January 17, 2025, 6:22 AM
24 C
Chennai

சின்னஞ் சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே!

#image_title

— ராமலிங்கம் கிருஷ்ணா —

உனைக் காணவரும் அடியார் எவராயினும் கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே… ஆடாது அசங்காது வா கண்ணா…. என்று ஊத்துக்காடு வேங்கடகவி கண்ணனை ஸ்மரணம் செய்து கொண்டு இருக்கிறார், ஆம்… இன்று வரை அது தொடர்கிறது.

காலங்கள் உருண்டோடின. கண்ணனை பார்க்காமல் அன்னம் ஆகாரம் உண்ண மாட்டேன் என்றும் சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே அவர் முற்றுலுமாக தவிர்த்து வந்தார். இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. தினமும் பிரதக்ஷ்ணம் செய்யக் கூட அவரால் முடியவில்லை. தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதக்ஷ்ணம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை. தன் பிராணனன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார்.

இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் ‘அலைபாயுதே கண்ணா!’ என்று பாட ஆரம்பித்து விட்டார். அந்த பாடல் நிறைவுறும் தருவாய் நெருங்கிவிட்டது. ஆனாலும் கண்ணன் காணமுடியவில்லை.

தன்னை மறந்து தனது தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டு இருந்த வேங்கடகவிக்கு திடீரென்று ஜவ்வாது மணமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்து சிலிர்ப்பூட்டும் அந்த நேரத்தில் அவர் கண்பார்வை முற்றிலுமாக போய்விடவே அந்த சுகந்த மணத்தைத் தான் உணர முடிந்ததே தவிர அவரால் கண்ணனைக் கண்ணாரக் காண முடியவில்லை.

ஆனாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. முழு பலத்தையும் கூட்டி அந்த பாடலைக் கூட பாட முடியவில்லை, தொடையில் தாளம் போட முடியாமல் கை இடறியது. எதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்ற, அப்பா யாரது? கண்ணனை காண வேண்டுமென்ற வேகத்தில் நான் பாடிக்கொண்டு இருக்கின்றேன், அப்பா யாரது?

அந்தக் குழந்தையிடமிருந்து பதிலே இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார். உடனே அந்தக் குழந்தை முகமலர்ந்து பேசத்தொடங்கியது.

வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அது நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றதும். கண்ணா! என்று எழுந்திருக்கவும் சேவிக்கவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லையே, இப்பொழுது என் தேகபலமும் மனபலமும் சோர்ந்து போன பிறகு வந்திருக்கிறாயே கண்ணா! என்னால் உன்னை கையெடுத்துக் கூட கும்பிட முடியவில்லையே என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது.

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என்னைக் காணும் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய். அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் அவ்வளவு சீக்கிரம் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு கொண்டு சென்றார்.

எப்படி குசேலருக்கு நடந்ததை போலவே பன்மடங்கு உபசாரம் செய்து, எப்பொழுதும் இவன் என் பக்தன் என் பக்தன் என்று ருக்மணியிடம் கூறிக் கொண்டே இருந்தார் கிருஷ்ணர்.

பக்தரே…. உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கண்ணன் கேட்க, “மறுபடியும் நீ இந்த ஊத்துக்காட்டில் நான் பாட வேண்டும் அதற்கேற்ப நீ ஆடவேண்டும் கண்ணா” என்றதும், அப்படியே

இருவரும் ஊத்துக்காட்டிற்கு வந்ததும், வேங்கட கவியே, எந்த ரூபத்தில் நான் உமக்கு காட்சி தர வேண்டும் எனக் கேட்க வேங்கடகவி, கண்ணா உன்னை காளிங்க நர்த்தனாக நடனம் செய்யும் கோலத்தில் காணவேண்டும் எனவே அந்த ரூபத்தில் வா கண்ணா என்றார்.

வேங்கடகவி சிரேஷ்டரே, நான் உமது விருப்பப்படி அவ்வாறாகவே வந்து உமது பாடலுக்கு ஆடுகிறேன், ஆனால் எப்போது உமது வாயால் எனது நர்த்தனத்திற்கு ஏற்றவாறு பாட முடியாது போகுமோ, அந்த ஷண நேரத்தில் இதே இடத்தில் மீண்டும் நான் விக்கிரகமாக மாறிவிடுவேன் என்று கூறினார்.

வேங்கடகவி அப்பொழுது ‘தாம்தீம் தரநதாம்…………’ என்று தொடங்கும் பல்லவியை பாடினார். பாடல் முடியும் வரை கிருஷ்ணனும் நர்த்தனம் செய்ய, அந்த நர்த்தனத்திற்கு ஏற்றாற் போல் வேங்கடகவியும் பாடினார். இருப்பினும், ஒரு சில நர்த்தன பாவனைகளுக்கு ஏற்ற மாதிரி வேங்கடகவியால் பாட முடியாமல் குரலில் தடுமாற்றம் வெளிப்படவே, அந்த கண்ணன் சொன்னது போலவே உடனே அதே இடத்தில் மீண்டும் விக்ரகமாக மாறினார்.

வேங்கடகவியும் தனது தோல்வியை ஒப்பு கொண்டார், அவரது அவதார நோக்கத்தை அறிந்திருந்த பரந்தாமன் அவரைப் பார்த்து நீர் இனி நாரதராக சஞ்சரிப்பீராக என்று அனுக்கிரகம் செய்தார். பதிலுக்கு வேங்கடசுப்பையர், கண்ணனைப் நோக்கி, சுவாமி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்க நான் என் பக்தர்களாகிய நந்தினி பட்டிக்கு கொடுத்த வரத்தில் கலியுகம் முழுவதும் இங்கயே இருக்க போகிறேன் என்றார்.

அதற்கு நாரதர் வைகுண்ட வாசனே வைகுண்டத்தில் இல்லாத போது பக்தனாகிய எனக்கு வைகுண்டத்தில் என்ன வேலை என்று கேட்டு கலியுகம் முழுவதும் நானும் உங்களுடன் இருந்து நான் தற்போது செய்து கொண்டிருக்கும் கைங்கரியத்தையே தொடர்ந்து செய்து வருவதோடு மற்றுமல்லாமல் கலியுகத்தில் யாரும் தேடி கிடைக்காத பக்தியுடன் யார் வந்து உங்களிடம் பிராத்திக்க வருகிறாரோ அவர்களின் குறைகளை கேட்டு உங்களிடம் கூறும் பெறும் பாக்கியத்தை தாருங்கள் என கூறினார்.

ALSO READ:  பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயசந்திரன் காலமானார்!

இனி நான் தேவலோகத்துக்கோ வைகுண்டதுக்கோ சென்றால் உம்மோடு தான் செல்வேன் என்று கூற அவ்வாறாக ஆகட்டும் என்று கிருஷ்ணன் அனுகிரகம் செய்தார்.

இன்னும் கூட இரவு நேரங்களில் கண்ணனின் மீது பாடல்களை பாடிகொண்டிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்றார் போல் கோபிகா ஸ்திரிகளுடன் கிருஷ்ணன் நர்த்தனம் செய்து கொண்டு இருக்கிறார். கிருஷ்ணனின் சலங்கை (கொலுசு) சத்தம் இன்னும் இரவு நேரங்களில் கேட்டு கொண்டிருக்கிறது. அதை இந்த ஊரில் பலரும் கேட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

நாரதர் இங்கயே இருப்பதை கண்டு அத்தனை தேவர்களும் நாங்களும் கலியுகம் முழுவதும் நாங்களும் இங்கயே இருப்பதாக இறங்கி வந்தனர். கிருஷ்ணனும் இங்கயே இருக்கும் படி அனுகிரகித்தார். இத்திருக்கோவிலின் பிரகாரத்தை சுற்றி இன்னும் அத்தனை தேவர்களும் காவல் காத்து கொண்டிருகின்றனர். கிபி 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ வேங்கட கவியின் அதீத பக்தியின் காரணமாக, கிராமத்தில் இறைவனின் நடனத்தைக் கண்ட அவர் நாரத முனிவரின் அவதாரம் தான் என்றால் அது தான் உண்மை. .

“இன்று நான் பிறந்தேன்” என்று வெங்கடகவி ஒரு பாடல் பாடியுள்ளார். கண்ணனால் அவர் பெருமை பெற்றதும் அவரால் ஊத்துக்காடு பெருமை பெற்றதும் உலகறிந்த செய்தியாகும்.

நாள் தோறும் கோவில் அர்ச்சகர், வெங்கடகவி துளசி மாடத்தருகே அமர்ந்து கண்ணனிடம் பாடங்கேட்டு வந்ததை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்து நிற்க நேரிட்டது. இறையருள் பெற்று வேங்கடகவி பாடிய பாடல்களைப் பக்தியோடு கேட்டு இன்புற்று மகிழ்கிறார் அர்ச்சகர்.

தன் சுகனுபாவங்களைப் பிறர்க்கும் கூறி அவர்களும் அந்த பேரின்பம் பெற உதவி செய்கிறார். இவரால், வேங்கடகவியின் செயல்களைக் கண்டு வியந்து பாராட்ட இன்னும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்புறும் நிலையும் ஏற்படுகின்றது.

