
தமிழாளுநர்
தமிழ் வாழ்க என்று வாயொலி எழுப்பிவிட்டு, தமிழ்ப் பண்பாட்டை அழிக்க முயலும் அரசியல்வாதிகளுக்கு மாற்று மருந்தாக வாய்த்திருக்கிறார் நமது தமிழக ஆளுநர் மேதகு திரு. ஆர்.என். ரவி அவர்கள். தமிழ், தனது தாய்மொழியாக இல்லாதபோதிலும், தமிழின் மேன்மையை உணர்ந்து, அதன் செழுமையை உள்வாங்கி, அதன் உள்ளார்ந்த உயிரோட்டத்தைத் தனது பேச்சின் மூலம் பிறருக்கும் பாய்ச்சுகின்ற இந்த மேதை, தமிழகத்தின் ஆளுநர் மட்டுமல்ல, உண்மையிலேயே “தமிழாளுநர்” தான்! தமிழை நன்கு கையாளுகிறார் அல்லவா!
இந்தத் தமிழாழுளுநருடன் மேடையில் அமர்ந்து, அவரது முன்னிலையில் பேசுகின்ற வாய்ப்பு எனக்கு கடந்த 9-ஆம் தேதி, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் வைகாசி விசாகப் பெருநாளன்று மாலை கிடைத்தது.
அதே தினத்தில் விசாகம் முடிந்து அனுஷமும் பிறந்து விடுகிறது. ஆகையால் தமிழர் மரபுப்படியான வைகாசி அனுஷ தினத்தில் “திருவள்ளுவர் பிறந்த திருநாள்” விழாவுக்கு திருவள்ளுவர் திருநாள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
அன்புச் சகோதரர் ஸ்ரீ டிவி திரு. பால. கௌதமன், வழக்கம்போல் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் “திருக்குறளில் நிதி மேலாண்மை” என்ற தலைப்பில் நான் சிற்றுரை நிகழ்த்த ஏற்றமிகு வாய்ப்பையும் தந்தார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நிகழ்வின் உச்சகட்ட சிறப்பு, சிறப்பு விருந்தினர் ஆளுநர் திரு. ஆர்.என். ரவியின் சிறப்புரை. தமிழின் மீதும் தமிழ் வேதமான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருக்கும் மதிப்பும், பேரார்வமும், பெருஞானமும் அவரது பேச்சில் வெளிப்பட்டுப் பொங்கிப் பிரவாகித்தது. அனைவருக்கும் புரியும் எளிமையான, அதேநேரத்தில் நேர்த்தியான ஆங்கிலத்தில் அவர் உரை நிகழ்த்தினாலும், 10-க்கும் மேற்பட்ட திருக்குறள் பாக்களை ஆங்காங்கே பொருத்தமாக சரியான தமிழ் உச்சரிப்புடன் அவர் மேற்கோள் காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது. அதுவும் “துண்டுச்சீட்டு” இல்லாமல் இந்தக் குறள்களை சரளமாக அவர் கூறிய விதம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு தமிழின் மீதும், திருக்குறளின் மீதும் அவர் கொண்டிருக்கும் உண்மையான பக்தியையும் பறைசாற்றியது.
மனவுறுதியை வலியுறுத்தும் “எண்ணிய எண்ணியாங்கு…” குறளில் தொடங்கி, அமைச்சு, படை குறித்த குறள் அறிவுரைகளையும் அதற்கேற்ற வகையில் “சிந்தூர் நடவடிக்கை” அமைந்த சிறப்பையும் எடுத்துரைத்து, குறள் காட்டும் வழியில் மத்திய மோடி அரசின் செயல்திட்டங்கள் இருப்பதையும் சிலாகித்து, உலகம் முழுவதிலும் பல்கலைக்கழங்களில் “திருக்குறள் இருக்கை” ஏற்படுத்தும் பிரதமர் திரு. மோடியின் முயற்சிகளையும் பாராட்டி, உலக சகோதரத்துவத்துக்கு சனாதன தர்மமும் திருக்குறளும் எடுத்தியம்பும் கருத்துகளையும் விளக்கிக் கூறி, திருவள்ளுவர் ஒரு ரிஷி என்று நிறுவினார் ஆளுநர் திரு. ரவி.
தமிழர் பண்பாட்டுக்கு மாறான மேலைக் கலாசார காலண்டர் அடிப்படையில் ஜனவரி15-இல் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதை இடித்துரைத்து, பண்டைத் தமிழ் மரபுப்படி வைகாசி அனுஷத்தின்போதுதான் கொண்டாட வேண்டும் என்று தமிழக ஆளுநர் விடுத்த கோரிக்கையை உண்மைத் தமிழர்கள் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
விழாவில், அனன்யா ஃபவுண்டேஷனில் இலவச டியூஷன் பயிலும் பள்ளிக் குழந்தைகள், திருக்குறள் பாக்களுக்கு அபிநயம் பிடித்து ஆடிய பரதநாட்டியம் வெகு சிறப்பு. சிறப்புரை ஆற்றியபின் கிளம்பிய ஆளுநர், திருக்குறள் பாரதநாட்டியம் என்று அறிந்ததும் திரும்பிவந்து அவையில் அமர்ந்து முழு நடனத்தையும் கண்டு ரசித்து, குழந்தைகளைப் பாராட்டியது மேலும் சிறப்பு.
இந்நிகழ்வைத் தொடர்ந்து வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் பிறந்த நாள் என்பதை விளக்கும் வில்லுப்பாட்டையும், விமரிசையாக, அனன்யா ஃபவுண்டேஷன் மாணவச் செல்வங்கள் நடத்திக் காட்டினர். வரலாற்று, இலக்கியத் தரவுகளுடன் இந்த வில்லுப்பாட்டுக்குப் பள்ளிக் குழந்தைகளைத் தயார்படுத்திய அன்புச் சகோதரர் திரு. வெங்கடாத்ரி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.
இவ்விழாவில், “சம்ஸ்கிருத பாரதி” திரு. ராமசந்திரன் அவர்கள், திருக்குறள் கருத்துகள் சம்ஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் எதிரொலிப்பதை உரிய சான்றுகளுடன் ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தது மேலும் ஒரு சிறப்பு.
அத்துடன் திருக்குறள் பரப்பும் தொண்டில் சிறப்புற்று விளங்கும், தேனி சித்பவானந்தர் ஆசிரமத்துக்கு தமிழாகரர் சாமி. தியாகராசன் விருது, ஆளுநர் பொற்கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆசிரமத்தின் சார்பில் சுவாமி ஞானசிவானந்தர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியை ஜெயந்தி ஐயங்கார் நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார். அன்புச் சகோதரர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம், நன்றி நவின்று, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
(குறிப்பு: நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, சிறப்பாக நடத்திய ஸ்ரீடிவி குழுவினர் சார்பில், ஆளுநருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட நூல்களில், திரு. செங்கோட்டை ஸ்ரீராமின் “தமிழர் ஞான மரபில் திருவள்ளுவர்” மற்றும் அடியேன் எழுதிய “பொருள் தரும் குறள்” ஆகிய நூல்களும் இடம்பெற்றிருந்ததால் எனக்கு இரட்டை மகிழ்ச்சி.)
- பத்மன்





