
பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி 44
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்~
கண்ணன் – என் ஆண்டான்
கண்ணன் – என் ஆண்டான் என்ற இந்தப் பாடலை பாரதியார் புன்னாகவராளி இராகத்தில், திஸ்ர ஏகதாளத்தில் அற்புதம் இரசமும் கருணா இரசமும் வெளிப்படும் வண்ணம் பாடியிருக்கிறார். சதுர்மார்க்கம் என்பது பெரியோர்கள் இறைவனை வழிபட கடைபிடித்த நான்கு நெறிகளாகும்.
அவையாவன – (1) தாசமார்க்கம், (2) சற்புத்திர மார்க்கம், (3) சகாமார்க்கம், (4) சன்மார்க்கம் ஆகியன. இந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி திருமூலர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதிலே தாசமார்க்கம் என்பது இறைவனை அடைவதற்கான தொண்டு நெறி என்றும் அழைப்பர்.
திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பல்வேறு தொண்டு நெறிகளை குறிப்பிட்டுள்ளார். அவையாவன – (1) ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுதல், (2) மலர்களைக் கொய்து இறைவனுக்கு அர்ப்பணித்தல், (3) பசுஞ்சாணத்தால் திருக்கோயிலை மெழுகுதல், (4) ஆலயத்திலுள்ள குப்பைக் கூளங்களைக் கூட்டி சுத்தம் செய்தல், (5) இறைவனின் முன் நின்று அவனது நாமத்தைச் செப்புதல், (6) கோயில் மணிகளை அசைத்து ஓலி எழுப்புதல், (7) இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவருதல்.
வைணவ தத்துவத்தில் ஒன்று சேஷ-சேஷிபாவம். (அடிமை-ஆண்டான் பாவனை) ஆகும். இதனை
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும்பிரான்
வெறிகமழ் சோலைத் தென்காட்கரையென்னப்பன்
சிறியவென்னாயிருண்ட திருவருனே.
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் அறியலாம். ஆண்டான் அடிமை நிலையை விளக்கும் பூதத்தாழ்வாரின் மற்றொரு பாசுரத்தையும் காணலாம்.
திருமங்கை நின்றருளும் தெய்வம் நாவாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் – உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருதடக்கை எந்தைபேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்.

எம்பெருமான்தான் ஆண்டான்; நாமெல்லாம் அவனுக்கு அடிமைகள் என இப்பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார். பாரதியாரின் இந்தப் பாடல் ‘கோபாலகிருஷ்ண பாரதி’ அவர்கள் இயற்றியுள்ள ‘நந்தனார் கீர்த்தனைகள்’ போல அமைந்திருக்கிறது என எண்ண இடம் உண்டு. இனி, பாடலைக் காணலாம்.
தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே! – பாரமுனக் காண்டே! 1
துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே! – ஆணைவழி நடப்பேன். 2
சேரி முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்
பெயர் முழக்கிடுவேன்;
ஆண்டே! – பெயர் முழக்கிடுவேன். 3
பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
பாங்கிய மோங்கி விட்டான்;
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றிங்கு வந்தேன்;
ஆண்டே! – காதலுற் றிங்குவந்தேன். 4
காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே! – பக்குவஞ் சொல்லாண்டே! 5
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே! – கட்டியடி யாண்டே! 6
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் – ஆகிட வேண்டுமையே! 7
மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி – தரவுங் கடனாண்டே. 8
ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் – தொலைத்திட வேண்டுமையே! 9
பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் – வழிசெய்ய வேண்டுமையே! 10
இப்பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்.