
22.11.2006ல் தென்காசி – சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், ஊத்துமலை ஜமீன் குறித்த பல கதைகள்; இருதாலய மருதப்ப தேவர் குறித்த சங்கதிகள்; அவருடன் அவைப்புலவராக இருந்த ‘காவடிச் சிந்து’ புகழ் அண்ணாமலை ரெட்டியார் குறித்த தகவல்கள் என பலதும் பகிர்ந்து கொண்டார். அவற்றில் ஓரிரண்டை அப்போது நான் மஞ்சரி இதழின் தீபாவளி மலரில் எழுதியிருந்தேன்.
அதன் பின்னர் ஒரு கடிதம் எழுதினார். இன்று யதேச்சையாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இந்தக் கடிதம். பத்திரமாக வைத்திருந்தது…
என் சிறிய தாத்தா, சேஷ ஐயங்கார் அருமையாகப் பாடுவாராம். என் அம்மாவும் சொல்லியிருக்கிறார்: ‘திருமணமாகி வந்த புதிதில் என்னை பாடச் சொல்லிக் கேட்பார். கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பிரியம் அவருக்கு..’ என்று!
இவரது கடிதம் படித்தபோது பிரமிப்பாக இருந்தது….
அவரது கடிதத்தில் இருந்து…
22.11.2006
இரா.உ. விநாயகம் பிள்ளை
சந்நிதித் தெரு, வீரகேரளம்புதூர், 627861
அன்பும் பண்பும் மிக்க ஸ்ரீராம் அவர்களுக்கு. நமது ஆண்டுமலரில் பிரசுரமானதில் இருந்து இசையைப் பற்றி எழுத தூண்டுகிறது.
உங்கள் தாத்தா திரு சேஷ ஐயங்கார் அவர்கள், நான் வேண்டும் போது பாடுவார்கள்.
பாடும் சுதியோ ராகலட்சணங்களோ ஸ்வர சஞ்சாரங்களோ ஒன்றும் பயின்றதில்லை.
அவர்களுக்கு மிக நன்றாய் பயின்று பயிற்சியான ராகம் காம்போதிதான். அதை பார்வார்கள். தேவார்மிர்தமாய் இருக்கும். கர்நாடக சங்கீதத்தில் ஒரு முதல் நிலை வித்துவான் பாடும் காம்போதி… அவர் பாடும் காம்போதியின் கால் தூசிக்கு காணாது.
மேல் ஸ்தாயி பஞ்சமம், கீழ் ஸ்தாயி பஞ்சமம், ஆதாரம் இப்படி மூன்று ஸ்தாயி, அனாயாசமாக சஞ்சரித்து ஓடும். அப்படிப்பாடுவார். இவர் எப்படிப் பாடுகிறார்… மற்றக் கலைகள் அறிவில் இருந்து தோன்றுகிறது, இசைக்கலை ஆன்மாவில் இருந்து தோன்றுகிறது. இதை கட்டுரையாக எழுதினால் பிரசுரிப்பீர்களா. எழுத வேண்டுகிறேன்.
இரா. உ. விநாயகம்பிள்ளை
***
பின்குறிப்பு:
அதன் பின்னர் அவரும் எழுதி அனுப்பவுமில்லை; நானும் எதுவும் எழுதவுமில்லை! நான் சந்தித்த பத்து வருடங்களுக்கு முன்பேயே தள்ளாத நிலையில் இருந்தார்….!
14.10.2016 இன்று பேசிய நண்பர் கழனியூரான், மேற்படி விநாயகம் பிள்ளை காலமாகிவிட்டதாகக் கூறினார்.
மேலும், அவர் குறித்த அபூர்வமான தகவல் ஒன்றையும் சொன்னார்.
எல்லோரும் திருக்குறளைத்தான் மனனம் செய்து சொல்வார்கள், ஆனால், வினாயகம் பிள்ளைவாள் ஒவ்வொரு குறளுக்குமான பரிமேலழகர் உரையினை மனனம் செய்தவர். எந்தக் குறள் குறித்துக் கேட்டாலும், அதற்கான பரிமேலழகர் உரையினை அட்சரம் பிசகாமல் சொல்வார்… என்று கூறினார்.
இவர் போன்றவர்கள் என்றென்றும் நம்மால் நினைவுகூரத்தக்கவர்கள்!



