ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை நெல்லை
nellaiyappar temple arudhra - 2026
தாமிரசபையான நெல்லையப்பர் கோயிலில்…

மார்கழி மாதத்தின் மிக முக்கியத் திருவிழாவான ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் பல்வேறு சிவாலயங்களிலும் தொடங்கியது.

சைவர்களுக்கு பெரிய கோயில் என்று அழைக்கப் படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில், ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 9 ஆம் தேதி தேரோட்டமும், 10ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடை பெற உள்ளது.

தென் தமிழகத்தின் முக்கியத் தலமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்திற்குப் பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன நிகழ்வு வரும் 10-ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில், இம்மாதம் 4-ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வருவர்.

இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதி முன் இன்று முதல் 10-ஆம் தேதி வரை பத்து தினங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது.

வரும் 9-ஆம் தேதி தாமிரசபையில் நடராஜப் பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறுகிறது. வரும் 10-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடராஜர் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

courtallam chitirasabai - 2026
சித்திர சபை எனப்படும் திருக்குற்றாலம் கோயிலில்

சிவபெருமான் திருத்தாண்டவமாடும் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்திருக்கும் குற்றாலம், அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

“காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.