
தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வி நிறுவன வளாகங்களிலோ, பொது இடங்களிலோ மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் வாராகி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்… பருவத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தால் அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்…
அரசியல் கட்சியினரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்கலை விதிகளுக்கு முரணாக செயல்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.. இதுபோன்ற போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள், மௌனப் பார்வையாளர்களாக வேடிக்கை பார்க்கின்றனர்.
தங்கள் குறைகளை ஒன்று கூடி தெரிவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்திருந்தாலும், அது மற்ற அப்பாவி மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கக் கூடாது என வாராகி அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மார்ச் 2ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கும், தமிழக டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டது.