நான் தான் காலம் பேசுகிறேன்..! தொலைக்காட்சித் தொடரில் தொலைதூரத்தில் இருந்து சுழலும் காலச் சக்கரம் …. காதுக்குள் சக்கரம்போல் இடதும் வலதுமாய் சுழன்று சுழன்று ஒலித்துக் கொண்டே இருந்தது..! காலம்… என்னுள்தான் எத்தனை தூரம் பேசிவிட்டது? கண்ணிமைக்கும் நொடிப்பொழுதாய் எத்தனை வருடம் கடத்தி வந்தேன்! ஆனால்… வருடம் மூன்று கடப்பதற்குள்… யுகம் மூன்று முடிந்து கலியில் கால் வைத்ததாய் அப்படியொரு தகிப்பு! மனத்தில் பரிதவிப்பு! இந்த யுக சஞ்சாரத்தில் இருந்ததுபோல் யுவ சஞ்சாரத்தில் இருந்ததில்லை! காலம்… நம்முள்தான் எத்தனை தூரம் பேசிவிட்டது? உன்மீதான எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போன போது… அழுத்தமாய்த்தான் நீ இருந்தாய்! அழுதுக் களைத்ததோ என் உள்ளம்! உனக்கே உனக்காய் என் நேரக் கதவுகளை திறந்தே வைத்திருந்தேன்! வசந்தமும் வரவில்லை… வாசமும் வரவில்லை! காலம்… உன்மூலம் எத்தனை தூரம் பேசிவிட்டது..? உன் ஒருத்தியின் சிநேகத்துக்காய் உருக்குலைந்ததில் எத்தனை பகைகள் எனக்கு?! உன் சிநேகம்தான் பூக்கவில்லை போகட்டும்… எனக்குப் பகையான நட்புகளும் உன்னால் உருக்குலைத்துச் சென்ற சோகம்! காலம்… இப்போதும் பேசுகிறது… தகுதி அறிந்து நட்பு கொள்! தகுதி அறிந்து அன்பு செய்! தகுதி அறிந்து தன்னைக் கொடு! அறியாது போனது என் தவறு! தகுதியற்ற காதல் செடியை தண்ணீர் விட்டு அல்ல… கண்ணீரால் வளர்த்ததில் பட்டுப் போனது பூ மட்டுமல்ல… செடியும்தான்! காலம்… இப்போதும் கதைக்கிறது என்னுள்… உன்னையே சுமந்து உன்னையே என்னில் இருக்க வைத்து… உன்னைக் காதலிப்பதாய் என்னை நானே காதலித்து…. அலுப்புத் தட்டுகிறது எனக்கு! போதும்…! காதல் ஒரு வேடம் என்றான பின் நாடகத்தின் முடிவில் கலைப்பதுதானே முறை? இதோ… காலம் பேசுகிறது… காதலுக்கு நிறுத்தல் குறியிட்டு!
காதலுக்கு நிறுத்தல் குறி!
Popular Categories