எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என எவர் தரப்பில் சமாதான தூது அனுப்பினாலும், எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக.,வுக்கு சரியான கவர்ச்சிகரமான தலைவர் மாட்டவில்லை. எம்.ஜி.ஆர்., என்ற சினிமாக் கவர்ச்சியில் மக்கள் சேர்ந்தாலும், மக்களைத் தன் பக்கம் வைத்துக் கொண்ட கெட்டிக்காரத்தனத்தை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார். அது போல் எம்.ஜி.ஆர்.க்குப் பின்னர் ஜெயலலிதாவும் சினிமா கவர்ச்சியில், அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார்.
அதிமுக.,வில் இவர்களை விட்டால் வேறு எந்த சினிமா கவர்ச்சியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற பெயர்களையே சொல்லிக் கொண்டு கட்சியை நடத்தும் நிலைக்கு அதிமுக., தள்ளப் பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தா காலத்தில் இருந்தே எந்த தலைவரும் உருப்படியாக உருவாகவில்லை.
சினிமா கவர்ச்சியும் இல்லாமல், குண்டர்கள், கொள்ளையர்கள் என்ற இமேஜுடன் மட்டுமே இருந்ததால், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரால் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போய்விட்டது. தற்போது, மக்களின் செல்வாக்கோ, கவர்ச்சியோ இல்லாத நிலையில் ஓபிஎஸ்., ஈபிஎஸ் என இரண்டு பேர் முதல்வர்களாக பதவியைப் பிடித்தார்கள் என்றாலும், கட்சியினரிடையே கூட அவர்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அரசியல் கோமாளியாகவும் ஊழல் குடும்பத்தில் பிரதிநிதியாகவும் இமேஜ் பெற்றுள்ள டிடிவி தினகரன், தன் பக்கம் ஓபிஎஸ்., ஈபிஎஸ் தரப்பு வரும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
நேற்று செய்தியாளர்களை தினகரன் சந்தித்த போது ‘ எடப்பாடி தரப்பில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உங்களிடம் சமாதானம் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய தினகரன் “யாரும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்” என பதிலளித்தார்.
அதிமுக., கைக்கு கிடைக்காத விரக்தியில் அமமுக என கட்சி ஆரம்பித்து ஏதோ ஒரு தொகுதியில் பண மழை பொழிந்து, அந்தத் தொகுதியிலும் பலரின் அதிருப்தியைப் பெற்றுக் கொண்ட டிடிவி தினகரன், இன்னமும் ஓபிஎஸ்., ஈபிஎஸ் தன் பக்கம் வருவார்கள் என்று நப்பாசையுடன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.




