சந்நியாஸிகள் அனைவரும் அனுஷ்டிக்கும் பூஜைதான் வியாஸ பூஜை! சந்யாசிகள் அனைவரும் அனுஷ்டிக்கும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம்! எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத ஆசார்யர்கள் அனைவருமே இந்த இரண்டையும் அனுஷ்டிக்கிறார்கள்.
வியாஸ பகவான், வேதத்தை நான்காகப் பிரித்து, தொகுத்தளித்து உலகத்துக்கு பேருதவி செய்திருக்கிறார். வேதக் கருத்துகளை தெளிவாக, சுலபமாக, விரிவாக விளக்குவதற்காகவே, சநாதன தர்மத்துக்குப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய 18 புராணங்களைப் படைத்தார். மகாபாரதம் என்ற அரும்பெரும் இதிஹாஸத்தைப் படைத்தார்.
ஆத்ம தத்துவத்தை போதிக்கும் உபநிஷத் பாகங்களின் தாத்பர்யத்தை யுக்திகளால் விளக்கி நிறுவச் செய்த கிரந்தமே, ப்ரம்ஹ ஸ§த்ரம் . இந்த சூத்ரங்கள்தான் வேதாந்த ஸித்தாந்தத்தின் கண்ணாடியாகத் திகழ்கிறது. ப்ரம்ஹஸ¨த்ரங்களுக்கு உத்திர மீமாம்ஸா சாஸ்திரம் என்றும் பெயருண்டு. இதற்கு மூன்று மதாசார்யர்களும் வியாக்கியானம் செய்துள்ளார்கள். எனவே த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைதமாகிய மும்மதஸ்தர்களுமே வியாஸ பகவானை பூஜிக்கின்றார்கள்..
ஆத்ம தத்துவத்தை சூத்ரங்கள் வாயிலாக விளக்கி அருளிய வியாஸரை ஆத்ம ஞானத்தில் ஈடுபட்ட ஸந்நியாஸிகள் வியாஸ பௌர்ணமி அன்று ஸ்ரீவியாஸ பகவானை பூஜித்து வருகிறார்கள். அன்று தங்களது மத குரு பரம்பரையில் தோன்றிய ரிஷிகளை பூஜிக்கிறார்கள்.
எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் சந்நியாஸிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பௌர்ணமி தொடங்கி கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரத காலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர்.
மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதலின் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு ஹிம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பது என்பது இதன் தாத்பரியம்.
அஹிம்ஸையை சிரமேற்கொண்ட யதிகள் எனவே தான் இந்தக் காலத்தில் பாத யாத்திரை எதுவும் செய்யாமல், ஓர் இடத்திலேயே தங்குகிறார்கள்.
பக்தர்களும், சிஷ்யர்களும், இந்த விஷயத்தை உணர்ந்து யதிகளை தாங்கள் மழைக்காலத்தில் இங்கேயே தங்கவேண்டும்; தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்கிறோம் என்று பிரார்த்தித்துக் கொள்வார்கள். யதிகளும் அவர்கள் பிரார்த்தனையை ஏற்று, அப்படியே தங்குவார்கள்.
இந்த நேரத்தில், விசேஷமான ஆகார நியமங்களுடன் 2 மாத காலம் தங்குவார்கள். இந்த விரதம் 4 மாதங்கள் செய்ய வேண்டியது. ஆனால் ஒரு மாதத்தை ஒரு பக்ஷமாக வைத்துக் கணக்கிட்டு, நான்கு பக்ஷங்கள் அல்லது இரண்டு மாதங்கள் அனுஷ்டிப்பது வழக்கத்தில் உள்ளது. இந்தக் காலங்களில் வேதாந்த கிரந்தங்களை யதிகள் விசேஷமாக அத்யாபனம் செய்விப்பார்கள்.
இதையே ‘குரு பௌர்ணமி’ என்பார்கள். எல்லோருக்குமே இந்த பௌர்ணமி உயர்ந்ததுதான்! அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்!
தபோவனத்தில் வியாசபூஜை
ஒவ்வோர் ஆண்டும் ஆஷாட பௌர்ணமி \ வியாச பௌர்ணமி நாளில் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கப்பட்டு, வியாச பூஜை நடத்துவது வழக்கம். பராசர முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேதவியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பது.
இந்து மதத்திற்கு ஆணிவேராகப் போற்றப் படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் இதில் முக்கியமானவர் ஆகிறார். பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது பொதுவான வழக்கம்.
இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனத் பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது. இது மடங்களுக்கும் சம்ப்ரதாயங்களுக்கும் ஏற்ப மாறுபடும். இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கம்.
கணபதி, «க்ஷத்ரபாலகர், துர்க்கை, ஸரஸ்வதி, சுகர், நாரதர் ஆகியோருடன், அஷ்ட திக்பாலர்களாக, ஈசானன், இந்திரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, ஸோமன் ஆகியோரை ஆவாஹனம் செய்வர். வியாசர் அவரது சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதி சங்கரர் அவரது சீடர்களான பத்ம பாதர், ஸ§ரேச்வர். ஹஸ்தா மலகர், தோடகர் ஆகி யோரும், மௌனகுரு சீடர் களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் ஆகியோரும், நாரதர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய குருமார்களும், சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப்படுகின்றன.
பிரம்மா, ருத்ரன், லிங்கோத் பவர், குரு பஞ்சகத்தில், குரு, பரம குரு, பரமாத்ம குரு, பரமேஷ்டி குரு, சம்ப்ரதாய போத குரு ஆகியோரும், கிருஷ்ண பஞ்சகத்தில், ஸ்ரீகிருஷ்ணன், வாஸ§தேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருமாக பூஜிக்கப் படுவது தபோவன நடைமுறை.
அட்சதையைப் பரப்பி பழங்கள், வெற்றிலை, எலுமிச்சம் பழங்கள் கொண்டு பூஜிக்கப் படுகிறது.