மகாத்மா காந்தி யங் இந்தியாவில் நாட்டு விடுதலைக்காக ஒரு கட்டுரை எழுதினார். இதைப் படித்த ஆங்கிலேய அரசு காந்தியின் மீது 124அ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.
அரசு வழக்கறிஞர் அமைதியாக வாழும் மக்கள் தேசத் துரோக நடவடிக்கைகளில் இடுபடத் தூண்டும் கட்டுரை எழுதி வெளியிட்ட காந்திக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க நீதிபதியிடம் முறையிட்டார்.
அப்போது நீதிபதி”நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று காந்தியிடம் கேட்டார். அப்போது காந்தி கால அவகாசம் கேட்டார்;காரணம் தனக்காக வாதிட வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் தானே வாதிட விரும்பினார். நீதிபதியும், காந்திக்கு கால அவகாசம் கொடுத்து எழுதிக் கொண்டு வந்து படிக்கச் சொன்னார்.
1922,மார்ச் 3 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி உரையோடு அகமதாபாத் நீதிமன்றம் சென்றார். அவரோடு கஸ்தூரிபாய் காந்தி உட்பட 250 பேர்கள் சென்றார்கள்.நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் மகாத்மா காந்தி தன் பேருரையை ஆற்றினார். பின்னர் அது நூல் வடிவம் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகள்….
“நான் இந்த அறிக்கையை வாசிப்பதற்கு முன்பாக என்னைப் பற்றி அறிவுசால் அட்வகேட் ஜெனரல் கூறிய அனைத்தையும் வழிமொழிகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்பிகின்றேன்.அவர் முன் வைத்த கருத்துக்கள் மிக உண்மையானவை.
மக்கள் மனதில் அரசின் மீதான அதிருப்தியை உருவாக்குவதே என் தீவிர வேட்கையாக இருக்கிறது என்று அவர் கூறியது முற்றிலும் உண்மை.யங் இந்தியாவுடனான என் தொடர்பிலிருந்து இந்த அதிருப்தி ஆரம்பமாகவில்லை என்று அவர் குறிப்பிட்டிருப்பதும் முற்றிலும் சரி.அதற்கு முன்பிருந்தே ஆரம்பமாகிவிட்ட அதிருப்திதான் அது.
நான் இப்போது வச்சிக்கப்போகும் தன்னிலை விளக்க அறிக்கையில் மேற்குறிப்பிட்ட ‘அரசின் மீதான அதிருப்தி’ அட்வகேட் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ள காலகட்டத்திற்கு வெகுமுன்பாகவே ஏற்பட்டுவிட்டது என்ற வேதனையான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய கடமையை நிறைவேற்றிருக்கிறேன்.
பம்பாய் நிகழ்வுகள்,மெட்ராஸ் நிகழ்வுகள், செளரி செளரா நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிக்குமான பொறுப்பேற்பைக் கற்றறிந்த அட்வகேட் ஜெனரல் எனது தோளின்மீது சுமத்தியிருப்பதையும் நான் ஏற்றுகொள்கிறேன்.
எனவே நீதியரசே,மற்ற பெருந்தகைகளே! “உங்கள் முன் இருக்கும் வழி ஒன்றே ஒன்று தான். சட்டம் தீமைக்குத் துணை போகும்படி உங்களை உந்துவதாக நீங்கள் கருதினால், இந்தத் தேசத்துரோகச் சட்டம் ஒரு தீய காரியத்தை செய்வதாக நீங்கள் நினைத்தால், நான் உண்மையில் குற்றமற்றவன் என்று நீங்கள் எண்ணினால் உங்கள் பதவிகளை ராஜினாமா செய்து உங்களைத் தீமையிலிருந்து விலக்கிக்
கொள்ளுங்கள்.
இல்லை, இந்த அரசு நிர்வாகமும், சட்டமும் இந்த நாட்டின் மக்களுக்கு நல்லது செய்யவே உள்ளதாகவும், அவ்வளவில் என்னுடைய செயல்பாடுகள் பொதுநலனுக்கு எதிராக உள்ளதாகவும் நீங்கள் கருதினால் தேசத் துரோகச் சட்டத்தின்படி உச்சபட்ச தண்டனையை எனக்குத் தாருங்கள்.”




