திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-3

சென்னை மட்டுமில்ல… தமிழ்நாட்ல பல பகுதிகள்ல மழை வெள்ளம் வந்து, இவ்ளோ சேதம் ஏன் தெரியுமா?
என்ன சொல்ல வர்றீங்க…?
இங்கே கும்பாபிஷேகம் பண்ணாங்கள்ல…! அது ரொம்ப தப்பும் தவறுமா நடந்துச்சு. ஆகம விரோதம்தான். தட்சிணாயனத்துல வேணாம்னோம். கேக்கல. உத்தராயண துவங்கி, பங்குனில செஞ்சிருக்கலாம். ஆனா, இவங்க வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு காசு பாக்கணும்கிற ஒரே குறிக்கோள்ல முன்னாடியே மூலவர் கும்பாபிஷேகம் செஞ்சிட்டாங்க. இதனால், ஆட்சி செய்பவருக்கு பாதகம்னு எவ்வளவோ சொன்னோம்… அதான் பாருங்க, முதலமைச்சருக்கு எவ்ளோ அவப் பெயர் வந்து…. அடுத்து பாருங்க… ஆட்சில தொடர முடியாது …
***
நம்ம கோயிலுக்கு வரக்கூடாதுன்னே முடிவு கட்டி இயங்கறானுங்க… போலீஸ்காரங்க இத்தன பேரு தேவையா? எல்லாம் ஒரு பக்கம் எங்கயோ உக்காந்துகிட்டு… டூட்டி பாக்கறாங்களாம். இவங்கதான் அதிகமா கோயிலை அடைச்சிருக்கிறது…!
***
எத்தன பேரு இங்க லால்குடி, நத்தம், வாளாடி, துறையூர்ன்னு வருவாங்க! இப்ப பாருங்க அவங்கள எல்லாம் கோயில்ல அதிகம் பாக்க முடியல… இப்ப மூணு வருசமா… எல்லாரும் ஸ்ரீரங்கம் கோயில்ல இந்த மூணு நாள் நமக்கு இல்லன்னு முடிவு பண்ணிட்டாங்க. மூணு நாளும் போலீஸ்காரங்கதான் கன்ட்ரோல்னு தெரிஞ்சிக்கிட்டு சுத்திமுத்தி இருக்கற திவ்ய தேச கோயில்களுக்கு போயிடறாங்க…. காசு உள்ளவன் மட்டும் இங்க ராத்திரி உள்ள பூந்துக்கிறான்…
****
இப்படித்தாங்க… நேத்து ராத்திரி சுத்துப்பட்டு சனங்க எல்லாம் வந்தாங்க. அவங்கள ராத்திரி 11 மணி வரை நிக்க வெச்சி, கோயில்ல இனி நீங்க போக முடியாது… எல்லாம் ஃபுல். அப்டின்னு அனுப்பிட்டாங்க. ஆனா வழக்கமா காலங்காலமா அவங்கல்லாம்… அந்த மணல் வெளில தங்கியிருந்து, மத்யானம் போய் பரமபத வாசலையும் ரங்கநாதரையும் சேவிச்சுட்டு வருவாங்க… திடீர்னு 11 மணிக்கு மேல பாவம்… அவங்க என்ன செய்வாங்க? தங்குறதுக்கு இடமும் இல்லை. எங்கயும் ரூம், சத்திரம் எதுவும் இல்ல… இதுனாலயே பயங்கர கூட்டம்.. ரங்கா ரங்கா கோபுர வாசல்ல….
******
யாராயிருந்தா என்ன? எவரையும் விட முடியாது….ங்கிறான் அவன். ரெண்டு வருசம் முன்னே ஒரு கூத்து நடந்தது தெரியுமா? அப்போ கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் இருந்தாங்க. அவங்க வழக்கமா வர்ற மாதிரி சுடிதார்ல, வீட்டுக்காரர் புள்ளைங்கள கூட்டிட்டு வந்திருந்தாங்க. இங்க இருந்த ஒரு டிஎஸ்பி, அவங்களை ஓரமா நிக்கவெச்சிட்டார். அவங்க.. ஐயா நான் கலெக்டருங்க.. அப்டின்னார். எந்த மாவட்ட கலெக்டருங்க..? யாராயிருந்தா என்ன என்று பேசியிருக்கிறார். பின்னர் பின்னால் எங்கோ கூட்டத்தில் வந்து கொண்டிருந்த உதவியாளர் வந்து, சார் இவங்கதான் திருச்சி கலெக்டர் என்று சொன்ன பின்னர், ஸாரி கேட்டு ஒதுங்கியிருக்கிறார் அந்த வேற்று மாவட்ட டிஎஸ்பி.
அட நீங்க வேறங்க..இங்க ஜேஸியவும் நிக்க வெச்சாங்க… போன வருசம்!
– இப்படியாக பேச்சு காதில் விழுந்தது. இடம் : திருவரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் போற வழியில் வரிசையில் நின்னபோது… பக்தர்கள் கிட்டேயிருந்து!