மன்மதனை உயிர்ப்பித்த மகேசன் தோற்றம்!

Published:

dakshinamurthi - 2026

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் விரும்பி ஒரு கணமேனும் பார்த்து ரசித்து, மனத்தில் தியானிக்கும் சிற்பம் இது.

கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இந்தச் சிற்பத்தைக் காணலாம்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு என்ற புத்தகத்தை அடியேன் எழுதியபோது, பல தலங்களில் உள்ள வித்தியாசமான தட்சிணாமூர்த்தி திருவுருவங்களை புகைப்படம் எடுத்து நூலில் பதிவு செய்தேன். அப்படி அந்த நூலுக்காக அடியேன் எடுத்த புகைப்படம் இது.

இதன் சிறப்பு – முனிவர்கள் புடைசூழ கல்லால மரத்தினடியில் சிவபெருமான் தியானத்தில் இருக்கிறார். கால் மீது கால் போட்டு ஆசனத்தின் இருந்தபடி இரு கைகளை ஒரு கால் முட்டியில் வைத்து நோக்கியபடி…

மன்மதன் சிவனாரின் தவம் கலைக்க மலர்க்கணை தொடுத்தான். இரு கண் விழித்துப் பார்த்த சிவனாருக்கு தனது முக்கண் நினைவு வந்தது. மூன்றாம் கண்ணைத் திறக்க, பெருநெருப்பு சூழ்ந்து மன்மதனைத் தகித்தது. தாபத்தால் மற்றோரைத் தகிக்கச் செய்யும் மன்மதனை கோபத்தால் தகிக்கச் செய்தாரே ஈசன்! கணவன் கண் முன் மாய்வது கண்டு மடிப்பிச்சை ஏந்தி நின்றாள் ரதிதேவி! உலக இயக்கத்துக்கு மன்மதனும் ரதியும் முக்கியமாயிற்றே! மன்மதனை எரித்தால் உலக இயக்கச் சுழற்சி என்னாவது?

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இந்தக்காட்சியை தத்ரூபமாகக் காட்டும், இந்தச் சிற்பத் தொகுப்பு!
பின்னர் ரதியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து, அவன் உருவத்தை இழந்தாலும் அரூபமாக ரதியுடன் உயிர்வாழ வழிசெய்தாராம்….

என்ன செய்வது…?

அரூபமாக இருந்து அவ்வப்போது
மலர்க்கணை தொடுக்கிறாயே மன்மதா!
உருவம் தலைக்காட்டி எதிர்நின்றாய் என்றால்
உனை எரிக்க முக்கண்ணன் துணை நாடி
நிற்போம் என்று எண்ணினாயா..?
நிச்சயம் மாட்டோம்!

நாச்சியார் திருமொழியில்
“தையொரு திங்களும் தரை விலக்கி”
அனங்கதேவனைத் துணைக்கழைத்த
ஆண்டாளம்மையை நாடி யாம் நிற்போம்!
எனவே உருக்காட்டி உடன் நிற்பாய்!
ரதியையும் யாம் கண்டதில்லையே!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img