கூடலூர்: கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கூடலூர் அழகிய சுந்தர வேலவர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குக் கூடலூர் என்.எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை யாசிரியர் பொ. கதிரேசன் தலைமை தாங்கினார். கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சி. சையது அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி நூலை வெளியிட, முதல் பிரதியினைத் தமிழ்நாடு தொல்லியல் கழக உறுப்பினர் கா. இராமர், இரண்டாம் பிரதியினை சென்னையைச் சேர்ந்த சா. அக்கீம், மூன்றாம் பிரதியினை பி.ஏ. ஜோசப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பட்டிமன்றப் பேச்சாளர் ச. சேதுமாதவன் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்.
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன், கவிஞர் ஞானபாரதி, பி. புதுராஜா, சி. ராஜீவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, கூடலூர் வர்த்தகர் சங்கப் பொருளாளர் சு. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் நூலை வெளியிட்டுப் பேசிய தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, “சிலம்பு நாயகியான கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சென்று வழிபாடு செய்து வரும் நிலையினை மாற்றி ஆண்டு முழுவதும் வழிபாடு செய்வதற்கேற்றதாக மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதி புதுப்பித்துக் கட்டப்படுவதுடன், அங்கு சென்று வருவதற்கான சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.
மேலும், மங்கலதேவி கண்ணகி கோட்டம் புதுப்பிக்கப்பெற்றுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன், அறுபது ஆண்டுகளாக அது குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்தும், வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்தும், மங்கலதேவி கண்ணகிக்கும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்துக்கும் பெரும்புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் இரா. கணபதிராசன் என்ற தமிழாதனுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்” என்றார். முடிவில் எழில் அன்பன் நன்றி கூறினார்.