November 9, 2024, 4:08 PM
31.3 C
Chennai

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்: மகத்தில் பிறந்து ஜெகத்தை வென்றவர்!

jeyakanthan சென்னை: ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை ஏப்.8 அன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன் கிழமை இரவு 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.


எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து… ஜெயகாந்தன் – பெயரிலேயே காந்தத்தைக் கொண்டிருப்பவர். தன் காந்த எழுத்தின் ஈர்ப்பால் இரும்பு இதயங்களையும் தன்பால் சேர்த்து, இலக்கியத்தின் மென்மையை ஊட்டி தன்னில் கரைத்துக் கொண்ட வெற்றியாளர். ஜெயகாந்தனுடைய எழுத்தின்பால் ஒருமுறை ஈர்க்கப்பட்டவர் ஈர்க்கப்பட்டவர்தான்! இப்படி தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக் கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை ஜெயகாந்தனுடையது! தமிழ் வாசகர்களின் இலக்கிய ரசனையையும் சிந்தனையையும் அதிகம் பாதித்த எழுத்தாளர்களுள் ஜெயகாந்தன் முக்கியமானவர். நவீன இலக்கியம், அரசியல், கலை மற்றும் பத்திரிகை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருபவர். தமிழ்ச் சிறுகதை உலகில், இன்றுள்ள கால கட்டத்தை ஜெயகாந்தனின் காலம் என்று குறிப்பிடும் அளவுக்கு ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், ஜனரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன. தமிழர் மனங்களைப் பண்படுத்தியவர் அவர்! அவரின் எழுத்து இன்றைய நவீன எழுத்தாளர்கள் பலருக்கும் உந்துசக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன் இலக்கிய வகைகளின் பல்வேறு தளங்களிலும் தம் எழுத்தைப் பதியமிட வைத்திருக்கிறார். சென்ற நூற்றாண்டில் தமிழ் இலக்கியக் கடலில் முத்தென பல்வேறு படைப்புகளைத் தந்த இவர் பிறந்ததும் கடலூரில்தான்! ஆம்… தென்னார்க்காடு மாவட்டம் கடலூர்- மஞ்சக்குப்பத்தில் பிறந்தார் ஜெயகாந்தன். அது 1934ம் வருடம். சித்திரைத் திங்கள் 12ம் நாள். செவ்வாய்க் கிழமையில் பிறந்தார் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் தந்தையார் பெயர் தண்டபாணிப் பிள்ளை, தாயார் மகாலெட்சுமி அம்மாள். மகம் ஜெகத்தை ஆளும் என்பார்கள். அன்றைய தினம் மக நட்சத்திரம். இவர் எழுத்து உலகை ஆளப் போகிறார் என்பது அன்றே கோடிட்டுக் காட்டப்பட்டதோ என்னவோ? பெரும்பாலும் ஏழ்மையும் வறுமையும் ஒருவனை இந்த சமூகத்தை உற்று நோக்க வைக்கிறது. ஔவை பாடியது போல், இளமையில் வறுமை கொடிய அனுபவங்களைத் தந்து, சமூகத்தைப் பற்றிய பார்வையை இன்னும் விரிவடையச் செய்கிறது. ஜெயகாந்தன் பிறந்தது ஒரு வேளாண் குடும்பத்தில். இளமையில் பள்ளிப் படிப்பில் நாட்டம் இன்றி ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தாராம். பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர் இவர். இருந்தாலும், பொதுவாக பெரும்பாலான வீடுகளிலும் உள்ள தந்தை – மகன் கருத்து வேறுபாடுதான் கல்வியைக் கைவிடக் காரணம் என்று தெரிகிறது. பள்ளிக்குச் செல்ல ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயகாந்தனுக்கும் தந்தைக்கும் வந்த கருத்து வேறுபாடு, அவருக்கு தந்தையின் மூலம் கடுமையான தண்டனைகள் கிடைக்கச் செய்தது. எந்தச் சிறுவனால் இந்தக் கடுமையான தண்டனைகளைத் தாங்கிக் கொள்ள இயலும்? ஜெயகாந்தனுக்கு தாயார் மற்றும் தாத்தாவிடம் பிரியம் அதிகம் இருந்துள்ளது. தந்தையிடம் இருந்து தண்டனைகளை சகிப்பதை விட வெளியே செல்வது நல்லது என்று எண்ணியது அந்தச் சிறு வயது உள்ளம். 12 வயதில் வீட்டில் இருந்து மாமாவின் வீடு இருந்த விழுப்புரத்துக்கு ஓடினார் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் மாமா கம்யூனிஸக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் ஜெயகாந்தனுக்கும் அந்தக் கொள்கைகளை அறிமுகப் படுத்தினார். தேசியக் கவி சுப்ரமணிய பாரதியின் படைப்புகளை அவருக்கு அறிமுகம் செய்தார். நாளடைவில் ஜெயகாந்தனுக்கு இலக்கியங்களின் மீது விருப்பம் ஏற்பட்டது. சிறிது காலம் கழித்து, அவருடைய 15 வது வயதில், அவரின் தாயார் ஜெயகாந்தனை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். அவர் மூலம் ஜெயகாந்தன், சிபிஐ.யின் ஜனசக்தி அலுவலகத்தின் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். ஜனசக்தி அச்சகத்தில் பணி புரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் அவருடைய காலம் கழிந்தது. அந்த நேரத்தில்தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் அவர் அறிமுகமானார். பின்னர் ஜனசக்தி அலுவலகத்தையே வீடாகவும், கட்சி உறுப்பினர்களை குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதி அவர்களுடன் காலம் கழித்தார். அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கிய நாட்டமும் அவருக்கு ஏற்பட்டது. இதனால், கட்சி உறுப்பினரான ஜீவானந்தம், தமிழாசிரியர் ஒருவரை நியமித்து, ஜெயகாந்தனுக்கு கல்வி கற்றுத் தரும் பணியில் ஈடுபடுத்தினார். சௌபாக்கியம் என்ற இதழில் ஆசிரியராக இருந்த பி.சி.லிங்கம் என்ற புலவரிடம்தான் துவக்க காலத்தில் ஜெயகாந்தன் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டாராம். பின்னர், தமிழ்ப் புலவர் க.சொக்கலிங்கத்திடம் முறையாகப் பாடம் கேட்டுத் தம் மொழியறிவை வளர்த்துக் கொண்டார். அவர் மூலம் தமிழ் இலக்கிய, இலக்கணத் தேர்ச்சி ஜெயகாந்தனுக்கு வாய்த்தது. பின்னர் அவர் பல்வேறு இடங்களிலும் முழு நேரமாகவோ பகுதி நேர வேலைகளிலோ அமர்ந்தார். 1949ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப் பட்டது. இதனால், அவர் அங்கிருந்து வேறு வழியின்றி வெளியேறி தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிக் கடையில் தாற்காலிகப் பணியில் சேர்ந்தார். அங்கே பணியில் இருந்த போதும், கிடைத்த ஓய்வு நேரங்களில் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். எதிர்பாராமல் அமைந்த இந்தக் கால கட்டம், அவருடைய வாழ்வில் முக்கியமான கட்டமாக அமைந்தது. ஜெயகாந்தன அங்கே பணியில் இருந்தாலும் அவருக்கு அரசியல் மீதான ஆர்வம் குறையவில்லை. அந்த நேரம் புதிய புதிய கட்சிகள் முளைத்தன. திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, அதன் மூலம் எழுத தி.மு.க.,வின் எழுச்சி இவற்றால், அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டெழவில்லை. சிபிஐ மெதுவாக மங்கத் தொடங்கியது. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், சி.பி.ஐ.யில் இருந்து விலகினார் ஜெயகாந்தன். அப்போது, காமராஜரின் பேச்சும் கொள்கைகளும் ஜெயகாந்தனைக் கவர்ந்ததால், அவரது தீவிர தொண்டராக மாறி, தமிழக காங்கிரஸில் இணைந்தார். இலக்கிய வாழ்க்கை: 1950களிலான இந்தக் காலகட்டத்தில்தான் ஜெயகாந்தனின் இலக்கிய வாழ்வும் தொடங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், விகடன் உள்ளிட்ட இதழ்களில் ஜெயகாந்தனின் படைப்புகள் வெளியாகத் தொடங்கின. பின்னாளில் கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் கதைகள் எழுதிய மன்னார்குடி நாராயணசாமி என்ற வைதீக பிராமணரிடம் பழகி பிராமண மொழியைக் கையாள்வதிலும் திறமை பெற்றார் ஜெயகாந்தன். இந்தத் திறமைதான் அவருடைய சிறுகதைகளில் நன்றாகப் பிரதிபலித்தது. ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகியவை திரைப் படங்களாகக் களம் கண்டன. இதில் “உன்னைப் போல் ஒருவன்” சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்ற புதினமாக உருப் பெற்றது. ஜெயகாந்தனின் அறச் சீற்றம் குறித்து வைரமுத்து: ஜெயகாந்தனை இலக்கிய உலகில் போற்றும் அளவுக்கு அவரது சீற்றத்தையும் நிச்சயமாகச் சுட்டிக் காட்டவே செய்வர். இதழாளர்களோ, ஊடக உலகினரோ அவரிடம் சென்று கேள்விகளை முன்வைக்கும்போதும் சரி, வாசக வட்டத்தில் உள்ளவர்கள் அவரிடம் அணுகும் சில சந்தர்ப்பங்களிலும் சரி… அவரின் சீற்றத்தை உணர்ந்து தம் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்வதை ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகவே கொண்டிருப்பர். எழுத்துலகின் இமயமாய் ஞானபீடம் அலங்கரித்த போது, இனி நான் எழுத என்ன இருக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தவர் ஜெயகாந்தன். போலித்தனமான நடத்தையை இனங்கண்டு தன் கம்பீரத்தைக் காட்டியவர் அவர் என்று ஒரு நிகழ்ச்சியை எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஜெயகாந்தனின் மகள் திருமணம். திருமண அழைப்பிதழுடன் ஒரு பிரபல இசையமைப்பாளர் வீட்டுக்கு ஜெயகாந்தன் சென்றதாகவும், திருமண அழைப்பிதழில் மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும், அந்த இசையமைப்பாளர் தாம் அங்கே வர இயலாதென மறுத்தார் என்றும் கவிஞர் வைரமுத்து ஒரு மேடையில் தெரிவித்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் தான் ரசிக்கும் விஷயம் அவரது அறச் சீற்றம் என்று குறிப்பிட்ட வைரமுத்து, அதன் காரணத்தை இப்படித் தெரிவித்தார்.ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. நான் ஜெயகாந்தன் பேசுகிறேன். வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன். என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது. அது உங்கள் மண்டபம்; எடுத்துக் கொள்ளுங்கள். ‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம். ‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப் போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம். விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப்பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன். கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக் கொண்டேன். சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? – என்றார் ஜெயகாந்தனைப் பற்றி வைரமுத்து. ஜெயகாந்தன் சிந்தனை முத்துகள்:

  • “ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்”
  • “மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே”
  • “நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்… மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது….ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்… “

ஜெயகாந்தனின் படைப்புலகம்: திரைப்படமாக்கப்பட்ட ஜெயகாந்தன் கதைகள்: * சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்) * ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்) * ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்) * உன்னைப் போல் ஒருவன் * யாருக்காக அழுதான் * புதுச் செருப்பு ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படங்கள்: * உன்னைப் போல் ஒருவன்’, * யாருக்காக அழுதான் * புதுச்செருப்பு கடிக்கும் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருதுகள்: *1972 – இலக்கியவாதிகளுக்கான அங்கீகாரம் என்று கருதும் சாஹித்ய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. * 2002 – இலக்கியத்துக்காக இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான ‘ஞான பீட விருது” இவருக்கு வழங்கப்பட்டது. அகிலனுக்குப் பின்னர் ஞான பீட பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளராக ஜெயகாந்தன் புகழ்பெற்றார். * 2009 – இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருது’, இலக்கியத் துறைக்காக முதல் முதலில் வழங்கப்பட்டது. * 2011 – ரஷ்ய நாட்டின் விருது வழங்கப்பட்டது. சுயசரிதை * ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (1974 ) * ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (1980 ) * ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (2009) * ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் வாழ்க்கை வரலாறு * வாழ்விக்க வந்த காந்தி (1973) (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தி சுயசரிதையின் தமிழாக்கம்) * ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் *வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957) *கைவிலங்கு (ஜனவரி 1961) *யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962) *பிரம்ம உபதேசம் (மே 1963) *பிரியாலயம் (ஆகஸ்ட் 1965) *கருணையினால் அல்ல (நவம்பர் 1965 ) *பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966) *கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967) *சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970) *ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971) *ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973) *ஜெய ஜெய சங்கர… (செப்டம்பர் 1977) *கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978) *ஒரு குடும்பத்தில் நடக்கிறது… (ஜனவரி 1979) *பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979) *எங்கெங்கு காணினும்… (மே 1979) *ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979) *கரிக்கோடுகள் (ஜூலை 1979) *மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979) *ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979) *ஒவ்வொரு கூரைக்கும் கீழே… (ஜனவரி 1980) *பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980) *அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980) *இந்த நேரத்தில் இவள்… (1980) *காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980) *காரு (ஏப்ரல் 1981) *ஆயுத பூசை (மார்ச் 1982) *சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982) *ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983) *ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983) *இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983) *இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983) *காற்று வெளியினிலே… (ஏப்ரல் 1984) *கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984) *அந்த அக்காவினைத்தேடி… (அக்டோபர் 1985) *இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986) *ரிஷிமூலம் (செப்டம்பர் 1965) *சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972) *உன்னைப் போல் ஒருவன் *ஹர ஹர சங்கர (2005) *கண்ணன் (2011) சிறுகதைகள் தொகுப்பு *ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958) *இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960) *தேவன் வருவாரா (1961) *மாலை மயக்கம் (ஜனவரி 1962) *யுகசந்தி (அக்டோபர் 1963) *உண்மை சுடும் (செப்டம்பர் 1964) *புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965) *சுயதரிசனம் (ஏப்ரல் 1967) *இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969) *குருபீடம் (அக்டோபர் 1971) *சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975) *புகை நடுவினிலே… (டிசம்பர் 1990) *சுமைதாங்கி *பொம்மை ஜெயகாந்தன் பற்றி முகநூலில் இருந்து சில துளிகள்…. ஞானபீட விருது: 2005ஆம் ஆண்டில் இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் எழுத்தாளர் அகிலனுக்குப் பிறகு இவ்விருதினைப் பெறும் சிறப்பிற்குரியவராகத் திகழ்கிறார். இவ்வாறு ஜெயகாந்தன் தமிழக அளவிலும், இந்திய அளவிலும், ஆசியக் கண்ட அளவிலும் பல விருதுகளைப் பெற்றுச் சிறந்துள்ளார். 