—ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
ஆம்!!
எனதருமை தாய்மொழிக்கு ஈடில்லை!!
தனித்துவமான ‘ழகரத்தை’
தரணிக்களித்த மாத்தமிழ்!!
இயல்-இசை- நாடகமென முத்தாய்
மகிழ்விக்கும் மாத்தமிழ்!!
தன் மடியில் பிறந்தோர்க்கும்
தன்னை நம்பி வந்தோர்க்கும்
ஆதரவாய் அணைத்தும்
வாழ்வியலுக்கு வழிகாட்டும்
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
இலக்கியங்களின் பொக்கிஷமாகவும்,
இணையில்லா
இலக்கணத்தையும்
கொண்ட மாத்தமிழ்!!
பக்தி இலக்கியங்களையும்,
பகுத்தறிவு இலக்கியங்களையும்
தனதாக்கிய மாத்தமிழ்!!
மெஞ்ஞானத்தின்
விஞ்ஞானத்தின்
சவால்களுக்கு விடையளிக்கும்
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
எவரும் எனது உறவினரே,
எந்நகரமும் எனது நகரமே
எனப்பல உரைக்கும்
மூத்தமொழி மாத்தமிழ்!!
ஆராய்ச்சியாளருக்கு ஒர் அட்சயப் பாத்திரமாம்;
அகழ்வாராய்ச்சியாளருக்கு ஓர்
அமிர்த கலசமாம்;
படித்தோனுக்கு ஒர்
பன்முகத்தன்மையுடைய தோழியாம்;
பாமரனுக்கோ ஓர்
பரம தோழியாம்;
கவிஞனுக்கோ ஓர்
இளம் காதலியாம்;
கலைஞனுக்கோ ஓர்
வளமான காமதேனுவாம்;
புரட்சியாளனுக்கு ஓர்
வீர மங்கையாம்.
இத்துணைப் பெருமை
இருப்பினும்
‘இம்மியளவு’ செருக்கற்ற
மாத்தமிழ்க்கு ஈடில்லை!!
மூத்த மொழியானாலும்
இள(ம்) மனதுடன்
புதுமையையும் பாராட்டும்
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
பாரம்பரத்திற்கும் புதுமைக்கும்
பாலமாய் இருக்கும்
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
வையம் முழுவதும்
தன் மக்களை
நிலைநிறுத்தி
தன் வட்டத்தின் விட்டத்தை
பரப்பும் மாத்தமிழுக்கு ஈடில்லை!!
மாத்தமிழின் மக்களுக்கு
மாதவமாம் மனஉறுதியை
மகிழ்வுடன் அளிக்கும்
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
ஆம்!!
எனதருமை தாய்மொழிக்கு ஈடில்லை!!