திருப்புகழ்க் கதைகள் 166
உயிர்க்கூடு விடும் – பழநி | திருவிடைமருதூர்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
அருணகிரியார் இத்திருப்புகழில் குறிப்பிடும் அடுத்த சிவத்தலம் திருவிடைமருதூர் ஆகும். இங்கே உள்ள மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
சோழ நாட்டின் காவிரி தென்கரைத் தலங்களில், காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தலச் சிறப்பு
மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் ஸ்ரீசைலம் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்ச்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.
வரகுணபாண்டியனின் ப்ரும்மஹத்தி தோஷம்
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.
எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன.
அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.
மூகாம்பிகை சன்னதி
இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் ” பிரம்மஹத்தி ” தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாழிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர்.
இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. இத்திருக்கோயிலில் இருபத்தியேழு நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் அமைந்துள்ள மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் தமிழ்நாட்டிலே மூன்றாவது பெரியத் தேர் ஆகும். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.
அம்முனு அம்மையார் பாவை விளக்கு
தஞ்சாவூரில் அரசுக்கட்டிலை இழந்த மராத்திய அரசன், அமரசிம்மன் திருவிடைமருதூர் அரண்மனையில் தங்கி வாழ்ந்தார். அவரது மகன் பிரதாபசிம்மனை அவருடைய அம்மான் பெண்ணான அம்முனு அம்மணி விரும்பி, தன் திருமணம் நிறைவேற இக்கோயிலுக்கு லட்ச தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள். அவருடைய பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் இலட்சத் தீபம் ஏற்றி, அவற்றுள் ஒரு விளக்காக தன்னுடைய உருவத்தையே பாவை விளக்காக்கித் தன்னுடைய சிற்பமே தீபம் ஏந்தும் வகை செய்தாள். 120 செ.மீ. உயரமுள்ள, பித்தளையால் ஆன இந்த பாவை விளக்கு அழகிய பீடத்தின் மீது உள்ளது.
நின்ற நிலையில் அம்முனு அம்மணி தன் இரு கரங்களாலும் விளக்கினை ஏந்தியுள்ளார். அவருடைய தோளில் கிளி ஒன்று உள்ளது. இதன் பீடத்தில் அம்முனு அம்மணியின் காதல் காவியம் தமிழ்க் கல்வெட்டாக இடம் பெற்றுள்ளது. ஒரு மன்னரின் மனைவியே தீபம் ஏந்திய பாவை விளக்காக இன்றும் நிற்பது வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வாகும்.
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் என்ற நூலில் மருதவன வரலாறு, கோயில் செய்திகள், ஆண்டவிநாயகர், அகத்தியர் தரிசனம், தவக்கோலம், மகாலிங்கப்பெருமான், பிரணவப்பிரகாரம், ஆயர்பாடி கிருஷ்ணன், நட்சத்திரலிங்க வழிபாடு, பட்டினத்தார், பத்ரகிரியார், பிரம்மஹத்தி தோஷ பரிகாரம், கங்கையும் காருண்யாமிர்தமும், சக்ர மகாமேரு வழிபாடு, அசுவமேதப் பிரகாரம் உள்ளிட்ட பல தலைப்புகளில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.