பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும். வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை. அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது. அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார். அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்.. பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும் பொய்யெனக் கருதப் படும். நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது. இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்…. சிரித்தபடியே என்னிடம் கேட்டார்… “1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல். “திருவள்ளுவர்” என்றேன். “அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?” “தெரியாது.” “1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….” எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது. எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!
பேர் ஆசை; பேராசை!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari