லிங்க வடிவ விநாயகர்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமம் நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி பிள்ளையார்).
வரலாறு:
ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி, சோறு பொங்கி சாப்பிட சேகரித்த நெல்மணிகளை குத்தி அரிசியாக்க கல் தேடிய போது ஒரு கல் யானைத் தலை போன்று இருக்க, இது உதவாது என ஓரமாய் வைத்துவிட்டு வேறு கல் தேடிப் போனார்கள்.
வேறு கல்லைத் தேடி எடுத்து வந்தபோது யானைக்கல் அருகே இருந்த நெல்லெல்லாம் அரிசியாகி இருந்தது! சிறுவர்களுக்கு வியப்பு. நெல் எப்படி அரிசியானது? இந்த அதிசயக் கல் செய்த வேலைதான் இது என உணர்ந்து அந்தக் கல்லை ஒரு இடத்தில் மறைத்து வைத்தார்கள்.
ஆனால் மறுநாள் அவர்கள் மறைத்து வைத்த இடத்தில் கல் இல்லை. தேடியபோது அருகில் இருந்த குளத்திலிருந்து நீர்க்குமிழ்கள் எழுந்தன. பளிச்சென்று குளத்தில் பாய்ந்து, மூழ்கி கல்லை மீட்டெடுத்து, ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போடுகிறார்கள்.
இதே காலகட்டத்தில் வயலில் நெற்கதிர்கள் திருடு போக, ஊர்ப் பெரியவர்களின் விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பிடிபட்டார்கள்.
இந்த விசாரணையில் தங்களுக்கு கிடைத்த இரண்டு கல் பற்றி சொல்ல, ‘நெல்குத்தி அதிசயக் கல்’ விவரமும் தெரியவந்தது.
அந்த இரண்டு கற்களையும் ஊர்ப் பெரியவர் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.
அன்று இரவு அவர் கனவில் தோன்றிய கணநாதன், ‘‘தான் விநாயகர் என்றும் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட, குலம் காப்பேன் என்றும் கூறி, தன்னோடு கிடைத்த இன்னொரு கல்லையும் கருவறையில் வைக்க வேண்டும் என்றும் தான் வளர வளர அது தேயும்’’ என்றும் கூறி அருளினார்.
மறுநாள் கனவை ஊராரோடு பகிர்ந்து கொண்ட பெரியவர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து குடமுழக்கும் செய்தார். அன்று முதல் இவர் “நெற்குத்தி விநாயகர்” என் அழைக்கப்பட்டார்.
இவரை “பொய்யாமொழி பிள்ளையார்” என்றும் போற்று கிறார்கள்.
-திருநெல்வேலிக்காரன்.





