சென்னை:
கோவில்கள் பராமரிப்பு தொடர்பாக நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தேவையில்லை எனக்கூறியதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளாக, அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, இன்று நீதிபதிகள் முன் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் புராதன சின்னங்களை சீரமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. மேலும், கோவில்கள் சீரமைப்பு பணிக்கு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி, 13 கோவில்களின் இணை ஆணையர்கள் சார்பில் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு கோவில்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்க புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன் விசாரனைக்கு வந்தது. அப்போது, அறநிலையதுறை ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛நீதிமன்றத்தின் நிபுணர் குழு தேவையற்றது’ என, குறிப்பிட்டப்பட்டு இருந்தது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆணையர், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, அறநிலையத்துறை ஆணயைர் வீரசண்முகமணி, நீதிபதிகள் முன், இன்று ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.