ஊத்துக்காடு கிராமத்தின் முக்கிய தெய்வம் வேத நாராயணர் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். கோயில் குளத்தில் இருந்து காளிங்க நர்த்தனப் பெருமாளின் பஞ்சலோக சிலை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கோயில் பிரபலமடைந்தது. காமதேனுவின் குழந்தைகளான நந்தினி மற்றும் பட்டி ஆகிய தெய்வீக பசுக்களுக்கு முன்னால் கிருஷ்ணர் நிகழ்த்திய காளிங்க நர்த்தனத்தை நாரதமுனிவர் நேரில் பார்த்ததாகவும், இந்த கோவில் காளிங்கன் விக்ரகத்தின் அழகு சிரத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது கையில் அபயஹஸ்தத்துடன் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருக்கும் கண்ணனைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மொழு மொழுவென்ற கால்களும் பளபளவென்ற கன்னங்களும், கையை நீட்டியிருக்கும் லாவகமும், தூக்கிக் கட்டிய கொண்டையும், சுருண்டு சுருண்டு நெற்றி வரைத் தொங்கும் மோதிரச் சுருட்டையான கேசமும், பாதங்களின் பிஞ்சு விரல்களும் மாயப் புன்னகையுமான நர்த்தனமாடுகிற கண்ணனின் வடிவத்தைப் பார்த்தவுடன் இது சிற்பியால் செய்யப்படாத விக்கிரகம் போலவே தெரிகிறது

ALSO READ:  பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்

இறைவனின் இடது காலுக்கும் பாம்பின் தலைக்கும் இடையில் ஒரு மெல்லிய தாளைச் செருகக்கூடிய அளவுக்கு நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இறைவனின் உடல் எடை பாம்பின் வாலைப்பிடித்து இருக்கும் இடது கையில் இருப்பது தான் தனியழகு. கிருஷ்ணரின் வலது காலில் காளிங்கரின் வாலினால் அழுத்தி பலத்த அடிபட்ட தழும்புகளையும் காணலாம்.

இக்கோயில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது . கும்பகோணத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் மெயின் ரோட்டில் இருந்து 1 கி.மீ. தூரத்திலும் கும்பகோணம்-ஆவூர்- திருக்கருகாவூர் சாலையில் கோயிலுக்கு செல்லும் திசைகள் தெளிவாக உள்ளன. கோயிலின் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நாளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இத்தலம், “ராகு தோஷம்” மற்றும் “சர்ப்ப தோஷம்” ஆகியவற்றுக்கான சிறந்த “பரிகார ஸ்தலம்” என்றும் திருமணத்தடைகள் போன்றவைகள் தீர்க்கப்படுவதற்கும், சந்ததிகள் பிறப்பதற்கும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து கண்ணனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திர நந்நாளில் கலந்து இறைவனை வேண்டிக் கொண்டால் கைமேல் பலனை அடையலாம்.

பின் குறிப்பு : வேங்கடகவி 65 ஆண்டு காலம் வாழ்ந்தார். இசை மூவருக்கும் முற்பட்ட வேங்கடகவியின் பாடல்கள் அமரத் தன்மை கொண்டவை. கண்ணன் ஆடலை நேரில் தரிசித்த கவியின் வாக்கில் வெளிப்படும் பாடல்கள் கண்ணன் ஆடும் நடனத்தின் தாளத்திற்கு ஏற்ப அமைபவை. “பால் வடியும் முகம்” எனத் தொடங்கும் பாடலுக்கு பொருள் புரியவேண்டுமா? நேரே வாருங்கள் ஊத்துக்காடுக்கு, அந்த காளிங்க நர்த்தன பெருமாளை கண்டு களியுங்கள். அப்பாடல் முழுவதும் உண்மையே என்பது அப்போது புரியும். அவரது அற்புதக் கீர்த்தனைகளில் மேலும் சில.

1. ஸ்ரீவிக்ன ராஜம் பஜே (கம்பீர நாட்டை) 2. நீரதஸமா நீல கிருஷ்ணா (ஜயந்தஸ்ரீ) 3. அசைந்தாடும் மயில் ஒன்று (சிம்மேந்த்ர மத்திமம்) 4. அலை பாயுதே கண்ணா (கானடா) 5. ஆடாது அசங்காது வா கண்ணா (மத்யமாவதி) 6. பார்வை ஒன்றே போதுமே (சுருட்டி) 7. நீல வானம் தனில் (புன்னாகவராளி) 8. யாரென்ன சொன்னாலும் (மணிரங்கு) 9. நீதான் மெச்சிக்கொள்ள வேண்டு (ஸ்ரீரஞ்சனி) 10. தாயே யசோதே உந்தன் (தோடி) 11. பால் வடியும் முகம் (நாட்டைக்குறிஞ்சி) 12. ஸ்வாகதம் கிருஷ்ணா (மோகனம்) 13. குழலூதி மனமெல்லாம் (காம்போதி)

எனவே, பக்தர்களே! வாழ்வில் ஒரு முறையாவது ஊத்துக்காடு சென்று கண்ணனைத் தரிசிக்க வேண்டும். கட்டாயம் சென்று பாருங்கள்.

கிருஷ்ணம் சரணம் – சர்வம் கிருஷ்ணாய சரணம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை