பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 20, கண்ணன் – என் சற்குரு
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
கண்ணன் – என் சற்குரு பாடலின் பொருள் விளக்கத்தை இப்போது காணலாம். பல சாத்திரங்கள் வேண்டி தேடினேன். அங்கே அளவற்ற சந்தேகங்கள்.
பழைய கதைகள் பேசும் மூடர்களின் பொய்களடங்கிய கூடையில் உண்மை எப்படிக் கிடைக்கும்? எந்த வகையாலும் உண்மைத் தெளிவு பெற வேண்டுமென்ற ஆசை மட்டும் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டிருந்த நேரத்தில் தினந்தோறும் ஆயிரம் தொல்லைகள் வந்து சேர்ந்தன.
பலநாட்கள் நாடு முழுவதும் சுற்றினேன், அப்படிச் சுற்றிவரும்போது கரைபுரண்டோடும் யமுனை நதிக்கரையில் ஒரு கிழவர் தடியூன்றிச் சென்று கொண்டிருந்தார். முகத்தில் அறிவின் ஒளி வீசியது; தெளிந்த அமைதியான விழிகள், தலையில் சடைகள், வெண்மை நிற தாடி இவற்றோடு கூடிய அந்தக் கிழவரை வணங்கி அவருடன் பல செய்திகள் பேசி வரும்போது, என் உள்ளத்து ஆசைகளை உணர்ந்து கொண்ட அவர், மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னார்:
“தம்பி! உன் உள்ளத்துக்கு ஏற்றவன், ஆழ்ந்த மோனத்திலிருப்பவன், சிறந்த மன்னர் குலத்தில் உதித்தவன் அப்படிப்பட்டவன் வடமதுரையை ஆண்டுவருகிறான். அவன் தான் கண்ணன். அவனைச் சென்று சரணடைவாயேல் அவன் உனக்கு அனைத்தையும் உணர்விப்பான்” என்றார். நான் உடனே மதுரையம்பதிக்குச் (இது வடநாட்டில் உள்ள மதுரா) சென்று அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றி வணங்கி, என் பெயரையும் ஊரையும், வந்ததன் நோக்கத்தையும் சொல்லி, நான் அறிய விரும்பியவைகளை உபதேசிக்க வேண்டுமென்று கேட்டேன். ஆனால் அவனோ நல்ல அழகன்; இளங்காளையர்கள் புடைசூழ இருந்து கொண்டு, கெட்ட பூமியைக் காத்திடும் தொழிலில் சிந்தை செலுத்திக்கொண்டு, ஆடல் பாடல் இவற்றை ரசித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முன்பு யமுனையாற்றங்கரையில் பார்த்த அந்த கிழவரைக் கொன்றுவிடலாமா என்று எண்ணினேன்.
இவனோ, ஒரு சிறிய நாட்டை வைத்துக் கொண்டு அதனைக் காப்பதில் மனம் செலுத்தி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன், இவன் எப்படி தவசீலர்களுக்கும் விளங்காத உண்மைத் தேடலுக்கு விடைகளைச் சொல்லமுடியும்? என்று கருதினேன்.
பின்னர் அவன் என்னைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று “மகனே, உன்னையே நீ ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்து கொள். நீ அறிய விரும்பும் வாழ்வு பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன் கேள். நெஞ்சத்தில் எந்தக் கவலையையும் வைத்துக் கொள்ளாமல், சிந்தையைப் பிரம்மத்தில் நிறுத்திக் களிப்புற்று, உன்னையே நீ மறந்து இருக்கும் போழ்தினில் அங்கு விண்ணையே அளக்கும் உண்மை அறிவு விளங்கிடும். அது சந்திரனைப் போல ஒளியுடையது, அது சத்தியமானது, நித்தியமானது, அதை எப்போதெல்லாம் சிந்திக்கிறாயோ அப்போதெல்லாம் வந்து உன்னைத் தழுவி அருள் செய்யும். அதனுடைய மந்திரசக்தியால் இந்த உலகுக்கெல்லாம் கிடைப்பது அளவற்ற ஆனந்தம்.
இதை எப்போதும் மாயை என்று சொல்லும் மூடத்தனமான சாத்திரங்களைப் பொய் என்று ஒதுக்கித் தள்ளிவிடு. பெருங்கடலை பரமாத்மாவாகக் கொண்டால் அதில் விளங்கும் குமிழிகளெல்லாம் உயிர்கள். வானத்தில் சோதிவடிவாக இருக்கும் சூரியன் அறிவென்றால் அதனைச் சூழ்ந்திருக்கும் கதிர்கள் எல்லாம் உயிர்கள். பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்கள் யாவையும் அந்தப் பேரறிவில் தோன்றும் வெவ்வேறு வண்ணங்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் இன்பம் பெற்று, நேர்மையாக வாழ்வர். தங்கள் சித்தத்துக்குள்ளே சிவத்தைக் காண்பார்.
இங்கு அனைவரும் ஒன்றுபட்டு உலகத்தை ஆள்வார். நல்ல உயர்ந்த யானையைப் போல ராஜநடை நடந்து பெருமைகளையெல்லாம் பெற்று வாழ்வர். இங்கு நடப்பவை யெல்லாம் எந்தையாம் ஈசன் திருவருளால் நடப்பவையே. நம்மைச் சூழ்ந்திருக்கும் கவலைகளைப் புறந்தள்ளி விட்டு இன்பம், சுகம், ஆனந்தம் இவைகள் எப்போதும் நிலைத்திருக்கும். ஞானமெனும் ஜோதி அறிவில் சிறந்து விளங்கவும்; நல்ல எண்ணங்கள் நம் மனதில் நிலைத்திருக்கவும்; தர்ம நெறியிலிருந்து சிறிதும் பிறழாமல் நமக்கிட்ட பணியை இந்தப் பூமியில் சிறப்பாகச் செய்து வாழ்வோர், கற்ற கலைகளை நன்கு பயன்படுத்திச் செல்வங்களைத் தேடி, பிறருக்கு நேருகின்ற துன்பங்களைத் துடைத்து, அன்பு கசிய மற்றவர்களைப் பார்ப்பார்கள்.
அத்தகையோர் இனிய வாழ்க்கைத்துணை, செல்வம், புகழ், ஆட்டம் பாட்டம், சித்திரம், கவிதை ஆகிய கலைகளில் உள்ளத்தைச் செலுத்தி நடப்பர், பிறருக்கு நேர்ந்திடும் துன்பம் கண்டு துடித்திடுவார். அவர்கள் விரும்புகின்ற பொருள் அவர்களுக்கு வந்து சேரும், அத்தகையோர் காட்டிலோ, புதர்களிலோ இருந்தாலும் அந்த இடம் தெய்வத்தோட்டம் எனப் போற்றலாம்.
ஞானியர்களின் குணங்களைக் கூறினேன்; அந்த ஞானத்தை விரைவில் கிடைக்கப்பெறுவாய் என்று கண்ணன் சொல்லவும், உண்மைநிலையினை உணர்ந்தேன். முந்தைய கேவலமான மனிதக் கனவுகளெல்லாம் எங்கே போயிற்றோ தெரியவில்லை. ஓர் அரிய அறிவு எனும் தனிச்சுடரை மட்டும் கண்டேன். அதனுடைய திருவிளையாடல்தான் இந்த உலகம் என்பதைப் புரிந்துகொண்டேன்.