November 29, 2021, 4:55 pm
More

  நண்பர்கள் தினத்தின் ஒரு நயமான சிந்தனை! உண்மை #நண்பண்டா

  krishna kuchela - 1

  இன்றைக்கு திரைப்படங்களில் “நண்பேன்டா’ என்னும் புதிய தமிழ்ச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தன் நண்பன் தனக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறான் என்பதை பெருமையாகவும் அழுத்தமாகவும் சொல்வதற்காகவே இந்தச் சொல் கையாளப்பட்டது.

  ஸ்ரீமத் பாகவதத்தை எழுதிய வியாச மகரிஷி தன் மகன் சுகதேவருக்கு அதை உபதேசித்தார். சுகதேவர் மூலம் பாகவதம் வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப்பட்டது. தன் நண்பன் குசேலருக்கு கிருஷ்ணர் உதவிய நிகழ்வை, கங்கைக் கரையில் பரீட்சித்து மன்னனுக்கு விவரித்தார் சுகதேவர்.

  மகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணன் இளம் வயதில் உலக நியதிக்கு உட்பட்டு, சாந்தீப முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அவருக்குப் பணிவிடை செய்து, வேதம், சாஸ்திரம் மற்றும் இதர கலைகளைக் கற்றார். அந்த குருகுலத்தில் கண்ணனுடன் சுதாமன் (சுதாமா) என்கிற அந்தணச் சிறுவனும் தங்கியிருந்தான். கிருஷ்ணனும் சுதாமனும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

  ஒருகாலகட்டத்தில் குருகுலப் படிப்பு முடிந்தவுடன் கண்ணன் துவாரகைக்குச் சென்றுவிட்டார். சுதாமன் தமது குலவழக்கப் படி பணிகளைச் செய்து வந்தார். அவருக்கும் சுசீலை என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்வாழ்க்கையில் பல பிள்ளைகள் பிறந்தனர். குடும்பம் பெரிதானதால் அதற்கேற்ற வருவாய் இல்லாமல் சுதாமன் மிகவும் சிரமப்பட்டார். சுதாமன் பழைய கந்தலாடையை உடுத்தி வந்ததால் அவரை குசேலர் (பழைய ஆடையை உடுத்துபவர்) என்ற பெயரில் மக்கள் அழைத்தனர். அதுவே அவரது பெயராக பிற்காலத்தில் நிலைத்து விட்டது.

  குடும்பத்தில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. பல நாட்கள் பட்டினியாக இருக்க நேர்ந்ததால் குசேலரும் அவரது மனைவியும் மெலிந்து போனார்கள். பிள்ளைகளும் வாடிப்போயினர். இந்த நிலையில் ஒருநாள் அவரது மனைவி, “பால்ய பருவத்தில் உங்களது நண்பராக இருந்த கிருஷ்ணன் இப்போது துவாரகைக்கு அரசராக உள்ளார். அவரிடம் நேரில் சென்று நமது குடும்ப நிலையை எடுத்துக்கூறி ஏதாவது உதவியைப் பெற்றுவாருங்கள்” என்று கணவனிடம் வேண்டினாள்.

  இதைக்கேட்ட குசேலர் துவாரகைக்குச் செல்ல சம்மதித்தார். தன்னுடைய குடும்ப வறுமை நீங்கும் என்பதைவிட, நீண்ட நாட்களுக்குப்பிறகு தனது ஆருயிர் நண்பனை நேரில் காணும் ஆவலே அவர் சம்மதித்ததற்குக் காரணம். இதுதான் குசேலரின் உண்மையான நட்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒரு அரசரைப் பார்க்கச் செல்லும்போது வெறும் கையோடு செல்லாமல் ஏதாவது கொண்டு செல்லவேண்டும் என்னும் மரபை அறிந்த குசேலர், “கிருஷ்ணனுக்குக் கொடுக்க வீட்டில் ஏதாவது உள்ளதா?” என்று கேட்டார். ஆனால் எதுவுமில்லை. உடனடியாக அவரது மனைவி அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று கொஞ்சம் அவலை சேகரித்து வந்து ஒரு பழைய துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி கணவனிடம் கொடுத்தாள்.

  பகவான் கிருஷ்ணனை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற மனமகிழ்ச்சியுடன் குசேலர் துவாரகை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் துவாரகையை அடைந்தபோது அந்த நகரின் செழிப்பையும்- குறிப்பாக கிருஷ்ணருடைய அரண்மனையின் செல்வச் செழிப்பையும் கண்டு பிரமித்தார். தேவலோகம் போன்று காட்சியளித்த அந்த அரண்மனையின் உள்ளே, அந்தப்புரத்தில் தனது மனைவி ருக்மணியுடன் ஊஞ்சலில் வீற்றிருந்த கிருஷ்ணருக்கு குசேலர் வந்திருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் கண்ணன் குசேலரை வரவேற்க துள்ளிக் குதித்து அரண்மனையின் பிரதான வாயிலுக்கு ஓடிவந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது நண்பனைப் பார்த்தவுடன் ஆரத்தழுவிக்கொண்டார். அன்பின் மிகுதியால் இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் நலம் விசாரித்துக்கொண்டனர்.

  பின்னர் குசேலரை உள்ளே அழைத்துச் சென்ற கண்ணன் அவரை ஒரு இருக்கையில் அமர்த்தி, தன் மனைவி ருக்மணியுடன் பாதபூஜை செய்து முறைப்படி வரவேற்றார். பின்னர் பலவிதமான பண்டங்கள் கொண்ட உயர்ந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தார். பணியாட்களைக்கொண்டு பரிமாறாமல், கிருஷ்ணனும் ருக்மணியுமே பரிமாறினர். பரம ஏழையான தனக்கு கிருஷ்ணன் காட்டிய தூய அன்பையும் மரியாதையையும் கண்டு திக்குமுக்காடிய குசேலர், மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டார்.

  விருந்துக்குப் பின்னர், தன்னைக்காண நீண்ட தூரம் நடந்தே வந்ததால் களைப்புடன் இருந்த குசேலரை அழகிய கட்டிலில் அமர்த்தி, அவரது கால்களை கிருஷ்ணர் தமது கைகளால் பிடித்துவிட்டார். குருகுல வாழ்க்கை சம்பவங்களை இருவரும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

  இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில், கிருஷ்ணன் தன் நண்பனிடம், “எனக்காக என்ன கொண்டு வந்தாய்?” என உரிமையுடன் கேட்டார். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் வடிவான ருக்மணியுடன் வாழும் கிருஷ்ணனுக்கு வெறும் அவலை எப்படிக் கொடுப்பதென்று குசேலர் தயங்கினார். அதையுணர்ந்த கிருஷ்ணன் குசேலரின் இடுப்பில் தொங்கிய சிறிய துணி மூட்டையைத் தானே எடுத்து, அதிலிருந்த அவலில் ஒருபிடி எடுத்து மகிழ்ச்சியுடன் உண்டார். அன்பின் பெருக்குடன் பக்தர்கள் கொடுக்கும் சாதாரணமான பொருளும் இறைவனுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும் என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் காட்டுகிறது.

  அன்றிரவு குசேலரை அந்தப்புரத்திலிருக்கும் அறையில் தங்க வைத்தார் கிருஷ்ணன். தான் துவாரகைக்கு வந்த நோக்கத்தை மறந்து, கிருஷ்ணனின் அன்பையே நினைத்த வண்ணம் அன்றைய இரவைக் கழித்தார் குசேலர். மறுநாள் கிருஷ்ணனிடம் விடைபெற்றுச் செல்லும்போதும் கூட மனைவி சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனைக் கண்ட மனநிறைவுடன் ஊருக்குத் திரும்பினார்.

  நடந்தே தன் ஊரை அடைந்த குசேலருக்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தனது குடிசை இருந்த இடத்தில் ஒரு பெரிய மாளிகை இருப்பதைக் கண்டு வியந்தார். சில பணியாட்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். மாளிகைக்குள் அவரது மனைவி, பிள்ளைகளெல்லாம் புதிய பட்டாடை அணிந்து, பலவிதமான அணிகலன்கள் பூண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். தான் ஏதும் கேட்காமலேயே தனது நண்பனான இறைவன் தனக்கு இத்தகைய பேருதவி செய்ததை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

  அவரது மாளிகையில் பொன்னும் பொருளும் குவிந்திருந்தாலும், குசேலர் மட்டும் ஆடம்பரத்தை நாடாமல் செல்வப்பற்றற்று பழைய நிலையிலே இருந்து, எப்போதும் கிருஷ்ணனின் நினைவுடனே வாழ்ந்தார். தூய நட்புக்கு இலக்கணமாக கிருஷ்ணனும் குசேலரும் விளங்கினர். இத்தகைய குசேலரின் வரலாற்றைக் கேட்டாலோ, படித்தாலோ கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிட்டுமென்பது பெரியோர் வாக்கு

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,754FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-