மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை, பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் மீண்டும் கைகோர்ப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 28-ந்தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை புதுச்சேரியில் நடத்துகிறோம். இதில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்._
ம.தி.மு.க. இதில் பங்கேற்கவில்லை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் இதுபற்றி வெளிப்படையாக பேசி இந்த முடிவெடுத்திருக்கிறோம். ம.தி.மு.க.வை புறக்கணிக்கவில்லை. மதிமுகவுக்கு அழைப்பு கொடுக்காமல் தவிர்க்கவில்லை.
வைகோவிடம், இது என்ன மாநாடு, என்ன தலைப்பு, என்ன பொருள் என்பதையெல்லாம் கலந்து பேசிய பிறகு ம.தி.மு.க. பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறது. கருப்பு பண நடவடிக்கையை ஆதரிக்கிறது. எனவே அதனை எதிர்த்து நடத்துகிற இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க வாய்ப்பில்லை என வெளிப்படையாக எங்களிடம் கூறினார். அப்படி ஒரு புரிதலுடன் தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதனால் மக்கள் நலக்கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. மக்கள் நலக்கூட்டணியில் ஒரே வரையறை தான். உடன்பாடுள்ள பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது, முரண்பாடான பிரச்சனைகளை பொது மேடை களில் விவாதிப்பதில்லை. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறோம். ஆகவே இந்த பிரச்சனையில் நாங்கள் 3 கட்சிகளும் எதிர்ப்பை முன்னெடுத்து செல்கிறோம். இந்த மாநாட்டில் ம.தி.மு.க. எங்களோடு பங்கேற்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை. பிரச்சனைகளின் அடிப்படையில் போராடுகிற போது அது மக்கள் நலக் கூட்டியக்கம். தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுகிற போது மக்கள் நலக் கூட்டணி. இப்படிப்பட்ட கூட்டியக்கம் அல்லது கூட்டணி என்பது எப்போதுமே நிரந்தரமாக இருக்க முடியாது.
பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் கைகோர்ப்போம். தேவைப்படும் போது அதற்கான சூழல் உருவாகிற போது மறுபடியும் நால்வரும் ஒரே மேடையில் தோன்றுவோம் எனக் கூறினார்.



