April 23, 2025, 7:11 PM
30.9 C
Chennai

தேசிய இளைஞர் தின ஸ்பெஷல்: சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்!

கட்டுரை : பத்மன்

ஓர் அருள் பேரலை, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் இருந்து எழுந்து, அமெரிக்காவில் பொங்கிப் பிரவாகித்து, பார் முழுதும் பயன்பெறும் வகையில் பாய்ந்தோடியது. அந்த அருள் வெள்ளம் இன்றளவும், என்றளவும் வற்றாத ஜீவநதி. வங்கத்தில் தோன்றிய அந்த வெள்ளப் பெருக்கால், பாரதத்தில் இன்னமும் வேதாந்த ஞானம், ஹிந்து மதாபிமானம், மனிதாபிமானம், தேசப்பற்று, சமுதாயத் தொண்டு, சமூகச் சீர்திருத்தம், ஒற்றுமை உணர்வு, உலக சகோதரத்துவம் ஆகிய பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. அந்த அருள் பேரலைதான் சுவாமி விவேகானந்தர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

அந்த அருள்ஞானப் பேரொளியை, இளஞ்சிங்கத் துறவியைப் பெற்றெடுத்தது வேண்டுமானால் வங்காளமாக இருக்கலாம், கண்டெடுத்தது நமது தங்கத் தமிழகம்தான். சுவாமி விவேகானந்தர் என்ற ஞானப் பொக்கிஷத்தின் மாண்பை உணர்ந்து உலகுக்கு முதன்முதலில் உரைத்தது மட்டுமின்றி, அவர் தமது ஞானப் பெட்டகத்தைத் திறந்து உலகுக்கு எடுத்து உரைக்கவும் உதவியது நமது தமிழகமே.

சுவாமிஜி ஒரே நாளில் உலகப் புகழ் பெறவும், உலகில் பாரதம் மற்றும் ஹிந்து மதத்தின் பெருமை உணரப்பட்டு புகழ் பரவவும் காரணமாக அமைந்த, 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் (சர்வ சமய மாநாட்டில்) அவர் பங்கேற்க வழிவகை செய்து உறுதுணை புரிந்தது, தமிழகத்தின் ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதிதான். அந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல, சுவாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் நமது தமிழகமே நிழலாய் நிற்கிறது.

சுவாமிஜி, தமது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், பரிவ்ராஜகராக கடந்த 1888 முதல் 1892 முற்பாதி வரை வாராணசி (காசி) தொடங்கி, வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தார். ஆயினும், 1892 இறுதியில் தமிழகத்தில் சுவாமிஜி பாதம் பதித்த போதுதான், அவரது வாழ்வில் புதிய திருப்புமுனை நேரிட்டது. பாழ்பட்டு நின்றிருந்த பாரதத்தின் வாழ்விலும் பொற்கால விடியல் புலப்பட்டது.

1892 டிசம்பர் மாதம், பாரதத்தின் கடைக்கோடிப் பகுதியான கன்யாகுமரியில் சுவாமி விவேகானந்தர் காலடி எடுத்து வைத்தார். அதுவரை உலக நாடுகளின் மிதியடியாய் கிடந்த பாரதம், உலகின் மணிமகுடம் என்பதை உணர்த்துவதற்கான விதை அங்கேதான் ஊன்றப்பட்டது.

கன்யாகுமரி கடலின் நடுவே, பகவதி அம்மன் குமரி வடிவில் தவம் புரிந்த பாறையொன்றில், சுவாமி விவேகானந்தர் அன்னையின் அருளோடு மூன்று நாள் தவமிருந்தார். (1892 டிசம்பர் 25,26,27). இங்கேதான் ஆன்மீகத்தில் மட்டுமல்ல, சமூகப் பொருளாதார முன்னேற்றத்திலும் இந்தியர்களைத் தட்டியெழுப்பி, மீண்டும் முந்தைய மகோன்னத நிலைக்கு உயர்த்தத் தாம் பாடுபட வேண்டும் என்ற கைவல்ய ஞானத்தை சுவாமிஜி பெற்றார். இதுதான் சுவாமிஜியின் கன்யாகுமரி பிரதிக்ஞை எனப் புகழ்பெற்றது. (இந்த உலகப் புகழ் பெற்ற பாறையில் தான் 1970-ல் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் எழுந்தது.)

ALSO READ:  திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்!

இந்த உறுதி வந்தபின்னர், அதற்கான உத்வேகம் சுவாமிஜியின் மதுரைப் பயணத்தின்போது கிடைத்தது. அங்கே ராமநாதபுரம் மன்னர் அரண்மனையில் மன்னர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தபோது, சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி பங்கேற்று உரை நிகழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்திய மன்னர், அதற்கான அறிமுகக் கடிதத்தையும் தந்தார். அதன்படி அமெரிக்கா சென்று உரையாற்றி, அந்தப் புகழோடு மேலை நாடுகளை வலம்வந்து, உலகைக் கவர்ந்த ஒப்பற்ற துறவியாய் 1897-ல் தாய் நாடு திரும்பிய சுவாமிஜிக்கு பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, கும்பகோணம், சென்னை என தமிழகத்தில்தான் நாட்டிலேயே முதன்முறையாக வரவேற்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

சமயம் மற்றும் சமூகத் தொண்டு ஆற்றுவதற்கான ராமகிருஷ்ண மிஷன் எனப்படும் ராமகிருஷ்ண அறக்கட்டளை அமைப்பை நிறுவ வேண்டும் என்ற சுவாமிஜியின் எண்ணத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதும் தமிழகம்தான். 1897-ல் சுவாமிஜி நாடு திரும்பியபோது சென்னையில் பிலிகிரி ஐயங்கார் என்பவருக்குச் சொந்தமான ஐஸ் ஹவுஸ் எனப்படும் கெர்னான் கோட்டையில் பிப்ரவரி 6 முதல் 14-ம் தேதி வரை ஒன்பது தினங்கள் தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு இடங்களில் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அப்போது சுவாமிஜியின் தமிழக சீடர்களும், அன்பர்களும் ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர். கொல்கத்தா சென்றதும் இதற்கு வழி செய்வதாகக் கூறிய சுவாமிஜி அப்படியே செய்தார்.

1897 மார்ச் மாதத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அன்புக்குரிய சீடரும், சகோதரத் துறவியுமான சசி எனப்படும் ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பினார் சுவாமிஜி. பிலிகிரி ஐயங்காரின் ஐஸ் ஹவுஸ் கட்டடத்திலேயே தென்னிந்தியாவின் முதல் ராமகிருஷ்ண மடம் ஸ்தாபிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பேலூர் (கொல்கத்தா) மடத்தைத் தவிர்த்து, முதன்முறையாக அமைக்கப்பட்ட ராமகிருஷ்ண மடம் இதுதான். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் 1886-ல் பேலூர் மடத்தை சுவாமிஜி உருவாக்கியபோதிலும், சென்னை மடத்துக்குப் பின்னர்தான் அது புனரமைக்கப்பட்டது, ராமகிருஷ்ண மிஷன் அமைப்பும் நிறுவப்பட்டது. 1907-க்குப் பிறகு ,மயிலாப்பூர் பகுதிக்கு ராமகிருஷ்ண மடம் இடம் மாறியது. தற்போது ஐஸ் ஹவுஸ் கட்டடம், தமிழக அரசின் ஆதரவோடு விவேகானந்தர் இல்லம் ஆகப் பரிமளிக்கிறது.

சுவாமிஜியின் லட்சியங்களான வேதாந்த ஞானம், சமூகத் தொண்டு ஆகிய கருத்துகளைப் பரப்புவதற்காக முதன்முறையாகப் பத்திரிகைகள் தோன்றியதும் தமிழகத்தில்தான். சுவாமி விவேகானந்தர் மீது அபிமானம் கொண்ட தமிழர்களான அளசிங்கப் பெருமாள், ஜி. வெங்கடரங்கா ராவ், எம்.சி. நஞ்சுண்ட ராவ் ஆகியோர் 1895 செப்டம்பர் மாதத்தில் “பிரம்மவாதின்” என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினர். 14 ஆண்டுகள் வெளிவந்த இந்த ஆன்மிக, கலாசாரப் பத்திரிகை 1909-ல் அளசிங்கப் பெருமாளின் மரணத்தோடு நின்றுபோனது. எனினும், இந்தப் பத்திரிகையை சென்னை ராமகிருஷ்ண மடமே ஏற்று, 1914 முதல் “வேதாந்த கேசரி” என்ற பெயரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

