்களுடன் பணியாற்றியும் உள்ளார். துகடோஜி மஹாராஜ் எழுதிய மராட்டி நூலான ‘கிராம் கீதா’ இன்றும் சமுதாயத்திற்கு வழிகாட்டும் அற்புத நூலாக கருதப்படுகிறது.
ஆங்கில நாட்காட்டியின் படி துகடோஜி மஹாராஜின் நினைவு தினம் அக்டோபர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்து. நாட்காட்டியின் படி அஷ்வின மாத கிருஷ்ண பக்ஷ பஞ்சமி திதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் இன்று அவருடைய திதி நாள் அனுசரிக்கப்படுகிறது.

” சப்கேலியே குலா ஹை, மந்திர் யஹ் ஹமாரா” (அனைவருக்குமாக திறந்து உள்ளது, இது எங்கள் கோயில், வித்தியாசங்களை மறந்தது, இது எங்கள் கோயில்) – என்று பாடிய துகடோஜி மஹாராஜ் அவர்களுக்கு இன்று குருகுஞ்ச் மோஜ்ரியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். பல வெளிநாட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றனர். இன்று மாலை சரியாக 4.58 மணிக்கு ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் அவர்களுக்கு 2-நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார்கள். அந்த சமயத்தில் அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
துகடோஜி மஹாராஜ் கூறியுள்ள அற்புதமான விஷயங்களை அனைவரும் பின்பற்றி சமுதாய மேம்பாடிற்காக நம்மால் முடிந்த காரியங்களை செய்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.
வாழ்க துகடோஜி மஹாராஜ்!! வளர்க அவர் புகழ்!!