பாரதியாரின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.ஆர்.ஹரன், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நேற்று படிகளில் ஏறும் போது திடீரென மயங்கிச் சரிந்து, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
சிலரது இழப்புகள் நம்மை நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்யும். நான் குடும்பத்தில் அப்படி ஓரிருவரை இழந்து தவித்திருக்கிறேன் என்றாலும், மிகக் குறுகிய குடும்பக்கட்டுக்குள் உள்ள எனைப் போன்றோருக்கு நண்பர்களே உறவுகளைப் போன்ற நெருக்கமாக அமைந்திருக்கின்றனர். அண்ணே அக்கா தம்பி என வாய்வார்த்தைக்கு அழைத்தாலும் உள்ளன்புடனே அவ் உறவுகளின் விதமாகவே பழகியதுண்டு…
அப்படி ஓர் உறவாக அமைந்த மூத்த நண்பர் பி.ஆர்.ஹரன் மறைவுச் செய்தி நிலைகொள்ள விடாமல் தவிப்பில் தள்ளுகிறது.
அண்மைக் காலத்தில் இப்படி இன்னொரு நண்பரின் மறைவும் என்னை வாட்டியதுண்டு. கல்கி நிறுவன தீபம் இதழில் பொறுப்பாசிரியராக இருந்த சீனிவாச ராகவன். அப்படி ஒன்றும் மிக நெருக்கம் என்றில்லாவிட்டாலும், பார்த்துப் பேசிப் பழகி கருத்துப் பரிமாறி… அவ்வளவுதான். கடன்சுமையால் கழுத்தை நெருக்கி வாழ்வை முடித்துக் கொண்டார். எதிர்பாரா விதமாக, அவர் விட்டுச் சென்ற பணியுடன் அவர் இருந்து செய்த அதே பணியில் தீபம் பொறுப்பாசிரியாக என்னை அழைத்து அமர்த்தினார்கள் கல்கி நிர்வாகத்தில்! ஆனால்… அவர் இருந்த அந்த அறையில், அவர் அமர்ந்த அந்த இடத்தில்… ஒவ்வொரு கணமும் அவர் நினைவுகளே வாட்டி வதைத்தன. அங்கேயே அமர்ந்து வேலை செய்யவும் மனம் ஓடவில்லை. ஒவ்வொரு நொடியும் ராகவன் வந்து போய்க் கொண்டிருந்தார்.
விளைவு, தீபத்தை விட்டு வெளியேறலாம் என முடிவு செய்தேன். அடுத்த நபர் அமையும் வரை பாருங்கள் என்றார்கள். எனக்கு பி.ஆர்.ஹரனே நினைவில் வந்தார். அப்போது அவர் ஹிந்து மித்திரனில் பணி செய்து வந்தார். ஆன்மிக கலாசார சுவை உள்ள நபர். ஆங்கிலத்தில் சுவராஜ்யாவுக்கு எழுதி வந்தார். இன்னும் சில வெளி வேலைகளும் உண்டு. ஏனோ கல்கி நிர்வாகத்தில் போட்ட சில கட்டுப்பாடுகள் ஹரனுக்கு ஒத்துவரவில்லை. வேண்டாமே ஸ்ரீராம்… எனக்காக மெனக்கெட்டாய்… பரவாயில்லை… என்று ஒதுங்கினார். சொல்லப்போனால்… மிகச் சரியாக சென்ற வருடம் இதே ஜூன் மாத இறுதியில்தான் இந்த நிகழ்வு..!
14 வருடங்களுக்கு முன் நட்பு முறைத் தொடர்பில் வந்தவர். வீட்டுக்கு வருவார். தேநீருடன் விடை பெற்றுச்செல்வார். 3 வருடம் முன் ஒன்றாய் ஹிமாலயம் சென்றோம். ஒரே அறையில் தங்கினோம். ஆஜானுபாஹுவாய்… என்று சொல்வதற்கேற்ற உருவம். ஆனாலும் உடல் கோளாறு. மூச்சு வாங்கியது. மெதுவாகவே நடந்து வந்தார். இயன்ற பணிவிடை செய்தேன். வயதில் மூத்தவர். நேற்று வரை நிலை மாறாமல் நெஞ்சுடன் நின்று பொருந்தி நின்றார். இன்று அந்த நெஞ்சும் நின்று நிலை கொள்ளாது சென்றார்.
அடுத்த மூன்று தினங்கள் பாரதியார் நாடகத்துக்காய் முழு மூச்சுடன் பணி செய்தார். ராஜபாளையம், விருதுநகர், தென்காசி-ஆய்க்குடி என ஏற்பாடு. ஆய்க்குடி நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என்றேன். ஆர்வத்துடன் காத்திருந்தேன். அவ்வளவுதான்…!
***
உங்கூட சேர்ற ஆட்களும் இப்படி ஒத்தக்கட்டையாவா இருக்கணும்?! – அடிக்கடி கேலி செய்வார் என் தாயார். 13 வருடங்களுக்கு முன் ஒரு நாள் நண்பர் ஒருவருடன் என் மயிலாப்பூர் வீட்டுக்கு இதழியல் வேலையாய் வந்து அறிமுகமானார் ஹரன் அண்ணா. அவர் குறித்து விசாரித்தபோது என் தாயார் அப்போதும் அதையே சொல்லிச் சிரித்தார்.
3 வருடங்களுக்கு முன் இரு வார ஹிமாலயப் பயணத்துக்கு அழைத்தார் கௌதமன். அப்போது ஹரன் அண்ணாவும் வந்தார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். காஞ்சி மட தீவிர விசுவாசி. சொல்லப் போனால், காஞ்சி பெரியவருக்கு ஜெயலலிதாவின் தமிழக அரசு அளித்த அவமானத்தைக் கண்டு கொதித்துப் போய், அதன் பின்னர் எங்களுடனான தொடர்புக்கு வந்தவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. மூத்த சகோதரியின் வீட்டில் உடன் வசித்து வந்தார்.
ஹிமாலயப் பயணம் எங்களுக்குள் புரிந்துணர்வை அதிகப்படுத்தியது. காசியில் காஞ்சி மடத்தில் அமர்ந்து இருவரும் ருத்ரம் சமகம் மூன்று முறை சொன்னோம். காசியில் ருத்ரம் சொல்வது அவ்வளவு புண்ணியம் என்றார். உடன் வந்த நாட்களில் எல்லாம் சந்த்யாவந்தனத்தையும் கர்மாக்களை சிரத்தையுடன் செய்தார்.
நைமிசாரண்யம் சந்நிதியில் பாசுரத்துடன் சாத்துமுறை சொன்னேன். லயித்துக் கேட்டார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணும் அருகமர்ந்து கண்களில் நீர் சொட்ட பாசுரம் கேட்டார். அதை கவனித்துவிட்ட ராஜேஷ், ப்ரியா, ஹரன் அண்ணா மூவரும் என்னை கேலி செய்து கொண்டே வந்தனர். ‘நைமி மாப்பிள்ளை’ என்றார் ராஜேஷ். சீராம் அண்ணாவுக்கு பொண்ணு ரெடி; நான் பேசறேன் என்றார் ப்ரியா.
அங்கிருந்து தொடங்கிய கேலிப் பேச்சு பயணம் முழுதும் தொடர்ந்தது. ஜகந்நாத புரியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறினோம். ஆந்திரப் பக்கம் வந்த போது, சிறு பெண் ஒருத்தி என் அருகே அமர்ந்தாள். இட நெருக்கடியில் ஒட்டியபடி அமர்ந்த அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு, என்னைக் கைகாட்டி ஹரன் அண்ணாவும் ப்ரியாவும் வழக்கம் போல் கலகலப்பாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டே வந்தார்கள். சற்று நேரம் கடந்தது. மீண்டும் பேச்சை எடுத்தார் ஹரன் அண்ணா. அப்போது அவரிடம் சொன்னேன்… “அண்ணா… அந்த 23 வயசுல எங்கப்பாம்மா எனக்கு கல்யாணத்த செஞ்சி வெச்சிருந்தா… இப்ப இந்த மாதிரி சற்றேறக்குறைய வயசுல ஒரு பொண்ணு எனக்கு இருந்திருப்பா..”
அந்த நிமிடம், ஹரன் அண்ணாவின் கலகல முகம் அப்படியே மாறியது. முகத்தில் இறுக்கம். அதன் பின் ஏதும் அவர் பேசவில்லை. சென்னை நெருங்கும் போதுதான் அவரது ஏக்கம் வெளிப்பட்டது.
நாட்டு பற்றுடன் சமூகப் பணிகளில் இறங்கி விட்டவருக்கு மனைவி குழந்தை குடும்பம் எல்லாம் தனிப்பட்ட வகையில் அமைத்துக் கொள்ளத் தோன்றாதுதான்! உலகமே ஒரு குடும்பம் எனும் எண்ணத்துக்கு வந்து விடுவோம். ஆனாலும், மற்ற குழந்தைகளைக் காணும் போது, இனம் புரியாத ஏக்கமும் சோகமும் மனத்துள் ஆழப் பதிவதை நாம் வெளிக் காட்டவில்லையானாலும், முகம் காட்டிக் கொடுத்துவிடும்!
ஒரு பத்திரிகையாளராக, அருமையான நடையுடன் கூடிய எழுத்துக்குச் சொந்தக்காரராக, அறிவுஜீவித் தளத்தில் இயங்கியவராக, எத்தனையோ பேரின் நட்புறவைச் சுமந்தவராக, பலரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளிவிட்டு இவ்வுலகை விட்டுச் சென்றிருக்கிறார் ஹரன் அண்ணா..!
***
மகாகவி பாரதியாரை இசை நாட்டிய நாடக வடிவில் அமைத்து வழங்கி வருகிறார் இசைக்கவி ரமணன். அந்தக் குழுவில் முக்கிய பாத்திரத்தில் ஏற்று நடித்து, குரல் கொடுத்து, எழுதி செப்பனிட்டு, பாரதி பித்தராய் மாறியவர் பி.ஆர்.ஹரன். இதுவரை பாரதி நாடகத்தை சென்னை, கோவை, தஞ்சை என பல இடங்களில் நடத்திய எஸ்பி கிரியேஷன்ஸ் குழுவினர், மிகவும் பெருமிதத்துடன், பாரதியின் சொந்த மண்ணான நெல்லைக்கு வந்து, அந்த நாடகத்தை நடத்திக் காட்ட பெரும் ஆர்வத்துடன் இருந்தார்கள். அதனால், வருகிறான் மஹாகவி தென்திசை நோக்கி! என்று குறிப்பிட்டு, ஜூலை 4ம் தேதி சென்னையில் பொதிகை ரயிலில் ஏறினார்கள்.
ஜூலை 5 வியாழக்கிழமை இன்று, ராஜபாளையத்திலும், ஜூலை 6 விருதுநகரிலும், ஜூலை 7 தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடியிலும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஆசைகளுடன் ரயில் ஏற விரைந்த பி.ஆர்.ஹரனுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில், படிகளில் ஏறியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிச் சரிந்துள்ளார். இதனால் இந்த நிகழ்ச்சிகளை அந்தக் குழுவினர் ரத்து செய்துள்ளனர்.
இசைக்கவி ரமணனின் பாரதி யார்? நாடகத்தின் முன்னோட்ட வீடியோ. இதில், பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர் பி.ஆர்.ஹரன்! இந்த வீடியோவின் இறுதியில் வருவது போல், காலவெளியில் கரைந்துவிட்டார் ஹரன்.
– நினைவுகளுடன் …
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்




