பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 38
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
கண்ணம்மா என் காதலி – 2
மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே
பாரதியார், ‘மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே’ எனத்தொடங்கும் இப்பாடலுக்கு பின் வந்து நின்று கண் மறைத்தல் என்ற துறையைக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடலை நாதநாமக்கிரியை இராகத்திலும், ஆதிதாளத்திலும், சிருங்கார இரசம் வெளிப்படும் வண்ணத்திலும் பாடியுள்ளார். நான்கு பத்திகள் கொண்ட அருமையான பாடல். இனி பாடலைப் பார்ப்போம்.
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
”வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?” என்று மொழிந்தேன்.
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி ”என்ன செய்தி சொல்” என்றேன்;
”நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்.
”நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்”.
இந்தப் பாடலை பாரதியார் திருவல்லிக்கேணியில் வாழ்ந்தபோது எழுதியிருக்கலாம் என சில அறிஞர்கள் நினைக்கிறார்கள். மெரீனா கடற்கரையில் ஒருநாள் அமர்ந்திருக்கும்போது இப்பாடல் தோன்றியிருக்கலாம். புதுச்சேரியும் கடற்கரை நகரமே. எனவே அங்கே எழுதியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
நாயகன் ஒருநாள் மாலைப் பொழுதில், கடற்கரையில், ஒரு மேடையிலே அமர்ந்திருந்திருக்கிறான். அமர்ந்த வண்ணம் வானையும் கடலையும் நோக்கியவாறு இருக்கிறான். மூலைக் கடலினை ஒரு வானவில் முத்தமிட்டே தழுவி முகிழ்தலைக் காணுகிறான். நேரம் பொவதே தெரியாமல் அங்கு அமர்ந்திருந்தபோது யாரோ அவனது கண்ணிப் பொத்துகிறார்கள். கண்ணை மூடிய கைகளைத் தடவிப்பாற்கிறான். அணிந்து வந்துள்ள பட்டால் ஆன் உடையின் சலசலப்பைக் கேட்கிறான்; வாசனையை முகர்கிறான்; உள்ளத்தில் உவகை, மகிழ்ச்சி, காதல் ஊற்று தோன்றுகின்றது. “அடியே கண்ணம்மா கையை விடடீ உன் மாயமெல்லாம் எவரிடத்தில்?” எனக் கேட்கிறான்.
உடனே கண்ணம்மா
ஸ ரி ஸ நி ஸ ரி க ம ப த நி ஸ
ஹஹஹஹா
நி நி த நி த ப ம நி ப த நி
ஹஹஹஹா
மா க ச க த ம க ஸ
ஹஹஹஹா
ப த ஸ த ஸ க ஸ க ப க ப த ப த ஸ
ஹஹஹஹா
என்று ஒரு சங்கீதச் சிரிப்பு சிரித்து, கையை விலக்குகிறாள். நாயகன் திரும்பி அவளைத் தழுவி, “என்ன செய்தி சொல்?” எனக் கேட்கிறான். அதற்கு அவள் “நீல வானத்தில் என்ன பார்க்கிறாய்? நுரை ததும்பும் கடலில் என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்கிறாள். “பிரிந்து பிரிந்து செல்லும் மேகக் கூட்டத்தில் என்ன பார்க்கிறாய்? இவ்வாறு மேகம் அளந்தே நீ என்ன நலம் கண்டாய்” என நாயகி கேட்கிறாள். இவையாவற்றிலும் நின் முகத்தைக் கண்டேன். திரும்பிப் பார்த்தபோதும் உன் முகம் கண்டேன். (பின்னால் பாரதி எழுதப்போகும் வரியான பார்த்த விடத்திலெல்லாம் நின் பாவை தெரியுதடீ என்ற வரிக்கு இப்போதே அச்சாரம் போட்டுவிட்டான்)