ஏப்ரல் 21, 2021, 4:05 மணி புதன்கிழமை
More

  பாரதியைப் புரிந்து கொள்ளுங்கள்!

  கெட்டிருந்த நாடுதன்னை ஒட்டவைக்க ஒருகுழந்தை எட்டயத்து புரமதனிற் பூத்து வந்தது - அதன் கட்டளைக்கு எட்டுதிக்கும் காத்தி ருந்தது.

  bharathiar
  bharathiar

  கெட்டிருந்த நாடுதன்னை ஒட்டவைக்க ஒருகுழந்தை
  எட்டயத்து புரமதனிற் பூத்து வந்தது – அதன்
  கட்டளைக்கு எட்டுதிக்கும் காத்தி ருந்தது.

  பாரதத்து மீதுதோன்றிப் பாரனைத்தும் ஆள்வதற்கு
  வீரமோடு நல்லறிவும் தாங்கி வந்தது – அது
  பாரதியின் கருணைபெற்று ஓங்கி வந்தது.

  சுப்பையா என்னுமவன் செப்புமொழி கேட்டுவிட்டு
  மெய்ப்புலவர் பாரதியாம் பட்ட மளித்தார் – அவன்
  துப்பியசொற் கேட்டுபிறர் தொப்பை இளைத்தார்.

  பிறப்புமுதல் துலங்கிநின்ற அறிவுகண்டு அனைவருமே
  சிறப்புடனே வாழ்கவென்று ஆசிபுகன்றார் – அவன்
  இறவாப்புகழ் அடைவனென்று பேசி மகிழ்ந்தார்.

  கம்பனுக்குப் பின்னாலே அம்புவியை ஆளவந்த
  உம்பர்குலக் கவிவேந்தன் பாரதி தானே? – அவன்
  வெம்பிநின்ற தமிழ்க்கொடியைத் தழைக்கவைத் தானே.

  உலகத்தில் மிளிர்கின்ற பலமொழியும், இலக்கியமும்,
  பலகலையும் ஆய்ந்தறிந்த அறிஞன் தானே – அவன்
  தலையெனவே கொண்டதுநம் தமிழினைத் தானே.

  சொந்தமொழித் திருநிலமாம் செந்தமிழை வாழவைக்க
  முந்திவந்த சிந்துபொழிக் கவிதை மேகம் – அவன்
  சந்ததமும் போதையூட்டும் காதல் ராகம்.

  பூச்சிதறும் வண்ணமொழிப் பேச்சொன்றே இனிதென்று
  மூச்செல்லாம் தமிழாகும் மேன்மை கண்டான் – உயிர்க்
  கூச்செறியக் கவிபாடும் பான்மை கொண்டான்.

  தொட்டணைத்த வறுமையிலும் திட்டமுடன் கவிபாடிக்
  கிட்டவந்த காலனையே எட்டி உதைத்தான் – அவன்
  கட்டறுந்த கயமைகளைச் சுட்டு வதைத்தான்.

  நீதியினை நெஞ்சிலேற்றி நாதவழும் கவிதையினால்
  சாதியினைச் சாக்கடையில் சரிய வைத்தவன் – விழிச்
  சோதியிலே தீமைகளை எரிய வைத்தவன்.

  பூமியெங்கும் சூழ்ந்துநின்ற தோமிருளை நீக்குதற்குத்
  தீமுகத்துச் சூரியனாய் ஒளியை வீசினான் – அவன்
  பாமரரும் வீறுகொள்ளக் கவிதை பேசினான்.

  படுதளைகள் அறுந்துகெட விடுதலையைக் காணுதற்குச்
  சுடுங்கனலாற் சொற்கருவி தீட்டி வைத்தவன் – அவன்
  விடுங்கணையாற் பகையுயிரை வாட்டி நைத்தவன்.

  பாடுகின்ற திறங்கேட்டு ஆடிநின்ற வெள்ளையரை
  ஓடுஎன்று விரட்டிவந்த ஒற்றை வேங்கை – அவன்
  பாடமதன் வெறியேறிப் பேசும் மூங்கை.

  எங்கெங்கும் சக்திகண்டு அங்கவளின் பக்திகொண்டு
  மங்காத மணிக்கவிதை நூறு படைத்தான் – அவன்
  பொங்கிவரும் கங்கையெனச் சாறு வடித்தான்.

  உண்மையான கடவுளென்று கண்ணனையே எண்ணிநின்று
  பண்பலவும் பாடிவைத்து ஏற்றிய பித்தன் – அவன்
  பெண்மையதன் பெருமையினைப் போற்றிய வித்தன்.

  நிலமெங்கும் மனிதனவன் குலமொன்றே என்றறைந்து
  நலம்வாழும் நெறிகாட்டி நடந்த தலைவன் – வாழ்வின்
  இலக்கணத்தை நிலைநாட்டப் பிறந்த புலவன்.

  பாப்பாவை அருகழைத்துப் பாப்புனைந்து நீதிசொன்ன
  தூப்புமிகு தெய்வீகக் கவிதை அரசன் – அவன்
  மூப்பின்றி முழங்குகின்ற புதுமை முரசம்.

  தீஞ்சுவைசேர் காப்பியமாம் பாஞ்சாலி சபதமதில்
  வான்சிவக்கும் தேசபக்திக் கனலும் வைத்தான் – குளிர்
  பூஞ்சுனைபோல் வேதாந்தப் புனலும் வைத்தான்.

  குயிற்பாட்டில் உடல்வாட்டும் உயிரோட்டக் காதலினை
  உயர்வாக்கி உள்ளார்ந்த தத்துவம் செய்தான் – தமிழ்ப்
  பெயரோங்கத் தரணியெலாம் சொற்றவம் செய்தான்.

  பார்வணங்கும் மாகவியின் கீர்த்தியினை இன்றுஇங்கு
  யார்யாரோ மேடையேறிப் பாடு கிறாரே? – அவர்
  பேர்பேராய்ப் பதிப்புரைகள் போடு கிறாரே?

  நேற்றுவரை பாரதியைத் தூற்றியவர் ஒன்றுகூடிப்
  போற்றவந்த காரணந்தான் என்ன, என்ன? – அவர்
  மாற்றுமனம் கொண்டது’தான்’ மின்ன, மின்ன.

  தீச்சுடர்போல் துலங்குமொழி வீச்சுதரும் பாரதிதான்
  பேச்சுடனே போவதற்கா கவிதை இசைத்தான்? – மேற்
  பூச்சுக்கா தமிழ்த்தாயின் உயர்வை நசைத்தான்?

  காசுக்காய்ப் பாரதியைப் பேசிவிட்டுப் பறந்துவிடும்
  வேஷதாரிப் பறவைகளே, கொஞ்சம் நிற்பீர்! – நன்கு
  யோசித்து அவன்வழியில் நடக்கக் கற்பீர்!

  இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாள்: 11-10-1982.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »