நண்பர் B.R. மகாதேவனின் கவிதை ஒன்று
அர்ச்சனைத் தட்டு ஏந்தி பக்தி சிரத்தையுடன்
அம்மனை வழிபடச் செல்கையில்
கருவறைக்குள் எரியும் ட்யூப் லைட்
நம்மைக் கதிகங்க வைப்பதில்லை
(யார் இதை மாட்டியிருப்பார்கள்?
யார் இதைப் பழுது பார்ப்பார்கள்?)
பிரகார இருட்டு அறையில் பூட்டப்பட்ட
கருவறை குத்து விளக்குகள் முன்னால்
நம் தெய்வங்கள் நீர் கோத்த விழிகளுடன்
அடைந்துகிடப்பதும் நமக்குத் தெரிவதில்லை.
பொட்டு வைத்து பூச்சூடி பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள்
பாழ் நெற்றியுடன்
விரித்த தலையுடன் திரும்பிவருவதை
வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
குடும்பத்துடன் குதூகலமாக நேரத்தைக் கழிக்க
குத்துப் பாடல்கள் நிறைந்த திரைப்படங்களுக்குச்
சென்றுவிட்டுத் திரும்புகையில்
குழந்தைகளின் கழுத்தில்
குட்டிக் குருசு முளைப்பதைக் கவனிப்பதே இல்லை.
குல தெய்வக் கோவிலுக்குப் புறப்படும்
நீண்ட நெடிய பயணத்துக்கான வாடகை டாக்ஸியில்
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டிருப்பதைக் கவனிப்பதே இல்லை
(புனித யாத்திரையின் முதல் காணிக்கையே தசம பாகம் தான்)
ஒருவேளை கவனித்து
அடுத்த முறை எச்சரிக்கையுடன்
இந்து பெயருள்ள வாகன ஓட்டியைத் தேர்ந்தெடுத்து அழைத்தால்
அவருக்கான வங்கி கணக்கில் குல்லா மின்னும்
(அது நம் தலையில் வைத்த குல்லாதான்)
மருத்துவப் பரிசோதனைகளுக்கு முன் கழற்றப்படும் தாலி
விளக்கேற்றும் மாலை நேரங்களில் மூடப்படும்
வீட்டுக் கதவுகள்…
விழாக்காலங்களில் நடு வீட்டில் கேட்கும்
தொலைகாட்சி ஒப்பாரிகள்
விரத நாட்களில் அறிவிக்கப்படும் பிரியாணி ஆஃபர்கள்
சுற்றுலா மையங்களாகும் மலைக் கோவில்கள்
டிசம்பர் மாதம் முழுவதும்
கிறிஸ்மஸ் கொண்டாடும் கார்ட்டுன் கதாபாத்திரகள்..
மதச்சார்பற்ற அரசுகளின் முடிவற்ற சலுகைகள்
மூன்று பக்கம் கடல்… நான்கு பக்கம் க்ரிப்டோக்கள்
கண்டத் தட்டுகள்
கண்ணுக்குத் தெரியாமல் நகர்கின்றன
பனி மலை உருகி
கரைபுரண்டு ஓடிய நதி
மெள்ள மெள்ள வற்றுகிறது.
முழுவதும் வற்றினாலும்
சூட்சும நதியாக ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
ஆனால்
கண் முன் ஓடும் நதிகள் எல்லாம் கூவங்களாகிவருகின்றன
பச்சிளம் பாலகனைச் சுற்றிலும் பாய்மார்கள்.
சிந்து சாகரம் அரபிக் கடலாகிவிட்டது
நம் சிந்தையில் உறைக்கவே இல்லையே
இந்துஸ்தான் இந்தியாவானதும் புரியவே இல்லையே.
ஆனால்
இந்துஸ்தான் பெயர் மீண்டும் சூட்டவும்படலாம்.
(இந்தோனேஷியாவில் பெயர் பலகைகளில் எல்லாம்
இன்றும் இந்து மயம்தானே).
காவிக் கொடி பறக்க வேண்டிய கோட்டையில்
வெண்ணிறக் கொடி பறந்தால் வேறென்ன நடக்கும்?
தர்ம சாஸ்திரம் கோலோச்சவேண்டிய தேசத்தில்
ஆப்ரஹாமிய அரசியல் சாசனம் கோலோச்சினால்
தேசம் இருக்கும்
கட்சிகள் ஜெயிக்கும்
வளர்ச்சிகள் இருக்கும்
நாமும் இருப்போம்
ஆனால்,
நாமாக இருக்கமாட்டோம்.
அனேகமாக நண்பர் இது எதனால் உருவானது என்கிற அடிப்படையை மறந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு மீண்டுமொருமுறை நினைவூட்ட விழைகிறேன்.
அடிப்படையில் தமிழ்ச் சமுதாயம் வென்றேடுக்கப்பட்ட ஒன்று. கடந்த எழுநூற்றைம்பது ஆண்டுகால வரலாறு இது. வெல்லப்பட்டு, மறைமுக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சமுதாயம் மீண்டும் எழுந்துவர நீண்ட, நெடிய, ஒன்றுபட்ட பிரயத்தனங்கள் வேண்டும். அந்த ஒன்றுபட்ட பிரயத்தனங்களைச் செய்ய அவர்களிடையே தலைவர்கள் உருவாக வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமும் எந்த வேறுபாடுமின்றி அவரின் பின்னே அணிவகுத்து நிற்பதும் அவசியம்.
