spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி நின்ற ஏகபாதமூர்த்தி!

ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி நின்ற ஏகபாதமூர்த்தி!

- Advertisement -
eka patha murthy
  • கே.ஜி. ராமலிங்கம்

ஏகபாதமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றான ஒரு வடிவமாகும். இம்மூர்த்தியை ஏகபாதர் என்று அழைப்பர்.

ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி ஒரே உருவத்தோடு காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது.

சிவலிங்கத்தில் இருந்து தோன்றியவை 64 சிவமூர்த்தங்கள் (வடிவங்கள்). இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என ஆகமங்கள் கூறுகின்றன. இம்மூர்த்தங்களைச் சுருக்கி, சோமாஸ்கந்தர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், உமா மகேஸ்வரர், வீரபத்ரர், பிட்சாடனர் உள்ளிட்ட இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.

திருவுருவக் காரணம் ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும்.

அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஐக்கியமாகிவிடுவார்கள்.

ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன், முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். சிவபெருமான் ஒரு காலில் நின்ற கோலத்தில் இருக்கவும்,அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர். பிரம்மாவும்,விஷ்ணுவும் அஞ்சலி முத்திரை காட்டுகின்றனர். சிவபெருமானுக்கு பதில் ஆக்ரோஷ பைரவர் இருப்பின் அந்த வடிவத்தை ஏகபாத பைரவர் என அழைக்கின்றனர். சிவபெருமானின் ஒற்றைக்கால், பிரபஞ்சத்தை தாங்கி நிற்கும் தூணாக கருதப்படுகிறது.வலது கை அபாய முத்திரை காட்டியவண்ணம் இருக்க, இடது கை வரத கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.பின்கைகளில் மானும், ஆயுதமும் ஏந்தி நிற்கிறார்.

ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையும் இடமாகவும் ஏகபாத மூர்த்தி இருக்கிறார்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஏகநாதரை வழிபடலாம்.

“ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி

தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.” என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம்.

ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்), குரு

ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி! அகண்ட ஜோதியாய் புலன்களுக்கு எட்டாதவராய் அனைத்து உயிர்களும் ஒடுங்கக்கூடிய இடமாக இருப்பவர். கருத்துக்களுக்கு எட்டாதவர். மாறுதல் இல்லாதவர். கருணையின் பிறப்பிடமாய் திகழ்பவர். எல்லா ஆன்மாக்களும் ஆணவ மலத்தில் அழுந்திருப்பதனால் ஆன்மாவின் அற்புதத்தை அறியும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவற்றைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும், மறைத்தும், அருள் புரிந்தும் செய்து உலக உயிர்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்து இயங்க வைக்கின்றார்.

சதா உறங்குபவனுக்கு உலகத்தைப் பற்றி ஏதும் தெரியாது. உலகத்து மக்களின் மீது வைத்த கருணையால் ஆன்மாக்களை விழிப்படையச் செய்கின்றார்.

பேரூழிக் காலத்தில் அனைத்து உயிரினங்களும் பெருமானிடம் ஒடுங்க அவர் மட்டும் அழியாமல் இருப்பார். தனித்து நிற்கக் கூடிய வல்லமை பெற்றவர். பின் வலக்கரத்தில் சூலம், இடக்கரத்தில் மழு, முன்வலக்கையில் காக்கும் குறிப்பு, இடக்கை அருளும் குறிப்பும் கொண்டு புலித்தோல் உடுத்தி, சடையில் சந்திரன், கங்கை அணிந்து இருப்பார்.

“வெய்யதிரி சூலம் விழைவோ டினிதேந்தும்

கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றும்

செய்யமலர் வென்றவொரு நாளுமுறு தேவை

யொய்யென அமைத்தவர்கள் முத்தியுறுவாரே”. –

என்கிறது இலிங்க புராணம்

சர்வசம்ஹாரம் நிகழும் மகாப் பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் சரணடைந்து, தன் திருவடியில் இலயம் பெற வேண்டி, ஒற்றைக்கால் உடையவராகத் திருவுளம் கொண்டு சிவபெருமான் விளங்கும் கோலமே ஏகபாதமூர்த்தியாகும்.

இவர் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு விளங்குவார். இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் விளங்கும் ஜடாமகுடமும் திகழ இவர் விளங்குவார்.

விசுவகர்ம சிற்பசாஸ்திரத்தில் ஏகபாத மூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்கரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன. ஏகபாதமூர்த்தியை ஏகாதசருத்திரருள் ஒருவராகக் கூறுவாரும் உளர்.

மனம், ஞான நிஷ்டையை விரும்ப அருள்வார். வேதங்கள் நான்கையும் புரிந்துகொள்ளும் அறிவினை அளிப்பார். அனைத்து சம்ஹார காலத்திலும் அனைவரும் லயமடையவும் இறக்கவும், எல்லா உலகங்களும் அவர் திருவடியில் கீழ் நிற்பதாலும், ஏகபாத மூர்த்தி ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

ஏகபாதமூர்த்தி சிலைகள் தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன

ஏகநாதர் மூர்த்தியின் சிற்பம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள நந்தி சிற்பத்தை சுற்றி உள்ள தூண்களில் ‌தூண் சிற்பமாக உள்ளது.

திருவொற்றியூரில் வடிவாம்பாள் சந்நிதி பிரகாரத்திலும், திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் இருபுறம் விளங்க நடுவில் சிவபிரான் விளங்கும் ஏகபாத திருமூர்த்தி கோலம் உள்ளது. தப்புளாம் புலியூரிலும் (திருவாரூர்) உள்ளது.

உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது.

இங்குள்ள ஏகபாதமூர்த்தி சிற்பத்தில் நின்ற நிலையில் இருக்கும் சிவன், முன்னிருகைகளில் அபய, வரத முத்திரைகளுடனும், பின்னிருகைகளில் மான், மழு ஏந்தியபடி காட்சி தருகிறார். பிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய ஹஸ்த முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

மரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

உத்தரகோசமங்கையில் உள்ளதை போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும், நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம், உத்தர

கோசமங்கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம், சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

ஏகபாதமூர்த்தியை வழிபடுவோர் அனைத்துப் பேறுகளும் நலன்களும் பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe