சென்னை அருகே கரை கடக்கிறது வர்தா புயல்!: மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து துண்டிப்பு

சென்னை:

சென்னை அருகே கரையை அடைந்தது வர்தா புயல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னையின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமானம், மற்றும் ரயில் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையைக் கடந்த பின்னர் தென் திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையைக் கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் குறைந்த பின்னரே மின்சாரம் வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இது போல், புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 52 இடங்களில் மரங்கள் விழுந்ததால் பல்வேறு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சென்னை சாந்தோம் முதல் தலைமைச்செயலகம் வரை 25 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் சாலையில் மரம் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வர்தா புயல் காரணமாக எண்ணூரில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து பல இடங்களில் மரம் விழுந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் காரணமாக காற்று மற்றும் கனமழையால் சென்னையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.