
கடந்த வாரம் திங்கள் (டிச.12) அன்று, சிந்துபட்டியில் உள்ள குலதெய்வம் – வேங்கடாசபதி கோயிலுக்குச் சென்று மூலவர் உத்ஸவர் பெருமாளுக்கு திருமஞ்சனாதிகள், வஸ்த்ரம் அளித்தல், நைவேத்யம், கொடிமரம் என்ப்படும் கம்பத்தடியானுக்கு திருமஞ்சனம் என ஏற்பாடு செய்தேன். சில வருடங்கள் முன் வரை குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பா, அப்பா என மூவரும் சேர்ந்து இதைச் செய்து வந்தார்கள். ஏனோ சில வருடங்களாக அது நின்றுவிட்டது. என் அப்பா உடல்நலமின்றிப் படுத்தபோது, அவருக்காக பிரார்த்தித்து, கொடிமர திருமஞ்சனம், பெருமாள் திருமஞ்சனம் செய்வதாக மனத்தில் நினைத்துக் கொண்டேன்…
என் தந்தை ஆசார்யன் திருவடி சேர்ந்த பின்னர் இந்த மூன்று வருடங்களில் சில முறை சென்று வந்தேன், வெறுமனே அர்ச்சனை செய்து ஸேவித்து விட்டு வந்தேன் என்றாலும் திருமஞ்சனம் செய்வித்து வஸ்த்ரம் அளிக்க வேண்டுமே என்று பெரியப்பா, சித்தப்பாவிடம் சொன்னபோது, செய், வருகிறோம் என்று அனுமதி கொடுத்து, உடன் தங்கள் குடும்பத்துடன் வருவதாகவும் சொல்லிவிட்டார்கள்… ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீரங்கம் ஸ்ரீதர் அண்ணாவிடம் சொன்னேன். ‘நானாச்சு ஏற்பாடு’ என்றார்.

முன்பெல்லாம் மூலவர் பெருமாள், உபயநாச்சிமார், தாயார் மூலவர், உத்ஸவர் பெருமாள், உத்ஸவ உபயநாச்சிமார், தாயார் உத்ஸவர், கருடன், சக்கரத்தாழ்வார், கொடிமரத்துக்கான வஸ்திரம், மாலைகள், திருமஞ்சனத் திரவியங்கள், துளஸீ, பூக்கள், நைவேத்யத்துக்கு சக்கரைப்பொங்கலுக்கான பொருள்கள், வருபவர்களுக்கு பிரசாதம் போட்டுக் கொடுக்க தேவையான பொருள்கள் என எடுத்துக் கொண்டு, கோயிலுக்குச் செல்வோம். அதை நினைத்துக் கொண்டு ஸ்ரீதர் அண்ணாவிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தேன். பெருமாளுக்கான வஸ்திரங்களை ஸ்ரீரங்கத்திலேயே வாங்கி வரலாம் என்று எண்ணம்…

ஸ்ரீதர் அண்ணா, கோயிலில் தொடர்பு கொண்டபோது, அறநிலையத்துறை அலுவலரும் அர்ச்சகரும், நீங்கள் மொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்து விடுங்கள்,… அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; நீங்கள் கொண்டு வரும் பொருள்களை ஏற்கமுடியாது என்று சொன்னார்களாம். அண்ணா அளித்த தகவல்படி நானும் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டு சரி எனச் சொல்லிவிட்டேன். . ஆனால் பின்னர் நான் அர்ச்சகரிடம் அதுபற்றி பேசியபோது, முரண்பட்ட தகவல்கள் வந்தது. சரி வெகுநாட்களுக்குப் பின் குலதெய்வம் கோயிலுக்கு செய்கிறோம் என்பதால் பிரச்னை எதுவும் வேண்டாம் என்று அமைதியாக தலையாட்டி விட்டோம்.
12ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் பண்பொழி பெரியப்பாவையும் அழைத்துக் கொண்டு அம்மா,சித்தி, மருமான் முகுந்தனுடன் காரைச் செலுத்தினேன். ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடுதலாக பால், தயிர் முதலியன வாங்கிக் கொண்டு, வழக்கமாக செல்லும் திருமங்கலம் – உசிலம்பட்டி செல்லாமல், இந்த முறை, கிருஷ்ணன்கோவில் கடந்ததும் சுப்புலாபுரத்தை ஒட்டி வரும் தேனி சாலையில் திரும்பி பேரையூர், சேடப்பட்டி வழியாக தும்மக்குண்டு, சிந்துப்பட்டி வந்தடைந்தேன். சாலை நன்றாக உள்ளது. விரைவாகவும் வந்து சேர முடிந்தது. 7.20க்குப் போய்ச் சேர்ந்தோம்.

அதிகாலையிலேயே மூலவர் திருமஞ்சனத்தை முடித்து விட்டோம் என்றார் அர்ச்சகர். ஏன் என்று கேட்டபோது, மூலவர் திருமஞ்சனத்தைப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை, கோயில் அலுவலர் உத்தரவு என்றார். சொன்ன காரணம் ஒரு சப்பைக்கட்டு. உத்ஸவர் திருமஞ்சனத்துக்கு உங்களுக்காகக் காத்திருப்பு என்றார். என் மருமான் முகுந்தன் உள்ளே இறங்க, ஸூக்தாதிகள், நீராட்டல் பாசுரங்களுடன் திருமஞ்சனம் ஆனது. பின் 10.30க்கு மேல் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் தொடங்கியது.
இங்கே கொடிமர திருமஞ்சனம் விசேஷம். இதற்காக ஒருவர் மூன்று நாட்கள் விரதமிருந்து, கொடிமரத்தில் அதன் பிறகு ஏறுவார் 10லிட் விளக்கெண்ணெய் தயிர் கலந்து கொடி மரத்தின் மேலிருந்து கீழ் வரை தெளித்து துடைத்து திருமஞ்சனம் ஆகிறது. பிறகு மாலைகள் வஸ்திரம் சேர்க்கப்பட்டு, தீபாராதனை. இங்கே விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

இங்கே பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் வயல்வெளிகளினூடே கருப்பணசாமிக்கு தனி சந்நிதி. அவருக்கும் மாலை மரியாதைகள் செய்தால்தான் வழிபாடு பூர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. அவரது நேர் பார்வை இங்கே கொடிமரத்தில் இருந்துகொண்டு ஆட்சி செய்வதால் விபூதி பிரசாதம் என்று சொல்லப்படுகிறது.

மூன்றாம் தலைமுறை சகோதரர்கள் திருப்பூர் வீரராகவன், மதுரை பாலாஜி, ஸ்ரீரங்கம் ஸ்ரீதர், நெல்லை முத்துராமன் ஆகியோருடன் சித்தப்பா பெரியப்பா என பெரியவர்களும் வந்து ஆசீர்வதிக்க, குலதெய்வ தரிசனம் இனிதே முடிந்தது. ஸ்ரீரங்கம் ஸ்ரீதர் அண்ணா தயவில் அருமையான பொங்கல், தயிர்சாதம் அனைவருக்கும் பிரசாதம் ஆனது. சகோதரர்கள், அடுத்த முறை வருடந்தோறும் மே மாதம் நாம் எல்லோரும் சேர்ந்து நம் கோத்திரக்காரர்கள் சார்பில் இதே பூஜையை தொடர்ந்து செய்வோம் என்று பெருமாள் சந்நிதியில் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டோம்..!
- செங்கோட்டை ஸ்ரீராம்