- ராமலிங்கம் கிருஷ்ணா
கலியுகத்தில் உலக உயிா்களுக்கு உணவு தான் பிரதானமாக உள்ளது. உயிா் வாழ உணவு இன்றியமையாதது ஆகும். இதனை உணா்ந்தே, “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பொங்கினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. மனித வாழ்வில் “இது போதும்” என்று மனித மனம் திருப்தி அடையும் இடமே உணவுதான்.
கல்லுக்குள் தேரையும் கருப்பை உயிரும் உயிா்வாழ மறவாமல் படியளக்கும் பரமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் அன்னம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபடுவதே புனிதம் நிறைந்த “அன்னாபிஷேக” நிகழ்வாகும்.
உபநிஷத் போற்றும் அன்னம் ! “அஹமன்னம், அஹமன்னம் , அஹமன்னதோ”, என்கிறது, அதாவது அன்னமே இறைவடிவம் என்றும் மஹேஸ்வரனே அன்னத்தின் வடிவில் இருக்கிறாா் என்றும் அன்னமே தானாக இருக்கிறேன் என்று ஈசனே திருவாய் மலா்ந்துள்ளதாக வேதங்கள் தொிவிக்கின்றன.
“தட்சன்” தனது அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டு அவனிடம் தனது பெண்கள் அனைவரையும் சமமாகப் பாவித்து அவர்கள் எல்லோரிடமும் சமமான அன்பு செலுத்தவேண்டுமென ஆசீர்வதித்தான்.
ஒன்பது கிரகங்களில் சந்திரன் தான் நம் எண்ணவோட்டத்தை நிர்ணயம் செய்பவன் எனவே சந்திரனுக்கு மனோகாரகன் என்றும் பெயருண்டு. ஆனால் அந்த சந்திரன் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்தது. 27 கன்னி பெண்களை மணந்தும், “ரோகிணி” மீது மட்டும்தான் அவன் அதிக பாசத்தையும் அன்பையும் காட்டிட, இவன் இழைக்கும் அநீதியை எப்படி மற்ற இருபத்தாறு பெண்கள் எப்படி பொறுத்துக்கொண்டு இருப்பார்கள், அவர்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர்.
உடனே இந்த நிலைக்கு என்ன காரணம் என்று சந்திரனிடம் கேட்க, பதில் கூற முடியாமல் தவிப்பதைக் கண்ட தட்சன், தனது மருமகனை கோபத்துடன், “நீ இதுநாள் வரை கற்றறிந்த கலைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக உன்னை விட்டு நீங்கக்கடவது,” என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தை கண்டு கலங்கிய சந்திரன் இதை நீக்கம் செய்ய ஒரு உபாயம் கூறவேண்டும் என இந்திரனை கேட்கவும், தட்சனின் கோபத்திற்கு நான்
ஆளாக நோிடுமென அஞ்சி அவன் பதிலேதும் கூறாமல் மெளனமாகிவிட சாபம் நீங்க வழி தேடித்தேடி சந்திரனின் கலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் தேய்ந்து சுருங்க, இந்த சாபத்தை தீர்க்க நான்முகனை தனக்கு உதவி செய்யுமாறு வேண்ட, சந்திரனின் இந்த நிலையைக் கண்ட பிரம்மன், “இந்த சாபத்தினால் வரும் வினைகளை தீர்க்கக்கூடிய வல்லமை எல்லாம் வல்ல ஈசனுக்கு மட்டுமே உண்டு” என கூற அந்த கயிலை நாதனை தஞ்சமடைந்துவிடு என்று கூற,
கயிலை மலை சென்று அங்கு சிவனார் மற்றும் அம்பிகையையும் மனமுருகித் தொழுது, இந்த சாபத்திலிருந்து என்னை காப்பாற்றவேண்டும் என்று ஈசனின் திருவடிகளில் சரணடைந்தாா்.