ஆனால் இன்றுவரையில் அப்படி நடக்கவில்லை. அல்லது துல்லியமான திட்டமிடல்களுடன் அப்படி உருவாகாமல் பார்த்துக் கொண்டார்கள். அப்படியே உருவாகி வந்தாலும் அவரைக் கேலி பேசி, மட்டம் தட்டினார்கள். அதுதானே இன்றுவரையில் நடந்தது? இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது?
தன் மொழி, கலாச்சார, இலக்கிய, இலக்கண, குல, குடிப்பெருமை அறியாத சமூகம் பிழைத்துக் கிடத்தல் அரிதினும் அரிது. அதற்கு முக்கியமானது மொழி. ஒருவனுடைய மொழி அழிந்தால் அவன் அத்தனையையும் இழப்பான். மொழியறிவு இருக்கும்வரையில் அவன் தனது முன்னோர்களின் கடந்தகாலப் பெருமைகளை அறிந்து கொள்ளமுடிபவனாக இருக்கிறான். அந்த மொழி அழிந்தபின்னால் அவனுக்கும் அவனது முன்னோர்களுக்குமான தொடர்ப்பு அறுத்து எறியப்படுகிறது. கண்ணிருந்தும் குருடனாக அவன் மாறுவான்.
துல்லிய திட்டமிடல்களுடன் இன்றைக்குத் தமிழ் (ஏறக்குறைய) அழிக்கப்பட்டுவிட்டது. தன் கலாச்சார, குடிப்பெருமை அறியாமல் தாழ்வுமனப்பான்மையில் அவனை உழல வைத்தாகிவிட்டது. குடிகாரனாக, சினிமாப் பைத்தியமாக, போலி நாத்திகவாதியாக திக்குத் தெரியாமல் தடுமாறுகிற அவனை ஏதாவதொரு ஆபிரகாமிய மதம் ஈர்ப்பதும் எளிதாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் வெள்ளம் தலைக்குமேல் சென்றாகிவிட்டது. இனி அதனை திசைதிருப்புவது அத்தனை எளிதான காரியமில்லை.
ஏற்கனவே சொன்னபடி தன் வரலாற்றுப் பெருமை அறிந்த தலைவர்கள் தமிழர்களிடையே இருந்து உருவாகி வந்தால்தான் அது சாத்தியம். ஆனால் அப்படியானவர்களைத் தமிழர்களே ஏற்றுக் கொள்வதில்லைதானே? அண்ணாமலையை ஆட்டுக் குட்டி எனக் கேலி பேசுபவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தானே?
இந்தியா விடுதலை பெற்றபிறகு தமிழர்களை வழி நடத்து திறனுள்ள மூன்று சமூகங்கள்தான் இருந்தன. முதலாவது பிராமணர்கள், இரண்டாவது நாடார்கள், மூன்றாவது முக்குலத்தோர்கள்.
துரதிருஷ்டவசமாக முக்குலத்தோர் வெள்ளைக்காரனால் காயடிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் இன்னமும் சிறிதுகாலம் உயிருடன் இருந்திருந்தால் வரலாறு மாற்றம் கண்டிருக்கலாம். அது நடக்கவில்லை. அவருக்குப் பின்னர் திறமையான, தலைவர்கள் அங்கு உருவாகவில்லை. வந்தவன் எல்லாம் சுயநலவாதிகளாக, தங்களின் வரலாற்று பின்புலம் அறியாதவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ மதமாற்றம் முக்குலத்தோரையும் விட்டுவைக்கவில்லை.
அடுத்து நாடார்கள் துல்லியமாகக் குறிவைக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாறிய எவனும் தன் குல, குடிப்பெருமையைப் பேசுவதில்லை. கிறிஸ்தவம் அவனை அதிலிருந்து முற்றிலும் அன்னியப்படுத்துவதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறது. மிச்சமிருக்க ஹிந்து நாடார்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மந்தையை நோக்கி ஓடிப்போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
கடைசியில் பிராமணர்கள். அவர்களுக்கு வரலாறும் தெரிந்திருந்தது. அதற்கும் மேலாக மந்தையிலிருந்து ஆடுகளை மீட்டுக் கொண்டுவருகிற சூட்சுமமும் தெரிந்திருந்தது. எனவே அவர்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள்.
1960-களில் பிராமணர்கள் தமிழகத்தைவிட்டு அடித்துவிரட்டப்பட்ட பிறகே திராவிடம் தமிழகத்தில் காலூன்ற முடிந்தது என்பதினை நினைவில் கொள்ளுங்கள். சேம்சைட் கோல் போட்ட பிராமணர்களும் அந்த மாற்றத்தைத் துரிதப்படுத்தினார்கள் என்பது வரலாறு.
இதையெல்லாம் நான் எழுதினால் பலருக்கு எரிச்சலாக இருக்கலாம். அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருக்கும் சனாதனம் என்கிற ஆலமரத்தின் வேர் தமிழகத்தில் இருக்கிறது. அந்த வேர்களை வெட்டினால் சனாதனம் சரிந்துபோகும் என்கிற நீண்டகாலத் திட்டம் இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது. அதனை எதிர்க்கும் சக்தி பிரிந்து கிடந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகும் அடிமைகளுக்கு இல்லை.
அவர்களால் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும்.
- பி.எஸ். நரேந்திரன்