~ கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் ~
ஆசிரியர், கலைமகள்
பல தான தர்மங்களைச் செய்தவர் கர்ண மகாராஜா. மரணத்திற்குப் பின்னர் சொர்க்கத்திற்குச் சென்ற கர்ணனுக்கு எல்லாம் கிடைத்தன. ஆனால் சாப்பிடுவதற்கு அன்னம் மட்டும் கிடைக்கவில்லை. இதனை எமதர்மராஜா விடம் சொல்லி கர்ணன் வருத்தப்பட்டார்.
பூமியில் எல்லா தான தர்மங்களையும் நீ செய்தாய். ஆனால் அன்னதானத்தைச் செய்ய மறந்து விட்டாய்! எனவே மகாளய காலக்கட்டத்தில் பூமிக்குச் சென்று அன்னதானம் செய்வாய் என்று எமன் கேட்டுக்கொண்டான்.
இப்படிச் செய்தால் மேலுலகத்தில் உனக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்றார். அதன்படி கர்ணனும் மகாளய காலக்கட்டத்தில் பூமிக்கு வந்து அன்னதானம் செய்தார். பின்னர் சொர்க்கத்திற்குப் போனபோது உணவுக்குக் கஷ்டமே ஏற்படவில்லை என்பதை உணர்ந்தார் கர்ணபிரபு!!
மகாளய காலக்கட்டத்தில் அன்னதானம் செய்வது நம்முடைய மூதாதையர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஸ்ரீராமர் தனது தந்தையான தசரதருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூதாதையர்களுக்கும் தர்பணம் செய்ததாக இதிகாச புராணங்கள் கூறுகின்றன. நீத்தார் கடன் செய்வது நமது கடமைகளில் ஒன்றாகும். மகாளய காலக்கட்டத்தில் கூட்டமாக பித்துர்கள் பூமிக்கு விஜயம் செய்வதாக ஒரு ஐதீகம்.
மகாளயம் என்பதற்கு அர்த்தம் பெரிய கூட்டம் என்று பொருள். பக்ஷம் என்றால் 15 நாட்கள். புரட்டாசி அம்மாவாசைக்கு முன்பாக வரும் 15 நாட்களை மகாளயபட்சம் என்று கூறுகிறார்கள்.
மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு லோகத்திற்குச் சென்று அருள்பாலிக்கிறார். புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்திற்குச் செல்வதாகவும் அங்கே பித்ருக்கள் மகாவிஷ்ணுவை ஆராதிப்பதா கவும் புராணங்கள் கூறுகின்றன.
எனவே புரட்டாசி மாதத்தில் மாளயத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களைத் திருப்திப்படுத்தும்.
திலம் என்றால் எள் என்று பொருள்.இந்த எள் மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியதாகச் சொல்வார்கள். எனவே தான் புரட்டாசி மாதத்தில் எள் கொண்டு விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜையை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்று அழைப்பார்கள்.
தேகம் முழுவதும் எள் நிறைந்தவராக மகாவிஷ்ணு பித்ருக்களுக்குக் காட்சியளிப்பார். இதன் மூலம் பூலோகத்தில் வாழும் உறவினர்கள் நல்ல பலன்களை அடைவார்கள் .நல்ல ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். எனவேதான் மகாளய பட்சத்தில் தங்கள் வீட்டு முன்னோர்களின் திதியில் எள் கொண்டு தர்ப்பணம் செய்வது சாலச் சிறந்ததாகும். தந்தையை இழந்தவர்கள் தான் தர்ப்பணம் செய்ய முடியும்.
வராக அவதாரத்தில் பூமியைக் கடலிலிருந்து வெளியே கொண்டு வந்தபோது மத்தியானம் ஆகிவிட்டது.
வாத்யாநிஹம் செய்யவேண்டிய காலம் வந்ததை உணர்ந்து அதைச் செய்ய முற்பட்டபோது தெற்றுப் பல்லில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் வராகர். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டையாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவைகளை மூன்று தலைமுறை பிதுர்களாக ஆக்கினர். அந்தப் பிதுர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து வழிபாடு செய்தார்.
பிண்டம் வைத்து பித்ரு காரியத்தைத் செய்த முதல்வர் அவர்தான். தெய்வம் தான் முதல் பித்ரு காரியம் செய்தது என்று மகாபாரதம் சாந்தி பருவம் 355 ஆவது அத்தியாயம் கூறுகிறது.
பகீரதன் அரச பதவிக்கு வந்த போது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. தனது மூதாதையர்கள் 60 ஆயிரம் பேருக்கு தர்ப்பணம் சிராத்தம் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தான்.
இதற்கு என்ன பரிகாரம் என யோசித்தான்? தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்குத் தர்ப்பணம் செய்தால் தன் தடைகள் நீங்கும் என உணர்ந்தான். பித்ரு வழிபாடு செய்யத் தண்ணீர் வேண்டும் என்பதை அறிந்து அவனிருந்த காட்டுப்பகுதியில் மலைப்பகுதியில் தண்ணீரைத் தேடினான். கிடைக்கவில்லை.
எனவே சிவபெருமானை வேண்டி தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலையில் வைத்திருந்த கங்கையை பித்துர் காரியங்கள் செய்ய உபயோகமாக இருக்க பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி கங்கை நதியானது பாகீரதியாக பூமிக்கு வர முக்கிய காரணம் பித்துர் காரியங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்! பகீரத தபசுக் காட்சியை மாமல்லபுரச் சிற்பத்திலும் கண்டு ரசிக்கலாம்
மகாளய காலக்கட்டத்தில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது சாலச் சிறந்ததாகும்.