spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப் படுவது ஏன்?

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப் படுவது ஏன்?

- Advertisement -
gangaikondachozhapuram annabhishekam
gangaikondachozhapuram annabhishekam

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?


கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
“அன்னம் பரப்பிரம்மம்” என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஐப்பசி மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.


அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:


அம்பிகை பாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.

அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது.

காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப் படுவதால் தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.


ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.

நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.

பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.


சோற்றுக்குள் சொக்கன்


‘சோறுதான் சொக்கநாதர்’ ‘சோறுகண்ட இடம் சொர்க்கம்’ என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் அன்னத்தைப் பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாக அன்னத்தை நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள்!

ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிட்சாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும்.

மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe