
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி., எப்-10’ ராக்கெட் இன்று காலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்ததாக இஸ்ரோ தெரிவித்தது. எனினும் செயற்கைக் கோளை திட்டமிட்டபடி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த இயலாமல் இந்த திட்டம் பகுதி தோல்வியில் முடிந்தது.
இயற்கைப் பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈஓஎஸ்-03’ (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று (ஆக.12) அதிகாலை 5.43க்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்ததாக இஸ்ரோ தெரிவித்தது. எனினும் கடைசி கட்டத்தில் வெற்றிகரமாக செயல்படாமல் போனது .. 2017 க்குப் பின்னர் 14 வெற்றிகரமான தொடர் ராக்கெட் ஏவுதல்களுக்குப் பிறகு ஏற்பட்டு இருக்கும் ஒரு தோல்வி இது.
நான் பிஷப் ஹீபரில் பிஎஸ்சி கணிதம் பயின்ற போது, என்னை வெகுவாக ஈர்த்த சப்ஜெக்ட் – அஸ்ட்ரானமி. வானியல் தொடர்பில் கொஞ்சம் தேடித்தேடிப் படித்தேன். ராகு கேது என்றெல்லாம் ஜோசியத்தில் சிறு வயதில் கேட்டு பதிவான தகவல்கள், அவற்றுடனான கதைகள், வானியலில் வெறும் இரண்டு கற்பனைப் புள்ளிகளே என்ற ரீதியிலான மேலும் சில கோட்பாடுகள் அப்போது எனக்கு புதிதாகவே தெரிந்தது.
அப்போது கல்லூரி கணிதத்துறை வருடாந்திர மலரில், வானத்து கற்பனைப் புள்ளிகள் இரண்டு எப்படி மனிதர்களின் வாழ்வில் விளையாடுகிறது என்ற த்வனி வரும் வகையில் ஒரு சிறு கட்டுரை எழுதினேன் (1994இல்). அது முதலாக ஸ்பேஸ் சயன்ஸ்-ஸில் ஆர்வம் அதிகரித்தது.
பின்னாளில், இதழியல் துறைக்கு வந்த போது, அறிவியல் கட்டுரைகள் அவ்வப்போது எழுதுவதும் மனதுக்குப் பிடித்த ஒன்றானது. 2001இல் முதல் ஜிஎஸ்எல்வி ஏவப்பட்ட போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இஸ்ரோ.,வில் இருந்து செய்தி சேகரிக்க அழைத்துச் சென்றார்கள். சென்னையில் இருந்து பஸ் மூலம் முதல்முறையாக ஸ்ரீஹரிகோட்ட தளத்துக்குச் சென்றபோது, பிரமிப்பாக இருந்தது.
அந்நாட்களில் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் -பிஎஸ்எல்வி-தான் இஸ்ரோவின் வெற்றிகரமான ராக்கெட் திட்டங்களாக இருந்தது. முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து பெற்ற ஜிஎஸ்எல்வி தொழில் நுட்பம், அன்று சோதனை முறையில் ஏவப்பட்டது. GSLV-D1 ராக்கெட் GSAT-1 செயற்கைக்கோளுடன் அன்று பாய்ந்தது.
அன்று, பிஎஸ்எல்வி.,க்கும் ஜிஎஸ்எல்வி.,க்கும் என்ன வேறுபாடு, இரண்டுக்குமான அடிப்படை தொழில்நுட்ப விவரங்களை டிஜிட்டல் திரையில் விளக்கினார்கள். அன்னாட்களில் துருவ நிலை நிலைப்படுத்தலுக்கும், புவி வட்ட சுற்றுப் பாதையில் புவியின் இயக்கத்துடன் இயைந்து பயணிக்கும் நுட்பத்துக்கும் என்ன பயன்கள் என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள்.
(மதிய உணவு ஏற்பாடுகள் பெரிதாக இருந்தது. வெஜ் நான்வெஜ் என வகைவகையாக… எனக்கு வெளியிடங்களில் இது போல் உணவுக் கலப்பு என்றாலே உள ரீதியான அலர்ஜி என்பதால், வழக்கம் போல் தயிர் சாதமும் ஊறுகாயும் என முடித்துக் கொண்டேன். உடன் வந்த நண்பர்கள் கேலி செய்தார்கள்.)
அந்த லாஞ்ச் நன்றாகவே இருந்தது. விஞ்ஞானிகள் முகத்தில் மிகப் பெரும் மகிழ்ச்சி. ஆரவாரம் எல்லாம்தாம். அந்த மகிழ்ச்சிப் பெருக்கை நானும் அனுபவித்தேன். அதன் பின்னரும் சில முறை இஸ்ரோ மண்ணில் கால் பதித்திருக்கிறேன்.
2006இல் ஜி.மாதவன் நாயர் பொறுப்பில் இருந்த போது, ஒரு லாஞ்ச். அது இன்றைய நாள் போல் தோல்வியில் முடிந்தது. அன்று அவர்களிடையே அப்பிய சோகம் நமக்கும் தொற்றிக் கொண்டது.
சென்னையில் இருப்போர் வானத்தை நிமிர்ந்து பார்த்தாலே ராக்கெட் சீறிப் பாய்வதைக் காணலாம்.
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தை ரஷ்யா நமக்குத் தர மறுத்தது. நம்மவர்களோ இஞ்சினை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அதைப் போல் உருவாக்க உடனே இறங்கிவிட்டார்கள். ஜிஎஸ்எல்வி.,யில் பிஎஸ்எல்வி பயன்பாடு போல், திடநிலை எரிபொருள் எஞ்சின், மற்றும் கிரையோஜெனிக் இயக்க திரவநிலை எரிபொருள் பயன்பாடு என நுட்பம் தயாரானது. நம் நெல்லை மாவட்ட மகேந்திரகிரியில் அதற்கான நிலையம் அமைந்தது. கிரையோஜெனிக் எஞ்சினில் மிக முக்கிய பகுதி இங்கே தயாரானது. அதில் நமக்குப் பெருமையும் கூட.
இன்றைய மிஷனில் கடைசிக் கட்ட வட்டப் பாதை நிலைநிறுத்தலில், செயற்கைக்கோளுக்குத் தேவையான உந்துசக்தியை கிரையோஜெனிக் தராமல் போனதாகத் தெரிகிறது. ஜிஎஸ்எல்வி கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில், கிட்டத்தட்ட 20 வருட தொடர் முயற்சிகளில், மூன்று முறைதான் இது போன்ற கடைசிக்கட்ட தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன. மற்ற அனைத்துமே திட்டமிட்டபடி நடந்திருக்கின்றன. எனவே இஸ்ரோவுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நம் ஊக்கப் படுத்தலும் வாழ்த்துகளும் எப்போதும் உண்டு! #ISRO #GSLVF10 #GSLV