“மின்னாா் செஞ்சடை மேல் மிளிா் கொன்றை அணிந்த பொன்னாா் மேனியன்” சாபத்தை நீக்க திருவுள்ளம்
கொண்டு ஒவ்வொரு கலைகளாக தேய்ந்து பிறை வடிவிலிருந்த சந்திரனை சூடிக்கொண்டு,“சந்திரமெளலீஸ்வரராக” காட்சி தந்து சாபத்தைப் நீக்கியருளி, “இன்று முதல் தேய்ந்த உனது கலைகள் மீண்டும் வளர அருள்புரிகிறேன்” என ஆசீர்வதித்து, பதினைந்து தினங்கள் தேய்ந்த உன் கலைகள் அனைத்தும் அடுத்த பதினைந்து தினம் திரும்ப வளர அருள்புரிகிறேன்” என்றார். அந்த கயிலை நாதன் சந்திரனின் சாபத்தை போக்கிய ஐப்பசி மாத நிறைநிலவில் பூர்ண ஒளியுடன் மிளிர்ந்தான். இந்த தினமே சிவ “அன்னாபிஷேக” தினம் என்பதால் பஞ்ச பூதங்களின் வடிவாக விளங்கும் ஈசனுக்குப் பஞ்ச பூதங்களின் மூலம் விளைந்த அன்னத்தை ஐப்பசி மாத பெளா்ணமியன்று அபிஷேகம் செய்து பூஜிப்பதே “அன்னாபிஷேகம்” ஆகும்.
பூமிக்கு அருகில் சந்திரன். வானியல் அறிவியலின்படி அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் சந்திரன் பூமிக்கு வெகு சமீபமாக வருவதால் அதன் ஒளி மிகவும் பிரகாசமாக நமக்கு தொிகிறது.
ஐப்பசிமாத பெளா்ணமியில் சந்திரனின் ஒளி வெள்ளத்தை நாம் கண் கூடாக காணலாம். இந்த நாளில் ஈசனின் மேனி மீது சாற்றப்பட்ட ஒவ்வொரு சாதத்தின் பருக்கையும் ஒரு சிவலிங்கமாகவே வணங்கப்படுகிறது. அன்னாபிஷேக அன்னத்தால் ஆன ஆடையை அணிந்து கொண்டிருக்கும் சிவனை தாிசனம் செய்தால் “கோடிசிவ லிங்க தாிசனம்” செய்த பலன் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஐப்பசி பெளா்ணமி அன்னாபிஷேக தாிசனம் முடிந்ததும் ஈசனின் லிங்கத் திருமேனியில் சாற்றிய அன்னம் பிாிக்கப்பட்டு வேதகோஷங்கள் முழங்க சாற்றி அந்த அன்னத்தின் ஒரு பகுதியை அருகிலுள்ள நீா் நிலைகளில் கரைத்து அங்கு தீபாரதனைகள் நடக்கும், இதன் மூலம் நீாில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஈசன் படியளப்பதாக ஐதீகம்.
ஈசன் “சூாிய வடிவம்” என்றும் அம்பிகை “சந்திர வடிவம்” என்றும் போற்றுகின்றன வேதங்கள். இதனால் சந்திரன் தானிய மான நெல்லிலிருந்து கிடைக்கும் அாிசி (அன்னம்) அம்பிகையின் அம்சம் பொருந்தியதாக நம்பப்படுகிறது. அாிசியின் வடிவமாகத் திகழும் அம்பிகை ஈசனின் திருமேனியைச் சேரும் நாள் “ஐப்பசி அன்னாபிஷேக நாளாக” வணங்கப்படுகின்றது.
இத்திரு நாளில் சிவசக்தி வடிவமாக விளங்கும் ஈசனை வழிபட பிாிந்த தம்பதியா் ஒன்று சோ்வா் என்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்றும் நம்பப்படுகிறது.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியையாம் பாடக்கேட்டேயும் வாட் தடங்கண் மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதாரமளியின் மேல்நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனுமாகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோரெம்பாவாய்.”
நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பர். நம் மனதுக்கு அதிபதி சந்திரன் தான், பலத்தை உண்டு பண்ணுபவன், சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அரிசியைக் கொண்டு சோறு சமைத்து அதை ஈசன் திருமேனி எங்கும் சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஜாதகத்தின் சந்திரன் பலவீனமாக உள்ளவர்கள், மனநலம் மேம்பட வேண்டுபவர்கள் சந்திராஷ்டம தினங்களால் மிகுந்த துயரடைபவர்கள் அன்னாபிஷேக தரிசனம் கண்டால் மனக் கலக்கங்கள் மறைந்து நிம்மதியும் இன்பமும் பெறுவர் என்பது நம்பிக்கை.
“இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல்தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ
எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்
கில்லையேல் அதுவோவுனதின்னருள்
ஆவடுதுறை அரனே.”
அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம்
மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை நமது முன்னோர் நன்கு உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் போன்ற தெய்வீக நிகழ்வுகள்.
யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம், அன்னாபிஷேகத்தை தொடரும் அன்னதானமாக வெளிப் படுகிறது. “உண்ணும் உணவில் மட்டும் தான் இது போதும் என்று மனித மனம் திருப்தியுறும். பொன், பொருள் என எத்துணை அளித்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே மனம் எண்ணும்” எனவே தான் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
கோயில் என்பது மனிதகுல மேம்பாட்டிற்கான மைய புள்ளியாக அமைந்திருக்கிறது என்பதையே இத்தகைய வழிபாட்டு முறைகள் உணர்த்துகின்றன. ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்ற ஆப்த மொழியை பெரியவாள் மேற்கோள் காட்டி, உணவிடுவதில் வித்தியாசம் பாராட்டவே கூடாது என்பார்.
கேரளத்தில் செருக்குன்னம் என்னும் தலத்திலுள்ள அன்னபூரணி ஆலயத்தில் சேவார்த்திகளுக்கு எல்லாம் அன்னம் படைத்த பிறகு, இரவில் அவ்வழியே செல்லும் திருடர்களுக்காக என்றே ஒரு மரத்தில் சோற்று பட்டை கட்டி வைக்கும் பழக்கம் இருப்பதாக அவருடைய பல உரைகளில் கூறியிருக்கிறார்.
எதிரெதிர் கட்சிகளான பாண்டவ படை, கௌரவ படை இரண்டிற்குமே உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் உணவு அனுப்பி பெருஞ்சோற்று சேரலாதன் என்றே பெயர் எடுத்ததாக சங்க இலக்கியங்களில் காண்கிறது என்று வெகுவாக ரசித்து கூறுவார்.
தானங்களில் சிறந்தது அன்ன தானம் தான், எவ்வளவு பொிய தானங்களும் தா்மங்களும் செய்த பின்னர் அவை அனைத்தும் பசித்து வரும் ஒருவருக்கு செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது.
அன்னாபிஷேகப் பலன்கள்.
சிவன் அபிஷேகப்பிாியா். ஈசனை பதினாறு வகையான திரவியங்கள் மற்றும் பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அவற்றில் ஒன்று தான் சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்வதாகும். சிவனாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பான தாகும்.
“அன்னாபிஷேகம்” செய்வதால் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு விவசாயம் தழைத்தோங்கும் என்றும் இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என்று நம்பப்படுகின்றது.
ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தாிசித்த அன்பா்களுக்கு என்றுமே அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது. செல்வந்தா்களாக இருந்தும் பல நோய்களின் தாக்கம் காரணமாக ஒரு சிலருக்கு உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். சாப்பிட மனமிருந்தும் உடல் நிலை ஏற்காததால் உணவருந்த முடியாமல் தவிப்பாா்கள். இதனை “அன்னத் துவேஷம்” (அன்னத்தின் மீது வெறுப்பு) என்று கூறுவதுண்டு, இந்த நிலையில் உள்ள அன்பா்கள் இந்த அன்னாபிஷேக தினத்தன்று ஈசனைத் தாிசித்து அங்கு ஈசனுக்கு சாற்றிய அன்னத்தை சிறிது பிரசாதமாக அருந்தினால் அன்னத்தின் மீதான வெறுப்பு நீங்கும்.
அனைத்து சிவாலயங்களிலும் 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ளுங்கள், கலந்து கொண்டு பல்வேறு நன்மைகள் பெறலாம்.
ஓம் நமசிவாய – சிவாய நம ஓம்