
மெட்ரோ ரயில்களில் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கம், கலை மற்றும் கண்காட்சிகள், உணவு திருவிழாக்கள், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால், அலுவலக நாட்களில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக ஒரு லட்சமாக இருந்தது. ஆனால், விடுமுறை நாட்களில் 50 சதவீதம், பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்தது.
இதற்கிடையே, ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணம் குறைப்பு என தீபாவளி பண்டிகையின்போது மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ”ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை திட்டம் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அலுவலக நாட்களில் தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகபட்சமாக 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தமிழக அரசு இதுபோன்ற தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
மற்றொருபுறம் மாநகரங்களில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவாக்க மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னையில் பயணிகள் காற்று மாசற்ற பயணத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில்களை பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் விரைவாக பயணம் செய்ய சென்னை மக்கள் மெட்ரோ ரயில் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.