சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் எதுவும் இன்றி மக்களுக்காக செய்திகளை வழங்கி வருகிறார்கள்.
தமிழ் செய்தி சேனல்கள், செய்தித் தாள்கள், ஆன்லைன் மீடியாக்கள், ஆங்கில ஊடகங்கள் என எல்லோரும் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். கணிசமான எண்ணிக்கையில் பெண் பத்திரிக்கையாளர்கள் இரவு முழுக்க செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்கள்.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்குப் பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்பு நிலையை அடைந்துள்ளது.
காவேரி மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் பத்திரிகையாளரகள், போதிய உணவு, போதிய தண்ணீர் வசதி இன்றி சிரமப் பட்டு வருகிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு குடிநீர் பிரச்னைதான் அதிகம் ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு செய்தியாளர் அங்கே சிதறிக் கிடக்கும் வாட்டர் பாட்டில்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆண் பெண் பாகுபாடு இன்றி செய்தியாளர்கள் மூன்று இரவுகளாக தூங்காமல் செய்திகளை வழங்கி வருகிறார்கள். சென்னையில் இருந்து செய்தியை உலகம் முழுக்க தெரியப்படுத்தும் இதுபோன்ற பெண் பத்திரிகையாளர்கள் பாராட்டு பெற்று வருகிறார்கள்.
முக்கியமாக இரவு முழுக்க செய்தி தர வேண்டும் என்பதால், செய்தியாளர்கள் சாலையிலேயே உறங்கி விடுகிறார்கள். பலர் இரவு முழுக்க உறங்காமல் அதிகாலையில் சில மணி நேரம், அருகில் இருக்கும் பிளாட் பார்மில் உறங்கிக் கொள்கிறார்கள்.
உணவு சாப்பிட இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் அனைவருமே! சமயங்களில் பலருக்கு உணவும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் உணவையும் இப்படி இருளில் மொபைல் விளக்கில் சாப்பிடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மருத்துவமனை வளாகத்தில் நடு இரவில் தூக்கமின்றி காத்திருக்கும் நிலை. கடந்த மூன்று நாட்களாக இவர்களில் பலர் தூங்கவில்லை. இதனால் அவர்களில் சிலருக்கு உடலில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் சிரமத்தை அனுபவித்து வருபவர்கள் புகைப்படக்காரர்கள். சரியான புகைப்படங்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, கோபாலபுரம், காவேரி, கோபாலபுரம் என்று நாட்கள் கழிந்து கொண்டிருக்கிறது என்பது செய்தியாளர்களின் நடப்பு நிலை!




