
பிப்.14ம் தேதி இன்று இசைக்கவி ரமணன் அவர்களின் தந்தையார் சேஷன் பெயரில் சேஷன் சம்மான் விருது வழங்கிய நிகழ்வு சென்னை மயிலாப்பூர் ஆர்கே கன்வன்ஷன் செண்டரில் நடந்தது. மாலை நேரம், நண்பர்கள் கீழாம்பூர், பி.டி.ராஜன், ரமேஷ் ஆகியோருடன் சென்றிருந்தேன்.
நிகழ்ச்சியில், சேஷன் சம்மான் விருது பெற்ற சுதா சேஷய்யன் அவர்கள் வழக்கம் போல் இனிமையாகப் பேசினார். அவரது பேச்சினூடே, ‘அவன் தம்பி அங்கதன்’ என்ற சொற்றொடரைக் குறிப்பிட்டு, அனுமன் செய்து முடித்ததைப் போல், அவன் இல்லாத சூழலில் அங்கதன் செய்து முடித்தான் என்பதால் ’அவன் தம்பி அங்கதன்’ என்ற சொற்றொடரால் குறிப்பதாக வெகு சுவாரஸ்யமாகச் சொன்னார்.
அரங்கம் நிறைந்திருந்தது. நாமோ ராமகிருஷ்ண மடத்தின் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு இடையில் தான் சென்றோம். எங்கள் மூவரையும் பார்த்த ஆர்கே கன்வன்ஷன் செண்டர் ராமகிருஷ்ணன் சார், வாங்கோ ஸ்ரீராம்… எப்படி இருக்கீர். கலக்குறீரே! என்றபடி வரவேற்று, உள்ளே கூட்டம் அதிகம், என் அறையில் உட்காருங்கள் என்று அவர் அறையில் மூன்று சேர்களைப் போட்டு அதிலிருந்த கணினித் திரையில் நேரடியாகப் பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்தோம்.
அவன் தம்பி அங்கதன் என்ற சொற்றொடரைக் கேட்டபோது, அங்கதனை அங்கு அதன் என்று பிரித்த கீழாம்பூர் அவர்கள், நம்ம ஊர் பழக்கத்தில் இந்த பழமொழியை வேறு மாதிரி சொல்வார்கள் அதை பிறகு சொல்கிறேன் என்றார்.
அதென்ன அவன் தம்பி அங்கதன்? அங்கதன் வாலியின் ஒரே மகன். அவனுக்கு அண்ணனுமில்லை தம்பியுமில்லை… பின் எப்படி அவன் தம்பி அங்கதன் என்ற சொற்றொடர் சரியாகும்? திருமதி சுதா சேஷய்யன் அவர்களது விளக்கம் ஒரு இலக்கிய நயம் கொண்டது என்றாலும், இதன் பொருள் வேறு விதமானது.
நாரணனின் ராமாவதாரத்தின்போது, அரக்கரை அழிக்க உதவியாக தேவர்கள் பலரும் தங்களை ஒவ்வொரு வடிவினராய் பிறப்பெடுத்துக் கொள்கின்றனர் என்கிறார் வால்மீகி. அவரது கதைப்போக்கின் படி, சூரியன் – சுக்ரீவன், வாயுபுத்ரன் – அனுமன், இந்திரன் – வாலி என்ற வகையில் வானர வீரர்களாய் அவதரிக்கிறார்கள்.
இந்திரனின் தம்பி உபேந்திரன் அங்கதனாகப் பிறப்பெடுத்தான். அண்ணன் தம்பியாக இருந்தவர்கள், அவதாரத்தின் போது, தந்தை மகனாகப் பிறப்பெடுத்தார்கள். எனவே தான் அவன் ‘அவன் தம்பி அங்கதன்’ ஆனான் என்று அடியேனுக்கு பெரியோர் சொல்லிக் கேள்வி..!
இப்போது இந்த இரண்டு கருத்துகளையும் சேர்த்துவைத்துப் பார்ப்போம். இந்திரனாகிய வாலி – அவதார நோக்கம் மறந்து, தன் கடமையில் இருந்து நழுவி, ராவணனுடன் நட்பு கொண்டான். ஆனால், அவதார நோக்கம் பிறழாத இந்திரன் தம்பி உபேந்திரன், ராமன் பணிக்குத் தோள் கொடுத்து, தன் கடமையை சரியாக நிறைவேற்றினான். இந்திரன் செய்யவேண்டிய பணியையும் சேர்த்து அவன் தம்பி உபேந்திரன், தானெடுத்த பணியைச் செய்தானென்று கொண்டாலும், அவனே ‘அவன் தம்பி அங்கதன்’ ஆகிறான்!
– செங்கோட்டை ஸ்ரீராம்