
ஜூன் 9 திங்கள் மாலை, சென்னையில் ஓர் இனிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையப் பெற்றது. இரு வாரம் முன் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தபோது, நண்பர் பால.கௌதமன் கைபேசியில் இந்த நிகழ்ச்சி குறித்துச் சொல்லி, ‘நன்றியுரைக்கு நீங்கள் தான்’ என்று கூறி, மீண்டும் சென்னை வருமாறு அன்புக் கட்டளையிட்டார். அதன் பேரில் இந்த நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்தேன்!
நண்பர் கௌதம் தொடர்பில், திருவள்ளுவர் திருநாட் கழகம் அமைப்பின் கூட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாகவே அவ்வப்போது கலந்து கொள்கிறேன். முன்னர் சாமி தியாகராசன் அவர்கள், இந்த அமைப்பின் பின்னணியை விளக்கி, வைகாசி அனுஷம் தான் திருவள்ளுவரின் பிறந்த தினம் என்பதால், அதையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடப்பட முயற்சி மேற்கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது என்றார். அவரிடம், எங்கள் பகுதி தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைகாசி அனுஷத்தை ஒட்டியே திருக்குறள் திருவிழா நடப்பதை நினைவுகூர்ந்தேன்.
சாமி தியாகராசனார் அண்மையில் காலமாகிவிட்டார். அதன் பின் அவரது நோக்கத்தை விடாப்பிடியாக தொடர்ந்து இந்த சமூகத்தில் முன்வைக்க நண்பர் கௌதமன் பெரும் பொருட்செலவை தன் சக்திக்கு மீறிச் செய்து, திருவள்ளுவர் திருநாட் கழகக் கூட்டத்தை நேற்று சிறப்பாக நடத்தியிருக்கிறார்.
சென்னை மேற்கு மாம்பலம், ஆர்ய கௌடா சாலையில் உள்ள குமரன் அனுக்ரஹா அரங்கில் மாலை வேளையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த வருடம் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலில் சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பன்று வழிபாட்டுக்காக வந்திருந்த ஆளுநர் திரு. ரவீந்த்ர நாராயண் ரவி அவர்களிடம் வைகாசி அனுஷத்தின் சிறப்பைக் குறித்து சொல்லப்பட்டது. அப்போது ஒரு சிறு புத்தகத்தை ஒரு மாத காலத்துக்குள் – அவசர கதியில் தயாரித்து, வைகாசி அனுஷத்தில் வெளியிட முயற்சி செய்தேன். புத்தகம் வந்தபோதும், அனுமதி கோரல் தொடர்பில் நேரமின்மையால் ஆளுநர் கையால் அதை வெளியிட இயலாமல் போனது. அந்த நூல் – தமிழர் ஞான மரபில் திருவள்ளுவர் – என்பது!
இந்த வருடம் அந்தக் குறையைத் தீர்க்க, மேடையில் நூலின் சிறப்பைச் சொல்லி ஆளுநருக்கு பரிசளிப்போம் என்றார் கௌதம். அவ்வாறே அந்த ஏற்பாடு சிறப்பாக அமைந்தது.
ஆளுநர் உரையாற்றியபோது, மிகச் சிறப்பாக ஆபரேஷன் சிந்தூரையும் வள்ளுவரின் அமைச்சு, படை இவற்றையும் கோத்துப் பேசினார். உண்மையில் உள்ளம் கவர்ந்த சொற்கள். அவருக்கு தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாகவே வருகிறது. குறள்களை அடுக்கினார். அனைத்தும் சிறப்பான உச்சரிப்பில். ஒரு வடமாநிலத்தவர் இவ்வளவு விரைவில் தமிழ் உச்சரிப்பைக் கற்று தெளிவாக மேடையில் பேசுவதும், மேடையில் தமிழில் பேசுவதை உடனே புரிந்து கொண்டு, அதற்கு பதிலளிப்பதும் – வியப்பளிக்கும் ஒன்றுதான்! அந்த வகையில், ஆளுநர் ரவீந்த்ர நாராயண ரவி அவர்கள் நாம் கண்ட ஆளுநர்களில் தனித்துவமானவர் மட்டுமல்ல, மிகவும் மேம்பட்டவரும் கூட!
இந்த நிகழ்ச்சியில் மனம் கவர்ந்த சில விஷயங்கள் – நண்பர் பத்மன், திருக்குறளின் மேலாண்மைக் கருத்துகளை சுருக்கமாக, தனக்குக் கிடைத்த பத்து நிமிடங்களுக்குள் தெளிவாகச் சொன்னது, சம்ஸ்க்ருத ஆசிரியர் அறிஞர் திரு.ராமச்சந்திரன் பாரதீய பண்டைய மரபில் திருவள்ளுவரின் உள்ளத்தை குறைந்த நேரத்தில் கேட்பவர்களுக்கு அலுப்பு ஏற்படாத வகையில் உரைத்தது, கௌதமன் குழு சிறப்பாக நடத்தி வரும் அனன்யா ஃபௌண்டேஷன் குழந்தைகள் திருக்குறள் பாராயணம், திருக்குறள் பாடலுடன் கூடிய நாட்டியம், வைகாசி அனுஷம் கொண்டாடப்படுவதன் காரணத்தை விளக்கும் வில்லுப்பாட்டு என அசத்தியது, நிகழ்ச்சியை அலுப்பு ஏற்படாத வண்ணம் நெறிப்படுத்திய நெல்லை ஜெயந்தி ஐயங்காரின் தொகுப்பு… நிகழ்ச்சியின் எந்த இடத்திலும் சிறு தொய்வு இன்றி நண்பர் கௌதமின் ஸ்ரீ டிவி குழுவினர் சிறப்பாகச் செய்திருந்த ஏற்பாடுகள் எல்லாம் நெஞ்சில் நிறைந்தவை, என்றும் நிற்பவை!
முதல் நிகழ்ச்சி முடிந்து கிளம்பிவிட்ட ஆளுநர் அவர்கள், அடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு, மேடையில் இருந்த நாற்காலிகளை கீழே போடுங்கள், நானும் அமர்ந்து சிறிது நேரம் பார்க்கிறேன் என்று சொல்லி அமர்ந்து, நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து பாராட்டிச் சென்றது, அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்க்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது!
ஆளுநரை வழியனுப்பி வைத்த நண்பர் ஒருவரிடம் ஆளுநர் கிசுகிசுத்தாராம்… ‘என்ன திருப்தியா?’ என்று! நமக்காக நம் ஆளுநர் – என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பெற்றது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!





