தில்லி என்ற பெயரே தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததுதான்!

இந்தப் பெயர் வந்த விதம் சுவாரஸ்யம் மிகுந்தது. இன்னும் தேடிப் புகின், வேறு ஏதும் தோன்றலாம்.

செய்திகளைப் போடும்போது, எல்லாரும் டில்லி, புது டில்லி, டெல்லி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் ஏன் தில்லி, புது தில்லி என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார் நம் தினசரி இணையத்தில் செய்தி அளிக்கும் நண்பர்.

தினமணியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி… தில்லி என்று எழுதுவது பழக்கம் ஆகிவிட்டது. தினமணியில் நான் இருந்த காலத்தில் சில தமிழ்ச் சொற்களை அதன் வேர்ச் சொல், பயன்பாட்டு விதம், அதன் வரலாறு ஆகியனவற்றைச் சொல்லி, இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று தினந்தோறும் நடைபெறும் எடிட்டோரியல் மீட்டிங்கில் வற்புறுத்துவேன். (ஆசிரியர் குழுக் கூட்டம் என்று தமிழில் குறிப்பிடக் கூடாதா என்று கேட்காதீர்கள். நான் தினமணியில் இருந்த சுமார் 4 வருடங்களில், ஆசிரியர் என்று ஒருவர், ஒரு நாளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நான் பார்த்ததில்லை. ஏதோ முன்னோர் செய்த புண்ணியம், தினமணியில் இருக்கும் ஒரு சில தியாகிகளால்…. வேலை ஏதோ நடந்து கொண்டிருக்கிறது…. எனவே அதை எடிட்டோரியல் போர்ட் மீட்டிங் என்று அழைப்பதே பொருத்தமானது)

இவ்வகையில், சில நல்ல தமிழ்ச் சொற்களை அதன் பொருள் உணர்ந்து, தினமணியில் முன்னர் ஆசிரியராக இருந்த திருவாளர்கள் ஏ.என்.சிவராமன், கஸ்தூரி ரங்கன், ஐராவதம் மஹாதேவன் உள்ளிட்டோரும், ஆசிரியர் குழுவில் இருந்த அறிஞர் பெருமக்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, தில்லி என்பதும்.

இந்தப் பெயர் வந்த விதம் சுவாரஸ்யம் மிகுந்தது. இன்னும் தேடிப் புகின், வேறு ஏதும் தோன்றலாம்.

இரு தினங்களுக்கு முன்னர் ஆய்வாளரும் அறிஞருமான ராமச்சந்திரன் பேச்சுவாக்கில், ரேழி, திண்ணை என்று ஏதோ சொல்ல, தில்லியும் அதன் பொருளும் வாக்குவாதத்தில் வசமாக மாட்டிக் கொண்டது.

நெல்லை வட்டாரத்தில், வீட்டின் வாசலில் திண்ணை என்பது இருக்கும். அடுத்தது நடை, ரேழி என்று செல்லும். இந்த ரேழி என்பது எதன் திரிபுச் சொல் என்று பார்த்தால்… அழகான தமிழ்ச் சொல்லான இடைகழியில் இருந்து அதன் வேர் தொடங்குகிறது.

வராண்டா என்று இன்று நாம் புழங்கும் சொல்லின் தமிழ்ச் சொல் இடைகழி. இதனை முன்னறை, முற்றம், ரேழி என்று வித விதமாய்ச் சொல்லலாம். இடைகழியே ரேழியாகியிருக்கும். வெளி வாயிலை அடுத்த உள்ளிடப் பாதை, அல்லது உள்ளே புகும் பாதை இடைகழி. இதன் இன்னொரு திரிபு, தேகழி அல்லது தேகளி.

தேகளி என்றதும், எனக்கு பெருமாள் நினைவுக்கு வந்தார். திருவாளர் ராமச்சந்திரனார் அதை எடுத்துக் கொடுக்க, தேகளீசப் பெருமானின் புராணம் அங்கே ஓடியது.
முதலாழ்வார்கள் மூவருக்கும் காட்சி அளித்து, ஆழ்வார்களின் அவதாரப் பெருமைகளைத் துவக்கிவைத்து, தமிழ் மறை தழைத்தோங்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவராயிற்றே…!

திருக் கோவிலூர். வீட்டின் திண்ணை. இருக்கும் சிறிய இடத்தில் பொய்கையார் படுத்திருக்க, வெளியே நல்ல மழை. அடுத்தவர் பூதத்தார். மழைக்கு ஒதுங்க அங்கே வந்தார். படுத்தவர் எழுந்து அடுத்தவருக்கு அமர இடம் அளித்தார். இருவரும் அமர்ந்து பெருமாள் பெருமையைப் பேச, மூன்றாமவர் பேயாரும் வந்தார். அமர இடமில்லையாயினும், மனத்தில் இடம் இருக்க மூவரும் அச்சிறு இடத்தில் நின்றபடி பொழுதைக் கழிக்க, அவர்களின் ஊடே நான்காமவராய் பெருமாள் நெருக்கினார். மூவரும் நான்காமவரை உணர்ந்து கொள்ள, அங்கே பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்து தனக்கு ஒரு பெயரையும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அது இடைகழி நின்ற பிரான் என்பதாக!

இடைகழியில் இருந்து அவர்களுக்கு மட்டுமல்ல… தெய்வத் தமிழ் சமயமாகிய வைணவத்துக்கு ஒரு வாயிலையும் ஏற்படுத்திக் கொடுத்தார் அந்தப் பெருமான். அதான்.. “கேட் வே ஆஃப் வைஷ்ணவிஸம்” என்று சொல்லலாம். அந்தப் பெருமானே…. தேகளீசன் எனப்பட்டார். அதாவது, தேகளி என்ற இடைவாசலில் நின்ற பிரான் என்பதாக!

ஆக, தேகளி என்ற இந்தத் தமிழ்ச் சொல்லே, வடக்கு சென்று அங்கும் ஆண்டிருக்கிறது.

தில்லி – 12ஆம் நூற்றாண்டு வரை இந்திரப்பிரஸ்தம் என்றே அழைக்கப் பட்டுள்ளது. பாண்டவர்கள் காண்டவ வனத்தை அழித்து, தங்கள் இந்திரப்பிரஸ்த நகரை உருவாக்கிக் கொண்டதாக மகா பாரதம் கூறுகிறது. அதுவே, தற்போதைய தில்லி.

மன்னன் பிரித்விராஜ் சௌஹானை ஆப்கனைச் சேர்ந்த மொஹம்மத் கோரி 1192ல் வீழ்த்தி, 1200இல் வட இந்தியாவில், தன் ஆட்சியையும் அடிமை வம்சத்தையும் ஏற்படுத்தினான்.

அதற்கு ஒரு நூற்றாண்டு முன்னதாக, கஜினி முகமது என்ற கொள்ளையன் 17 முறை பாரதத்தின் மீது படை எடுத்து வந்து, இங்கிருந்த செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்றான். சோமநாதர் கோயில் உள்ளிட்ட வட இந்திய ஆலயங்கள் இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் சொல்லும்.

இங்கே எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மாணவன் ஒருவன் தேர்வில் தோல்வியடைந்தால், அவனை உற்சாகப் படுத்துவதாக நினைத்து, கஜினி முகம்மது 17 முறை படையெடுத்து, 18 வது முறை ஜெயிச்சான்ட்டா… அதுனால் மனசை தளர விடாதே என்பார்கள். உண்மையில், அவன் 17 முறை படை எடுக்கவும் இல்லை, 18 வது முறை ஜெயிக்கவும் இல்லை. ஒவ்வொரு முறையும் கொள்ளை அடித்துவிட்டு, மாட்டிக் கொள்ளாமல் தன் நாட்டுக்குச் சென்று விடுவான். அதனால் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில், துருக்கிய அரசை நிறுவிய கோரி, தங்கள் வம்ச அரசு பின்னும் தொடர்வதற்காக, நுழை வாயிலாக அந்த நகரத்தை முதலில் கூறிக் கொண்டான். அதாவது தங்கள் வருகையின் நுழைவாயில் என்ற பொருளில், ‘கேட் வே ஆஃப் துருக் ரூல்’ என! துருக்கிய அரசின் நுழைவாயில் என்ற பொருளில் நகருக்குப் பெயர் அமைந்தது. அதுவே தெஹ்லி.

இவ்வாறு தேஹளி, தெஹ்லி, திஹ்லி என்றெல்லாம் ஆகி, பின்னர் அது தில்லி ஆனது. இந்தியாவில் மொஹமதிய கலாசாரத்தின் நுழை வாயிலாக அறியப் பட்டு, இப்போது, இந்தியாவைப் பற்றி உலக நாடுகள் அறிந்துகொள்ளும் நுழைவாயிலாக மாறிப் போனது. தலைநகர் தில்லியிலும் சுற்றிலும் நடைபெறும் மோசமான சம்பவங்கள், ஊடகங்களின் தயவால் உலக நாடுகளில் இந்தியாவைப் பற்றிய மோசமான பிம்பத்தை வெளிப்படுத்தும் நுழைவாயிலாகவும் அது மாறிப் போனது.

எப்படி இருப்பினும், தமிழர்களே… தில்லி – தமிழ்ப் பெயர்ச் சொல். வடக்கு வாழ்ந்தாலும், தெற்கு தேய்ந்தாலும், தெற்கு கொடுத்த பெயரே வடக்கே ஆள்கிறது. ஹிந்தியைத் திணிக்கவும் ஆளவும் அவர்கள் முயன்றாலும், இயல்பாக தமிழ்ச் சொல்லே தில்லியின் பெயரில் ஆள்கிறது என்று எண்ணி நாம் ஆறுதலும், பெருமிதமும் அடையலாம்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...