
குதிரைவாலி பொடி இட்லி
தேவை: குதிரைவாலி, புழுங்கலரிசி – தலா 200 கிராம்,
உளுந்து – 150 கிராம்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு, இட்லி மிளகாய்ப் பொடி – தேவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
குதிரைவாலி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக்கரைத்து எட்டு மணி நேரம் புளிக்கவிட்டு மினி இட்லிகளாக ஊற்றி எடுத்து வைக்கவும். பிறகு ஒரு வாணலியைச் சூடாக்கி சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் இட்லிப் பொடியையும் சேர்த்துப் புரட்டவும். பிறகு செய்து வைத்திருக்கும் மினி இட்லிகளைச் சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கலாம். சாமை, வரகு ஆகியவற்றிலும் இதுபோல இட்லி செய்யலாம்.