மனிதன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கையாண்ட கருவியே மொழி. இம்மொழியிலும் முதன்முதலில் கவிதை அல்லது செய்யுள் நடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் உரைநடை இலக்கியமும் தமிழுக்குப் புதிதன்று. தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை எனும் பிரிவு இருந்தது என்று பல தமிழ் ஆய்வாளர்களும் அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். அக்காலத்தே உரைநடையும் இருந்தது என்று கூறினாலும் செய்யுளே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காரணம், அக்காலத்தில் பழக்கத்திலிருந்த எழுதுபொருட்களே. பனை ஓலையும், இரும்பு எழுத்தாணியும் பயன்படுத்துவதற்குக் கடினமாக இருந்ததால் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த கவிதை நடையே இத்துன்பத்திற்கு மாற்றுவழியாக இருந்தது. எதுகையும், மோனையும் பொருந்த ஓசைநயமுடன் இருந்த கவிதை இலக்கியமே பெரிதும் பழக்கத்தில் இருந்தது. அடுத்து வந்த உரைநடை கவிதையின் சிதைந்த வடிவம் என்றே கூறலாம்.
சங்ககாலத் தமிழ், உரையிட்ட பாட்டுடைச் செய்யுளில் தொடங்கி, இலக்கிய இலக்கணங்களுக்கு உரை வகுக்கும் பணியில் தொடர்ந்து, அச்சு இயந்திர வருகையால் பாடப்புத்தகங்களாகவும், மொழிபெயர்ப்பு நூல்களாகவும் வளர்ந்து தற்கால உரைநடை நிலைக்கு உயர்ந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் புலவர்களுள் பலர் உரைநடை எழுதியுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பண்படுத்தப்பட்ட உரைநடை 20 ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்தது. உரைநடை வளர்ந்ததே தவிர தமிழின் செழுமை குன்றத் தொடங்கியது. தமிழின் தூய்மையும் செழுமையும் குறைவது கண்டு வெகுண்டெழுந்த மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். கொச்சைமொழி கலவாத, தூய தமிழில் எழுதத் தொடங்கினார். இவரைத் தொடர்ந்து பல சான்றோர்கள் சிறந்த தமிழ் நடையில் எழுத முற்பட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் புலவர்கள் பலர் உரைநடை எழுதினர். உரைநடை எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சிவஞான முனிவர், இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர் ஆகியோராவர். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவிய உரைநடை மறுமலர்சி எழுத்தாளர்களில் தத்தம் உரைநடையென இனங்காட்டக் கூடிய வகையில் ஒரு தனிச்சிறப்போடும், பாணியோடும் எழுதிய ஒருசில ஆசிரியர்களில் முக்கியமானவர் யாழ்நகர் ஆறுமுக நாவலர் !
ஆறுமுக நாவலர் :
யாழ்ப்பாணத்து நல்லூரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தார். இளமையிலேயே ஆங்கில அறிவும், அதமிழ்ப் புலமையும் கைவரப் பெற்றார். தமது 19 ஆம் வயதிலேயே இரு மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். சைவத்தையும் தமிழையும் தம் இரு கண்களெனக் கொண்டவர். யாழ்பாணத்திலும், சிதம்பரத்திலும் கல்லூரிகள் நிறுவி சைவத்தையும் தமிழையும் வளர்த்தார். பெரிதும் பரவி வளர்ந்து வந்த கிறிஸ்த்தவ மதத்தின் செழிப்பால் சிதைந்து அழிந்துகொண்டிருந்த சைவ சமயத்திற்குப் புத்துயிரூட்டினார். சைவ சித்தாந்த நூல்களையும், திருமுறைகளையும் தெளிவுறக் கற்றுத் தேர்ந்து, சைவ சமயப் பணி புரிய முற்பட்டார். இதற்காக சென்னையில் ஒரு அச்சகக் கூடம் நிறுவி சைவ வினா விடை, சைவ சமய நெறி உரை, திருமுருகாற்றுப் படையுரை போன்ற சமைய நூல்களை வெளியிட்டார்.
திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை வசன நடையில் எழுதி அச்சிட்டுத் தந்தார். மேலும் பாரதம், கந்தபுராணம், சிவஞான போதச் சிற்றுரை, பரிமேலழகர் உரை ஆகிய இலக்கியங்களையும் பற்பல இலக்கண நூல்களையும் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிச் சிறார்களுக்கு பால பாடங்கள் எழுதினார். கணித வாய்பாடுகளையும் வெளியிட்டார். சொற்பொழிவாற்றுவதிலும் சிறந்து விளங்கினார். கிறிஸ்தவ சமய வேதமாகிய பைபிளையும் தமிழில் மொழிபெயர்த்து உதவினார்.
சிறந்த பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், சீரிய சமயச் சிந்தனையாளராகவும், தேர்ந்த உரைநடை ஆசிரியராகவும் திகழ்ந்த இவருக்கு அவரது 27 ஆவது வயதில் திருவாடுதுறை ஆதீனத்தாரால் ” நாவலர் ” எனும் பட்டம் அளிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவரான இவரே, முதன்முதலாக, இலக்கணப் பிழையற்ற தூய எளிய நடையைக் கையாண்ட பெருமைக்குரியவராவார்.
இவரது தமிழ்த் தொண்டு கண்டு பலரும் இவரைப் பெரிதும் பாராட்டி உரைத்துள்ளனர். பரிதிமாற் கலைஞர் இவரை ” ஆங்கில உரைநடைக்கு டிரைடன் ( Dryden ) போன்று தமிழ் உரைநடைக்கு ஆறுமுக நாவலரே சிறந்து விளங்கினார் ” என்றும் ” வசன நடை கைவந்த வள்ளலார் ” என்றும் பாராட்டியுள்ளார். திரு. சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள்
” நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லு தமிழ் எங்கே ? சுருதி எங்கே ? ”
என்று போற்றியுள்ளார். இவர் இறந்த செய்தி கேட்ட தமிழறிஞர் ஒருவர் ” வைதாலும், வழுவின்றி வைவாரே ! ” என்று புலம்பிக் கூறியுள்ளாரெனில் நாவலரின் தமிழ் பற்றும், தொண்டும், அவரது சீரிய வாழ்க்கை நெறியும் போற்றுதற்குரியது மட்டுமின்றி பின்பற்றுவதற்குரியதுமே !




