
பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 47
கண்ணன் – எனது குலதெய்வம் – விளக்கம்
- முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்
இதில் ஒரு நயம் இருக்கிறது. எத்தகைய உருக் கொண்டிருந்தவனாக நாம் இறைவனை ஆராதித்தாலும் சரி, எல்லா உருவங்களுக்கும் பொதுவான ஒரு அம்சம் & பாதம். முகம், கைகள், உடலமைப்பு என இறை உருவங்கள் பல்வகையானாலும், பாதங்கள் மட்டும் ஒரே மாதிரியானதாக இருப்பதைக் காண்கிறோம்.
அதனால்தான் இத்தகைய இறைவனின் பாதத்தை சரணாகதியடைவதாகிய பக்தியைத் தவிர சிறந்தது வேறு இல்லை என்பார்கள். அதாவது எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கைதான் அந்த சரணாகதி.
இந்தச் சரணாகதி தத்துவத்தை விளக்க ஒரு கதை உண்டு. அனந்தாழ்வான் ஒரு வைணவ அடியவர். திருப்பதியில் தினமும் குளத்தில் நீராடி, சோலையில் மலர்கள் பறித்துச் சென்று பெருமாளை வழிபடுவார். பெருமாளின் சேவையன்றி, வேறொன்றும் அறியாத பரிபூரண பக்தர் அவர்.
ஒருநாள் ஒரு பாம்பு அவரைத் தீண்டி விட்டது. வலியைப் பொறுத்துக்கொண்டு, மலர்க் கொய்து முடித்து, குடலையில் இட்டு எடுத்துக்கொண்டு பெருமாள் கருவறைக்குச் சென்றார். வழியில் அவரை சந்தித்தவர்கள் அவர் காலிலிருந்து ரத்தம் கசிவதைக் கண்டார்கள். ‘‘என்ன ஆச்சு?’’ என்று பதறினார்கள்.
“பாம்பு கடித்துவிட்டது” என்று நிதானமாகச் சொன்னார், அனந்தாழ்வான். “அடப் பெருமாளே! அது விஷப் பாம்போ என்னவோ! உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாதா?” எனப் பிற அடியவர்கள் கேட்க “வேண்டாம்” என்ற அனந்தாழ்வான் மேலும் நிதானமாகச் சொன்னார். ‘‘கடித்தது சாதாரண பாம்பாக இருந்தால், இதோ நான் என் பெருமாளை அவர் கோயிலில் தரிசிப்பேன். அது விஷப் பாம்பாக இருந்தால் அவரை நேரடியாக வைகுந்தத்திலேயே போய் தரிசிப்பேன்!’’ – இதுதான் சரணாகதி. கொஞ்சமும் சந்தேகம் இல்லாத, அப்பழுக்கில்லாத பரிபூரண சரணாகதி.
இங்கே பாரதியார் தன்னுடைய குலதெய்வமான கண்ணம்மாவைப் பார்த்து, “கண்ணம்மா நான் உன்னைச் சரணடைந்துவிட்டேன்’ என்று கூறுகிறார். மேலும், “கண்ணம்மா, நான் பொன்னை விரும்பியவன்; உயர்வை, புகழை வ்ரும்பியவன்; என்னைக் கவலைகள் அண்டலாமோ? எனவே உன்னைச் சரணடைந்துவிட்டேன்” என்று கூறுகிறார்.
என்னுடைய உள்ளத்தில் மிடிமையும் (வறுமை,துன்பம்) அச்சமும் குடிகொண்டுள்ளன. அவற்றைக் கொன்று போக்கிடவே கண்ணம்மா என் குலதெய்வமே உன்னைச் சரணடைந்தென். எல்லாச் செயலும் என்னால் விளைகின்றது என்ற எண்ணம் நீங்கி எல்லாம் கண்ணம்மா, என் குலதெய்வமே உன் அருளால் மட்டுமே நிகழ்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள உன்னைச் சரணடைந்தேன்.
எனக்கு இனி துன்பமில்லை; சோர்வில்லை; எந்தச் செயலிலும் தோற்பதில்லை; இந்த உலகில் அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட கண்ணம்மா, என் குலதெய்வமே நான் உன்னைச் சரணடைந்தேன். நல்லது எது? தீயது எது என்பதனை அறியும் திறம் எனக்கு இல்லை. அன்னையே நல்லவற்றை நிலைநாட்டுவாயாக; தீமையை ஓட்டுவாயாக. அதற்கென் கண்ணம்மா, என் குலதெய்வமே நான் உன்னைச் சரணடைந்தேன்.
இவ்வாறு பாரதியார் கண்ணனை குலதெய்வமாகக் கோண்டாடுகிறார். “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” பாடலில்கூட இறைவனுக்கு அடிமை செய்து வாழ்வோம் என்பதை
பூமியில் எவர்க்கும் இனி
அடிமை செய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை
செய்து வாழ்வோம்
என்று பாடியவரல்லவா நமது பாட்டுக்கொரு புலவன் பாரதி.