1976 கால கட்டத்தில் எனக்கு ஒரு வயதாக இருந்த போது… என் பெற்றோர் தென்காசி, மேலகரம் அக்ரஹாரத்தில் சில மாதங்கள் குடியிருந்தார்களாம். அப்போது, டெல்லி கணேஷ் குடும்பமும் (பெற்றோர் / தம்பி) அங்கே குடியிருந்ததாம். அந்நாட்களில் என் தந்தையாருடன் அவருக்கு பழக்கம் இருந்ததாகச் சொல்வார். பின்னாளில் நெல்லைக்கு அவர்கள் குடிபெயர்ந்தார்கள்.
எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாததால், சினிமா தொடர்பிலோ, ஷூட்டிங் அல்லது சினிமா தொடர்பான செய்திகளிலோ நாட்டம் சிறிதும் இருந்ததில்லை. எனினும் ஒரு படப்பிடிப்புக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது…
97/98ல் நான் செங்கோட்டையில் இருந்த போது, கண்ணாத்தாள் என்று ஒரு படம்… அம்மன் சந்நிதி தெருவில் நண்பன் ஒருவன் வீட்டில்தான் ஷூட்டிங். டெல்லி கணேஷ் வந்திருந்தார். அவரின் சகோதரருடன் பேசிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு நடந்தது. டெல்லி கணேஷ் நாயனம் வாசித்தபடி, மன அழுத்தத்தில் உயிரை விடுவது போன்ற காட்சி. ஓரத்தில் நின்று பார்த்தேன். மனம் கனத்தது. இப்போதும் அந்த வீட்டுக்குள் செல்லும் போதும், கடக்கும் போதும் டெல்லி கணேஷின் அந்த இறுதிக் காட்சிதான் நினைவில் வந்து மனதைக் கலங்கடிக்கும்.
சென்னையில் நான் கலைமகள் இதழில் மஞ்சரி இதழாசிரியராய் இருந்த நேரம். 2003 என்று நினைவு. அப்போது அம்மன் தரிசனம் இதழாசிரியராக இருந்த முருகதாசன் அவர்களுடைய மகன் திருமணத்துக்கு எங்களை திருவனந்தபுரத்துக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். அப்போது அவரின் உறவினரான டெல்லி கணேஷும் உடன் வந்தார். ரயிலில் ஒரே மிமிக்ரி அமர்க்களம்தான். விதவிதமாக வேடமிட்டு தன் குரலால் அசத்தினார். ரசித்துக் கொண்டே வந்தோம். அவரிடம் கண்ணாத்தாள் காட்சியைச் சொன்னேன். சிரித்தார். ஏன் பெயருடன் டெல்லி ஒட்டிக் கொண்டது? நெல்லை கணேஷ் என்று வைத்துக் கொள்ளலாமில்லயா? நம் ஊருக்கும் புகழ் சேர்த்த மாதிரி இருக்குமே! என்று கேட்டேன். காரணம் சொன்னார். அப்போது தான் அவரது தேசபக்தியின் பரிமாணம் விளங்கியது.
அப்போது முதல் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னரும் சில நிகழ்ச்சிகளில், குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். கீழாம்பூர் அவர்கள் தான் தொடர்புப் பாலமாக இருந்தார். அண்மையில் சதாபிஷேகம் நடந்தது. என்னால் செல்ல முடியவில்லை. செல்போனிலாவது பேசி ஆசி பெறலாம் என நினைத்திருந்தேன். அதுவும் இயலாமல் போனது..! நெல்லை மண்ணின் மைந்தர், மண்ணின் மகிமைக்கேற்ற தேசபக்தர். அன்னாரின் ஆன்மா நற்கதியடைய பிரார்ப்போம்!
செங்கோட்டை ஸ்ரீராம்