சுவாமிஜியின் பரிபூர்ண ஆசியோடு தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய இதழ் “பிரபுத்த பாரத”. விழிப்படைந்த பாரதம் என்ற பொருள் பொதிந்த இந்தப் பெயரைச் சூட்டியதே சுவாமிஜிதான். 115 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஆங்கிலப் பத்திரிகையை, கடந்த 1896- ஜூலையில் சுவாமிஜியின் தமிழகச் சீடர்களான எழுத்தாளர் பி.ஆர். ராஜம் ஐயர் (தமிழின் இரண்டாவது நாவலான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர்), பி. அய்யாசாமி, ஜி.ஜி. நரசிம்மாசார்யா, பி.வி. காமேஸ்வர ஐயர் ஆகியோர் சென்னையில் தொடங்கினர். 24 வயதே நிரம்பிய பி.ஆர். ராஜம் ஐயர் இதன் முதலாவது ஆசிரியராகப் பொறுப்பேற்று திறம்பட நடத்திவந்த நிலையில், இரண்டாண்டுகளில் திடீரென இறந்துவிடவே, பின்னர் அல்மோராவுக்கு பத்திரிகை அலுவலகம் இடம் மாறியது.

ALSO READ:  பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

தமது தமிழ்ச் சீடர்கள் “பிரபுத்த பாரத” என்ற பெயரில் தொடங்கிய, ராமகிருஷ்ண இயக்கத்தின் இந்த ஆங்கிலப் பத்திரிகை மீது சுவாமிஜி மிகுந்த ஆர்வமும், அபிமானமும் கொண்டிருந்தார். இதனை சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி நிவேதிதா இவ்விதம் கூறியுள்ளார்: “சுவாமிஜி இந்தப் பத்திரிகை மீது தனி அன்பு கொண்டிருந்தார். இப்பத்திரிகைக்கு அவர் சூட்டிய பெயரே இதற்குச் சான்று. தமது அமைப்புகள் மீது அவருக்கு தணியாத ஆர்வம் உண்டு. நவீன இந்தியாவை வடிவமைப்பதில் இந்தப் பத்திரிகையின் பங்கு சுவாமிஜிக்கு ஓர் ஆதாரமாக அமைந்தது. தமது குருநாதரின் கருத்துகள் பிரச்சாரங்களின் மூலமும், பணிகளின் மூலமும் கொண்டு செல்லப்படுவதைப்போல இதுபோன்ற பத்திரிகைகள் மூலமும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என சுவாமிஜி விரும்பினார்.” இந்த பிரபுத்த பாரத பத்திரிகையில், “To the Awakened India” (விழிப்படைந்த பாரதத்திற்கு) என்ற தலைப்பில் கவிதை ஒன்றையும் சுவாமி விவேகானந்தர் எழுதியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் காலத்திலேயே, அவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தொகுத்து முதன்முறையாக இந்திய மொழி ஒன்றில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமையும் தமிழுக்கே உரியது. இவ்விஷயத்தில் வங்கத்தையும் விஞ்சிவிட்டது தமிழகம். தமிழகத்தில் வெளிவந்த மிகச் சிறந்த தேசபக்திப் பத்திரிகைகளில் ஒன்றான லோகோபகாரியின் ஆசிரியராகச் செயல்பட்டவர் வி. நடராஜ ஐயர். இவர் கடந்த 1898-ல் சுவாமிஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் திரட்டி, தமிழில் மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ‘ஞானத் திரட்டு’ என்னும் பெயர்கொண்ட இந்த நூலின் முதல் தொகுதியை சுவாமிஜிக்கே அனுப்பினார், நடராஜ ஐயர்.

அதனைப் பெற்றுக்கொண்டு சுவாமிஜி டார்ஜிலிங்கில் இருந்து 1898 ஏப்ரல் 15-ம் தேதி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் இதோ:

“அன்புடையீர்! உங்கள் ஏழாம் தேதி கடிதமும், எனது சொற்பொழிவுகளில் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலும் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி. பொதுவாக தமிழ் மக்களுக்கும், குறிப்பாக உங்களது பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துகளை எல்லா இடங்களிலும் பரவுமாறு செய்யவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்ற வழி அவற்றை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன். ஆசிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

சுவாமிஜியைப் பெருமைப்படுத்துவதில் தமிழர்களின் முதன்மை இதனோடு நின்றுவிடவில்லை. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே அவரது பெயரில் முதன்முதலாக சங்கம் அமைத்ததும் தமிழகம்தான். அதிலும் ஒரு புதுமை. பொய்யான பகுத்தறிவுக்கும், போலி சீர்திருத்தவாதிகளின் கருத்துகளுக்கும் மயங்கிக் கிடந்த ஒரு தன்மானத் தமிழர்தான், சுவாமி விவேகானந்தரின் உண்மைப் பகுத்தறிவையும், சத்தியமான சீர்திருத்தங்களையும் உணர்ந்துகொண்டு, அவருக்கு முதல் சங்கத்தை நிறுவினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி நாயுடு. சுயமரியாதை இயக்கத்தில் சிறிது காலம் தொடர்பு கொண்டிருந்த இவர், சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தையும், சுவாமிஜியின் கம்பீரமான படத்தையும் காண நேர்ந்ததால் ஞானக்கண் திறக்கப் பெற்றார். சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்புவதையே தனது நோக்கமாக வரித்துக்கொண்ட இவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. சுவாமிஜியின் பேச்சுகளை எல்லாம் மனப்பாடம் செய்துகொண்டு, பின்னர் அவரைப் போலவே வேடமணிந்துகொண்டு, மேடைகளில் ஏறி வீர முழக்கமிடுவார் வெங்கடசாமி நாயுடு. இறுதியில், இவ்வாறு சுவாமிஜி அமெரிக்காவில் பேசினார் என்று கூறி முடிப்பார்.

அத்தகு விவேகானந்த அபிமானியான வெங்கடசாமி நாயுடு, சுவாமிஜியைப் போலவே ஏழைகளுக்காகத் துயருற்று, அவர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்துவந்தார். இந்த நோக்கத்திற்காகவே “விவேகானந்த வேதாந்த சங்கம்” என்ற அமைப்பை நிறுவினார். சுவாமிஜி காலத்தில் அவரது பெயரிலேயே தொடங்கப்பட்ட முதல் சங்கம் இதுதான் என்பதற்கு, சுவாமிஜி எழுதிய கடிதமே சான்று. தமது பெயரில் தொடங்கப்பட்ட சங்கம் என்பதால், பெறுனர் பகுதியில் சங்கத்தின் முழுப்பெயரைப் போடாமல், சற்று கூச்சத்துடன், Viv. Society என்றே சுருக்கமாகக் குறிப்பிட்டு, கலிபோர்னியாவில் இருந்து சுவாமிஜி 1900-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி எழுதிய கடிதம் இதோ:

“அன்புடையீர்! உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப் பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல்வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிவாகை சூடட்டும். எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல்வாழ்த்துகள். இறைவனில் என்றும் உங்கள் விவேகானந்த.” (இந்த வேங்கடசாமி நாயுடு, பின்னாளில் நாட்டறம்பள்ளியில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை அமைவதற்கும் உறுதுணையாக இருந்தார்.)

சுவாமிஜியைக் கொண்டாடுவதில் அக்காலத்திலிருந்தே தமிழகம்தான் முதன்மை பெற்றுத் திகழ்கிறது. அவரது 150-வது ஜெயந்திக் கொண்டாட்டத்திலும் முதன்மை வகித்து, பல புதுமைகளைத் தமிழர்களாகிய நாம் படைப்போம். சுவாமிஜியின் லட்சியக் கனவாகிய, அனைத்துத் துறைகளிலும் உலகின் குருவாய் பாரதம் ஆகிட தமிழர்களாகிய நாம் தயாராவோம். மகாகவி பாரதியின் வாக்குப்படி, பாரதம் வையத் தலைமை கொள்ள, சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்பி, தமிழர்கள் வைரநெஞ்சுடன் தோள்கொடுப்போம்.

🕉 பத்மன் (ஜன.12 விவேகானந்தர் ஜயந்தியை ஒட்டி, ‘விவேகானந்தம் 150’ சிறப்பு இணையதளத்தில் 2013 ஜனவரி 12-ல் வெளியான கட்டுரை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories