இந்த வருடம்… மிக முக்கியமான வருடம்.. செப்டம்பர் 11 – சுவாமிஜி சிகாகோவில் ‘சகோதர சகோதரிகளே’ என இந்திய மண்ணின் மரபுத் தத்துவத்தை முழங்கியதன் 125ஆம் ஆண்டு! இதற்காக ஒரு கவிதை எழுதித் தரக் கேட்டிருந்தார் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஸ்வாமி அபவர்காநந்தர். இந்த மாத இதழில் வெளியிட்டு அடியேனுக்கு கவிதை ஊக்கம் அளித்திருக்கிறார்.
பொதுவாக நான் கவிதை என எண்ணிக் கொண்டு எழுதுவதை விட்டு ஆண்டுகள் பலவாயிற்று! இடையில் நம் நண்பர் ‘வானரப்படை’ படத்தின் இயக்குனர் ஜெயப்ரதீப் M Jaya Pradeep சினிமாவுக்குப் பாட்டெழுதும் ஒரு முயற்சியை மேற்கொள்ள ஆசையைத் தூண்டிவிட்டார்.
அவர் மிகச் சிறந்த சிவ பக்தர். சினிமாக் காரர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தார். அவர் அலுவலகம் நுழைந்ததும் கண்ணில் பட்ட அந்த சிவலிங்க ஸ்வரூபமும் அனுமன் திருவுருவும் இன்றும் கண்களிலேயே பதிந்திருக்கின்றன… எனக்கு சினிமா என்றதும் அலர்ஜியாயிருந்தது.
அட.. நீங்க வேற…! சிவபெருமான் பற்றின பாட்டுதான்… எழுதிக் கொடுங்க என்றார். டியூனைக் கொடுத்தார். செல்போனில் கேட்டுக் கேட்டு அப்படியே பதிந்து விட்டது மனசில்.அருமையான டியூன். படம் வெளியாகும் போது, அந்த டியூன் நிச்சயம் ஹைலைட்டாகும் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
தொடர்ந்து நானும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு ரேஞ்சுக்கு யோசித்துப் பார்த்து எழுதினேன். ரெண்டு மூணு பல்லவி, சரணம்லாம் எழுதிப் பார்த்தும் எனக்கே திருப்தியில்லை…! அதனால் அந்த சினிமா பாடலாசிரியர் – என்ற பெயருக்கு ஒரு , வைத்து விட்டேன்.
இப்போது சுவாமிஜிக்காக ஒரு கவிப் பாடல் முயற்சி!
சத்திய முழக்கம்!
செப்டம்பர் பதினொன்றென்றால் செகத்துக்கும் நினைவிருக்கு
செம்மாந்தர் நாமெல்லாம் சிறிதேனும் மறப்போமோ?
சிக்காத தத்துவத்தை சிக்கவைத்த நாயகரின்
சிக்காகோ முழக்கத்து சிறப்பான ஆண்டிதுவே!
சிக்காக் கோவில் சமயத்தின் சாரத்தை
சிறப்பாய் முழங்கிடவே சிந்திக்க வைத்தவர்தாம்!
சர்வசமயப் பேரவையில் சகோதரம் பேசிநின்றார்
சனங்களின் மனங்களிலே சிம்மாசனம் இட்டமர்ந்தார்!
பாரதத்தின் பெருமையை பாரெல்லாம் பறைசாற்ற
பாண்டியமண் அனுப்பிவைத்த வங்கத்தின் வான்முகில்!
நரர்களில் இந்திரனாய் நற்பெயர் கொண்டிருந்தார்
நம்மாந்தர் மட்டுமல்ல நாற்திசையும் நலமாச்சு!
விவேகத்தின் இருப்பிடமாய் உலகத்தில் காட்டியவர்
ஆனந்த சாரத்தை அலுக்காமல் உபதேசித்தார்!
ஆன்மாவை உணர்ந்தால் சமயத்தை உணரலாம்
சமயத்தின் ஆன்மாவை உணரவைத்தார் சுவாமிஜி
தோன்றுகின்ற ஓடையெலாம் சாகரத்தில் சங்கமிக்கும்
பேணுகின்ற மதங்களுமே பேரிறையில் போய்ச்சேரும்!
என்னைஎண்ணி எந்தவழியில் எவர்வந்தாலும் ஏற்கின்றேன்
எந்தவழியில் வந்தாலும் என்னையேதான் அடைந்திடுவார்
கீதையின் தத்துவத்தைக் கணீர்க்குரலால் காட்டிநின்றார்
பாதையின் மகத்துவத்தை பாரிலுள்ளோர் புரிந்துகொண்டார்
பிரிவினைவாதமும் மதவெறியும் அழகியஉலகை உருக்குலைக்கும்
சரிவினைத்தடுத்து சீர்செய்தால் சனங்களும்சுகமாய் வாழ்ந்திருக்கும்!
சத்தியத்தின் தத்துவத்தை சந்தனத்தின் நறுமணத்தை
சிந்திக்க வைத்ததுதானிந்த சிக்காகோ முதல்முழக்கம்!
~ செங்கோட்டை ஸ்ரீராம்
(செப்டம்பர் 2018 இதழில் வெளிவந்த கவிதை)




