
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்
பகுதி 3 – 1983 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
1983ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகளும் இங்கிலாந்தில்தான் நடந்தன. இதன் பெயரும் “ப்ருடென்ஷியல் கோப்பை 83” என்பதாகும்.
1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடந்தன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு நாடுகளும் இந்தப் போட்டியை இணைந்து நடத்தின.
எட்டு அணிகள் போட்டியில் கலந்துகொண்டன. ஏழு அங்கீகாரம் பெற்ற டெஸ்ட் அணிகள் – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் – ஆகிய அணிகளோடு அச்சமயத்தில் புதிதாக டெஸ்ட் அணியாகச் சேர்ந்த இலங்கை அணி, இவற்றோடு ஜிம்பாபே அணியோடு எட்டு அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. குரூப் A பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடின. குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, ஜிம்பாபே அணிகள் விளையாடின. இந்த ஆண்டு ஒரு புதிய மாற்றமாக ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளோடு இரு முறை விளையாடின.
குரூப் A பிரிவில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் முதல் இரு இடங்களைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை வென்றது.
இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் பூவாதலையா வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (57 பந்துகளில் 38) மற்றும் மொஹிந்தர் அமர்நாத் (80 பந்துகளில் 26) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் விளையாடினர். ஏனெனில் ராபர்ட்ஸ், மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை தங்களது பந்து வீச்சால் திணறடித்தனர்.
இந்திய அணியின் இறுதி ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடியதால் இந்தியா 183 ரன் (ஆல் அவுட், 54.4 ஓவர்கள்) எடுத்தது. இந்திய பந்துவீச்சு வானிலை மற்றும் பிட்ச் சூழலை சரியாக பயன்படுத்தி, மேற்கிந்திய தீவுகளை 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முடிவாகும். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதுவரை வெற்றி பெற்ற மிகக் குறைந்த ஸ்கோராக இது உள்ளது.
அமர்நாத், மதன் லால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக விவ் ரிச்சர்ட்ஸ் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அமர்நாத் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருந்தார், தனது ஏழு ஓவர்களில் 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் அவரது ஆல்ரவுண்ட் செயல்பாட்டிற்காக மீண்டும் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்தின் டேவிட் கோவர் 384 ரன் கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரரானார். இந்திய அணியின் கபில்தேவ் 303 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தார். இந்தியாவின் ரோஜர் பின்னி 18 விக்கட்டுகள் எடுத்து பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். மதன்லால் 17 விக்கட்டுகள் எடுத்தார்.
குரூப் ஆட்டங்களில் இந்திய அணியின் திறமை வெளிப்பட்டது. முதல் போட்டியிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அதே அணியை இரண்டாவது முறை சந்தித்தபோது 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
ஆஸ்திரேலிய அணியிடமும் ஒரு ஆட்டத்தில் தோற்று, ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஜிம்பாபே அணியோடு விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றது. அதில் ஒரு ஆட்டம் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது.
என்ன அது? நாளை பார்க்கலாம்