1980, 1983, 1984 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷிய நாட்டின் அழைப்பின் பேரில் ரஷியப் பயணம் மேற்கொண்ட சிறப்பும் இவருக்கு உண்டு பரிசுகளும் விருதுகளும்: 1964இல் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் இந்திய ஜனாதிபதியின் விருதினைப் பெற்றது. 1972ஆம் ஆண்டு சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் சாகித்திய அக்காதெமி விருதினைப் பெற்றது. 1978இல் அது திரைப்படமாக வெளிவந்தபோது சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றது. அதே ஆண்டு அவரது இமயத்துக்கு அப்பால் என்ற நாவல் சோவியத் நாடு நேரு விருது பெற்றது. 1979ஆம் ஆண்டு கருணை உள்ளம் என்ற திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசு விருதினைப் பெற்றது. 1986இல் ஜெய ஜெய சங்கர நாவலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதும், சுந்தரகாண்டம் நாவலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜ சோழன் விருதும் கிடைத்தன. கடந்த ஓரிரு ஆண்டுகளாக சாகித்திய அக்காதெமியின் உயர் சிறப்பிற்குரிய பெல்லோசிப் என்ற இடத்தையும் பெற்றுள்ளார்.   தனிப்பண்புகள்: ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வையில் மார்க்சியமும் உண்டு. ஆன்மிகமும் உண்டு. இரண்டு வேறுபட்ட தளங்களிலும் கிடைத்த அனுபவங்களை அவர் தம் கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் மார்க்சிய அரசியல் பார்வை உடையவராக இருந்தாலும் காங்கிரசையும் விரும்பியுள்ளார். லெனினைப் போற்றும் இவர், காமராஜரையும் போற்றுகிறார். பாரதி, காந்தி, விவேகானந்தர் ஆகியோர் எழுத்துகளில் நல்ல பரிச்சயம் உடையவர். ஓங்கூர் சாமியார் என்பவரோடு தொடர்பு கொண்டு, சிலகாலம் சித்தர் மரபில் பிடிப்புக் கொண்டிருந்தார். திரைப்படத் துறையிலும் நாட்டம் கொண்டு அதில் ஈடுபட்டு விருதுகளும் பெற்றுள்ளார். அத்துடன், அவர் உரத்த ஆளுமை, விரிவான வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றவராகவும் திகழ்கிறார். இடைவிடாத படைப்பாக்கம் உடையவராகத் தனித்திறன் பெற்று விளங்குகிறார். ஜெயகாந்தனின் ஆளுமையின் பெரும் பகுதி அவருடைய புற உலகத் தொடர்பால் கிடைத்தது. ஜெயகாந்தன், ஒரு முற்போக்கு எழுத்தாளராவார். மனிதனுக்கு மனிதன் கொண்டிருக்கும் நேசம், உள நெகிழ்வு, வாழ்க்கையில் ஒருவனுக்கு இருக்கும் பற்று, ஒருவரின் துயர் போக்க மற்றொருவர் பாடுபடுவது -இதுவே முற்போக்கு எழுத்துக்கு இலக்கணம் என்று மாலை மயக்கம் சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இவ்விலக்கணத்திற்கு அவர் மிகப் பொருத்தமானவராகத் திகழ்கிறார். புதுமைப்பித்தனுக்கு அடுத்து ஏற்புக்கும் மறுப்புக்கும் அதிக அளவு இலக்கானவர் இவர்தான். எழுதிய நூல்கள்: ஜெயகாந்தன் 13 சிறுகதைத் தொகுதிகளும், 25-க்கும் மேற்பட்ட குறுநாவல்களும், 17 நாவல்களும், 25 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். ஒருபிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960), தேவன் வருவாரா? (1961), மாலை மயக்கம் (1962), சுமை தாங்கி (1962), யுகசந்தி (1963), உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969), குருபீடம் (1971), சக்கரம் நிற்பதில்லை (1975), புகை நடுவினிலே (1990), உதயம் (1996) ஆகியன ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுதிகளாகும். Game of Cards (1969) என்பது ஆங்கில மொழியில் வெளியான சிறுகதைத் தொகுதியாகும். ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்ற பெயரில் இவருடைய சிறுகதைகள் 15 அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, 1973இல் வெளியாகின. அதூரே மனுஷ்யா (1989) என்ற பெயரில் இந்தி மொழியில் இவருடைய மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுதி வெளியாகி உள்ளது. வாழ்க்கை அழைக்கிறது ஜெயகாந்தனின் முதல் நாவலாகும். பாரிஸுக்குப் போ, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சுந்தரகாண்டம், ஜெய ஜெய சங்கர என்பன இவருடைய புகழ்பெற்ற நாவல்களாகும். கைவிலங்கு, விழுதுகள், யாருக்காக அழுதான், ரிஷிமூலம், கோகிலா என்ன செய்துவிட்டாள், சினிமாவுக்குப் போன சித்தாளு, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து போன்றவை இவருடைய குறுநாவல்களுள் சிலவாகும். ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள், ஒரு பிரஜையின் குரல், யோசிக்கும் வேளையில் என்பன இவருடைய கட்டுரை நூல்களுள் சிலவாகும். கையாண்ட இலக்கிய வகைகள்: ஜெயகாந்தன் சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற இலக்கிய வடிவங்களைப் படைத்ததுடன் நின்றுவிடாமல், சுவை ததும்பும் கட்டுரைகளையும், ஆழமான அறிவுபூர்வமான கட்டுரைகளையும் படைத்துள்ளார். அவற்றில் சுயதரிசன, சுயவிமரிசனக் கட்டுரைகளும் உண்டு. மேலும் அரசியல், சமூகம், கலை இலக்கியம் மற்றும் பத்திரிகை அனுபவம் என்று கட்டுரைகளின் பொருள் விரிந்து பரந்ததாக அமைந்துள்ளது. ஜெயகாந்தன் சில ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். திரைப்படக் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சிறந்துள்ளார். ஜெயகாந்தன் சிறந்த மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார். ராமன் ரோலண்ட் எழுதிய நூலை மகாத்மா என்ற பெயரிலும், புஷ்கின் எழுதிய நூலைக் கேப்டன் மகள் என்ற பெயரிலும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருடைய சிறுகதைகள் மற்றும் நாவல்கள் அனைத்திந்திய மொழிகளிலும், உலக மொழிகள் பலவற்றிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும், உக்ரைன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் தம் சிறுகதைத் தொகுப்புகளுக்கும் நாவலுக்கும் எழுதிய முன்னுரைகள் விமர்சனப் பார்வையில் அமைந்து சிறந்தன. அவை அனைத்தும் ஜெயகாந்தன் முன்னுரைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டு 1978இல் வெளிவந்தன. ஜெயபேரிகை என்ற நாளிதழிலும், ஞானரதம், கல்பனா என்ற இலக்கிய இதழ்களிலும் இறுதியாக நவசக்தி நாளிதழிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்து வளர்ச்சி: தொடக்கத்தில் ஜெயகாந்தன் எழுத்துகள் தத்துவ நோக்குடையனவாகவும் பரிசோதனை முயற்சிகளாகவும் அமைந்தன. சரஸ்வதியில் வெளியான கதைகள் பாலுணர்ச்சி பற்றிப் பேசுவன. கண்ணம்மா, போர்வை, சாளரம், தாம்பத்தியம், தர்க்கம் போன்ற கதைகள் இதற்குத் தக்க சான்றுகளாகும். இவை தரமானவை என்றாலும் ஜனரஞ்சகமாக அமையவில்லை. அதற்கு அடுத்து வந்த காலக் கட்டத்தில், அவர் தம் எழுத்துகளை ஜனரஞ்சகமாக அமைத்துக் கொண்டார். ஜெயகாந்தன் தொடக்கக் காலத்தில் சிறுகதை படைப்பதிலேயே மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார். 1958ஆம் ஆண்டு, ஒருபிடி சோறு என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. விந்தனின் தமிழ்ப்பண்ணை பதிப்பகம் அதை வெளியிட்டது. தி.ஜ.ர. அத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ளார். அத்தொகுதிக்கு கண்ணதாசன் கவிதையில் புகழாரம் சூட்டியுள்ளார். சிறுகதை மன்னன் என்று சுட்டும் அளவிற்கு, சிறுகதைப் படைப்புகளில் தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார் ஜெயகாந்தன். ‘தமிழ்நாட்டில் இன்றுவரை தோன்றியுள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலருள் ஜெயகாந்தன் ஒருவர்’ என்று கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால், காலம் செல்லச் செல்ல ஜெயகாந்தன் சிறுகதை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு நாவல் மற்றும் குறுநாவல் படைப்பில் ஆர்வம் காட்டலானார். ஆனாலும் கூட, அவர் படைத்த சிறுகதைகள் இன்றும் அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன.

கட்டுரை: தகவல் தொகுப்பு:      செங்கோட்டை ஸ்ரீராம்